“தரையிலே தவழ்கின்ற நமது ஈரல் குலைகள் குழந்தைகள்” என்பது 14 நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஓர் அரபுக் கவிதையின் வரி.

“பெறுமவற்றுள் யாமறிவ தில்லை ; அறிவறிந்த
  மக்கட்பேறு அல்ல பிற”

(பெற வேண்டிய பேறுகளிலேயே பெரும் பேறு, அறிவைத் தேடி அறிகின்ற குழந்தைகள்தாம்) என்கிறார் நமது வள்ளுவர். மக்கட் பேறு என்ற அதிகாரத்தின் ஒவ்வொரு குறளும், நினைந்து, நெகிழ்ந்து, மகிழ்ந்து இன்புறத்தக்கவையே.

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் இராணுவப் பள்ளி மீது, பயங்கரவாதிகள் 16.12.2014 அன்று கொடூரத் தாக்குதல் நடத்திக் குழந்தைகளைக் கொன்று குவித்திருப்பது, உதிரத்தை உறைய வைக்கும், உக்கிரமான சோகத்தையும், அதிர்ச்சியையும் தந்தது.

உலகின் எந்த மூலையில் குழந்தைகள் மீது கொடிய வன்முறைகள் ஏவப்பட்டாலும், நல்லுள்ளங்கள் துடிதுடிப்பதும், பரிதவிப்பதும் இயற்கையானது.

குழந்தைகளை சாதி, மத, இன, மொழி, தேசம் என எந்த அடையாளங்களுக்குள்ளும் அடக்கி விட முடியாது. குழந்தைகளின் உலகம் மிக உன்னதமானது. கவித்துவமானது. குழந்தைகளுக்காகத் துடிக்கின்ற உள்ளங்களும் அப்படியே! சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவை. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உணர்வுக்கு உயிர்ப்பளிப்பவை.

பயங்கரவாதம் எப்போதும் ஏனோ குழந்தைகளையே குறிவைக்கிறது. குழந்தைகள் மீது பயங்கரவாதிகள் நடத்தும் அருவெறுக்கத்தக்க அக்கிரமங்களுக்கு, காரணங்களும், நியாயங்களும் கற்பிக்கப்படுவது அதைவிடக் கொடுமையானது.

குழந்தைகளைக் கொல்கிற கொடியவர்களுக்கு, மதத்தையோ அல்லது அரசியல் கோட்பாட்டையோ முன்னிறுத்த, அணுவளவும் அதிகாரம் இல்லை

பயங்கரவாத சம்பவங்களில் முஸ்லிம் பெயர் தாங்கிகள்(?) யாரேனும் ஈடுபட்டிருந்தால் உடனே அவர்களையும், இஸ்லாமியக் கோட்பாடுகளையும் தொடர்பு படுத்தி, செய்திகளை விதைப்பதும், விவாதங்களை வளர்ப்பதும் சர்வதேச அளவில் அரங்கேறி வருகிற ஊடகச் சதியாகும்.

பாலகன் பாலச்சந்திரனைப் பாவிகள் படுகொலை செய்த காட்சி நம்மையெல்லாம் பதற வைத்தது. துடி துடிக்க வைத்தது.

அதற்குப் பழிவாங்குவதற்காக, ராஜபட்சேயின் பிள்ளையையோ, அல்லது பேரப்பிள்ளையையோ அதேபோல கொல்ல வேண்டும் என்று எந்தத் தமிழனும் நினைத்திட மாட்டான்.

ஈழத்தில் செஞ்சோலை சிறார் பள்ளியில், கொத்தணி குண்டுகளை வீசிய சிங்கள ராணுவ பயங்கரவாதம் மாற்றுத் திறனாளிகளாய் இருந்த மழலைப் பூக்களையும் மனசாட்சி இல்லாமல் பொசுக்கியது.

“போராளிகள் அங்கே பதுங்கியிருப்பதால்தான் தாக்கினோம்” என்று பதறாமல் பதிலளித்தார்கள்.

பெஷாவரில் ராணுவப் பள்ளியில் படித்த குழந்தைகளைக் கொன்ற கொடியவர்களும், எங்களின் வலியை, பாகிஸ்தான் ராணுவத்திற்கு உணர்த்தவே இந்தத் தாக்குதல் என்று இழிவான விளக்கத்தைக் கூறுகிறார்கள்.

இலட்சக் கணக்கான குழந்தைகளை ஈராக்கில் கொன்று குவித்த அமெரிக்கா, ஜனநாயகத்தை வாழவைக்கவே அந்தப் போரை நடத்தியதாகக் கூறியது-. ஆப்கானிஸ்தானையே தரைமட்டமாக்கிவிட்டு, ஒசாமாவைப் பிடிக்கவே இந்தத் தாக்குதல் என்றது.

பெஷாவரில் நடந்துள்ளப் பேரழிவுக்குக் காரணமான பயங்கரவாதிகளுக்கு இஸ்லாமிய முத்திரைக் குத்துவதில் பல ஏகாதிபத்திய ஊடகங்கள் பெரும் முனைப்புக் காட்டுகின்றன. பயங்கரவாதிகள் இஸ்லாத்தின் தீவிர மதப்பற்றாளர்கள் என்கிறார்கள். சரி, யாரை அவர்கள் தாக்கினார்கள்? இஸ்லாமியக் குடியரசு என தன்னைச் சொல்லிக் கொள்ளும் பாகிஸ்தானின் ராணுவப் பள்ளியைத்தானே தாக்கினார்கள். முஸ்லிம்களைக் கொன்று குவிப்பவர்கள் முஸ்லிம் தீவிரவாதியா? பயங்கரவாதிகளுக்கு எந்த மதமுமில்லை, கொள்கையுமில்லை.

போர்க்களத்தில் கூட, பெண்களை, முதியவர்களை, குழந்தைகளை, போரில் ஈடுபடாத பொதுமக்களை, பிற சமயப் பெரியவர்களைக் கொல்வதற்கு இஸ்லாம் மார்க்கம் தடை விதித்துள்ளது. வெற்றி கொண்ட நாட்டின் வயல்களை அழிப்பது, மரங்களை வெட்டுவது, நீர்நிலைகளை சீரழிப்பது, பெண்களை மானபங்கம் செய்வது போன்றவையும், நபிகள் நாயகம் தடை செய்த கடுங்குற்றங்களாகும்.

peshawar black day 600

குழந்தைகள் மீது நபிகள் நாயகம் கொண்டிருந்த அன்பும், அக்கறையும் மிக அலாதியானது.

“குழந்தைகள் மீது அன்பும், பெரியவர்கள் மீது மரியாதையும் காட்டாதவர்கள் என்னைச் சேர்ந்தாரில்லை” என்றார்கள். நபிகள் நாயகம் ஒரு குழந்தையை முத்தமிட்டபோது, அருகில் இருந்த நபித் தோழர் ஒருவர், “எனக்குப் பத்துக் குழந்தைகள். ஆனால் யாரையும் முத்தமிட்டதே இல்லை” என்கிறார். அதற்கு நபிகள், “உன் மனத்திலிருந்து இறைவன் அருளை அகற்றிவிட்டான் என்றால் என்ன செய்வது?” என்றார்கள்.

வழங்கும்போது வலஞ்சுழியாக வழங்குவது நபிகளின் இயல்பு. சபையில், ஒரு பாத்திரம் நிறைய பால் அன்பளிப்பாக வருகிறது. நபிகளின் வலப்புறம் அனஸ் என்ற சிறுவனும், இடதுபு-றம் அபூபக்கர் என்ற முக்கியமான தோழரும் உள்ளனர். நபிகள் நாயகம் சிறுவர் அனஸிடம், “பாலை முதலில் பெரியவர்களுக்குக் கொடுக்கலாமா?” என்று அனுமதி கேட்கிறார். சிறுவனோ, “என் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது” என்று தன் உரிமையை நிலை நாட்டுகிறார்.

தெருவில் நபிகள் நாயகம் செல்லும்போது, குழந்தைகள் மீது பேரன்பு காட்டுவார்கள். அவர்கள் கைப்பிடித்து நடப்பார்கள் என ஏராளமான செய்திகளை வரலாற்றில் காணமுடிகிறது-. நபிகள் நாயகத்திடம் சிறுவயது முதலே உதவியாளராக இருந்தவர் ஒரு யூதர். நபிகள் மீது மிக உரிமை பாராட்டுபவர். விரும்பிய நேரத்தில் நபிகளைச் சந்திக்கும் சுதந்திரம் உடையவர்.

அவரை இஸ்லாம் மார்க்கத்தில் சேர்ந்தாக வேண்டும் என்று நபிகள் நாயகம் கட்டாயப்படுத்தவில்லை. அவ்வளவு ஏன், தன்னை வளர்த்து, ஆளாக்கிய பெரிய தந்தையார், அபூதாலியைக் கூட, நபிகள் நாயகம் இஸ்லாமில் இணையுமாறு நெருக்கடிகள் தரவில்லை. அவரும் கடைசிவரை இஸ்லாத்தில் இணையவில்லை. ஆனால், நபிகள் மீது அளவற்றப் பாசம் வைத்திருந்தார்.

நபிகளின் உதவியாளரான யூத இளைஞர் நோய் வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் இருக்கும் நிலையில், நபிகள் நாயகம் இஸ்லாமில் இணைய வேண்டுகோள் வைக்கிறார். யூத இளைஞர் தன் தந்தையின் முகத்தைப் பார்க்கிறார். அவரோ, “அபுல்காசிம் (நபிகளின் மற்றொரு பெயர்) சொல்வது போலச் செய்” என்று மகனிடம் சொல்ல, மரணத் தறுவாயில்தான் அவர் இஸ்லாமில் இணைகிறார்.

பெஷாவர் பள்ளியில் பயின்ற பெரும்பான்மையான பிள்ளைகள், கிறிஸ்தவர்கள். அதனால்தான் முஸ்லிம் பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். பிற மதத்தினரைக் கொல்வது குற்றமில்லை என்பதுதான் இஸ்லாமின் கொள்கை” எனக் கொடுமையாக எழுதியுள்ளது ஒரு இணையத்தளம் (புதிய அடையாளம்).

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பாலகர்களை, கும்பகோணத்தில் எரிந்த குழந்தைகளாகவே காண்கிறோம். ஈழத்து செஞ்சோலையில் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டக் குழந்தைகளின் பிரதிநிதிகளாகவே பெஷாவரில் இறந்த பிள்ளைகளையும் பார்க்கிறோம்....

தேசங்களுக்கு எல்லை இருக்கலாம், சோகங்களுக்கு எல்லைக் கோடுகள் ஏது....?

மாநிலச்  செயலாளர்,  தமுமுக.