தொகுதி உடன்பாடுகளில் கொஞ்சம் இழுபறியிருந்தாலும் இணைந்த கட்சிகளுக்கு உரிய இடங்களைக் கொடுத்துக் களத்தில் குதித்திருக்கும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி

‘இருநூற்றி முப்பத்து நான்கு தொகுதிகளிலும் இரட்டை இலை தான் சின்னம். யாருடனும் கூட்டணி இல்லை. தனித்தே போட்டி’ என்று பாவலா காட்டினாலும் ஒரு சில கட்சிகளுக்கு ஒன்றிரண்டு இறைச்சித் துண்டு (சீட்டு)களைக் கொடுத்திருக்கும் அதிமுக

‘பெரியார் மண்ணில் மதவாதத்துக்கு இடமில்லை’ என்கிற படிப்பினையை மீண்டும் பெற்றதால் தனித்தே போட்டியிடும் பா.ஜ.க 

“அடுத்த முதல்வர் - அதுவும் இளைய முதல்வர் நான்தான். நான் முதல்வரானதும் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கு சட்டத்துக்கே” என்று பேனாவும் கையுமாய் நடந்து கொண்டே பிரச்சாரம் செய்கின்ற அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவித்துக் களமிறங்கும் பா.ம.க &

முதலில் ஐவர் கூட்டணி, பின் நால்வர் கூட்டணி, அதற்கு பிறகு மக்கள் நலக் கூட்டணி, அதற்கும் பிறகு மக்கள் நல விஜயகாந்த் அணி, அதற்..கும்... பிறகு, கேப்டன் அணி என்றால் தான் கிராமத்து மக்களுக்கும் புரியும் என்ற பிரேமலதா பிரகடனத்தையடுத்து விஜயகாந்த் அணி &

“கலைஞர் உட்பட தமிழரல்லாத யாரும் தமிழ்நாட்டின் முதல்வராகக்கூடாது. நான்தான் பச்சைத் தமிழன். இதற்கு என் முப்பாட்டன் முருகனே சாட்சி. எனவே என்னை முதல்வராக்க, தமிழ்நாட்டில் இருக்கிற தமிழரல்லாதவர்களும் கூட எங்கள் கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும்” என்று தமாஷ் பண்ணுகிற சீமானின் நாம் தமிழர் கட்சி 

இவை தவிர தனித்தோ, சுயேச்சையாகவோ பினாமியாகவோ சிலபல கட்சிகள் போட்டியிடுகிற தமிழகத் தேர்தல்  வரும் மே 16&ம் நாள் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில்

நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரம், பொதுக் கூட்டங்களுக்கு நாற்பது & ஐம்பது பேர். வேட்பாளர்களுக்கு அவர்களின் உறவினர்களின் ஓட்டுக்களாவது விழும். சீமானுக்கு மாமனார் வீட்டு ஓட்டுகள் கூட விழாது. கட்சி டெபாசிட் இழக்கும் என்பது உறுதி.

வன்னியர் ஓட்டுகள், பெரும்பாலும் அந்நியருக்கு போகாமல் அன்புமணிக்கே என்ற பா.ம.க.வின் கனவு நிறைவேற, வன்னிய ஓட்டுக்கள் மட்டும் போதுமானதல்லவே. எனவே அந்தக் கட்சி ஒரு சில இடங்களில் மட்டும் தன் இருப்பைக் காட்டிக் கொண்டு ஒதுங்கிப்போகும்.

பா.ஜ.க. திராவிட மண்ணில் வேரூன்றி விடக்கூடாது என்கிற மனோபாவம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் விரவிப் பரவித்தான் கிடக்கிறது. எனவே தனித்துப் போட்டியிடும் பா.ஜ.க.வு-ம் தோல்வியைத்தான் தழுவும்.

நால்வர் கூட்டணியாய் இருக்கிறவரை திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய அணி வரவேண்டும் என்று சொல்லும் சிலர், மக்கள் நலக் கூட்டணியை ஏற்கத் தயாராய் இருந்தார்கள். ஆனால் விஜயகாந்த், ஜி.கே.வாசன் அணிகள் இந்தக் கூட்டணிக்குள் நுழைந்த பிறகு, இது மக்கள் நலக் கூட்டணி அல்ல. அந்தந்த அணித் தலைவர்களின் சுயநலக்கூட்டணி என்பதை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.

புதிய வாக்காளர்களும் கூட எக்கச்சக்கமாய் உணர்ச்சிவசப்பட்டு எக்கி எக்கிப் பேசுகிற வைகோவின் பேச்சையும், என்ன பேசுகிறார் என்று புரியாமல் பேசும் விஜயகாந்தின் பேச்சையும் கேட்டு வெறுத்துப் போய்த் தம் எண்ணங்களை மாற்றி கொள்ளும் மனநிலைக்கே வந்துள்ளார்கள். தவிர இவர்களுக்கும் பதவி ஆசைதான் முதன்மையே தவிர மக்கள் நலன் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான் எனவும் புரிந்து கொண்டு விட்டார்கள். எனவே, ஒரு கோடி புதிய வாக்காளர்களின் ஓட்டும் ஒட்டு மொத்தமாய் தங்கள் அணிக்கே விழும் என்கிற மாயையில் இருக்கிற ம.ந.கூ.வும் மண்ணைக் கவ்வத்தான் போகிறது.

இப்போது ஆண்டு கொண்டிருக்கிற அ.தி.மு.கவின் கதியும் அதோகதிதான்.

உண்மையைச் சொன்னாலோ, எழுதினாலோ கஞ்சா கேஸிலோ வேறு எந்த கேஸிலுமோ உள்ளே தள்ளிவிடும் அம்மா ஆட்சிக்குப் பயந்தும், அரசு விளம்பரங்கள் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற ஐயப்பாட்டிலும் பல செய்தி ஊடகங்கள், உண்மைகளை மறைத்து அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக எந்த அலையும் வீசவில்லை என்பதான ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.

உண்மையில் விலைவாசி ஏற்றம், பஸ் கட்டண உணர்வு, அறிவிக்கப்படாத மின் விநியோகக் குளறுபடிகள், நிர்வாகச் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, சட்ட சபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமை, தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் முதல் மாநிலமாக இருந்த தமிழகத்தைப் பின்னுக்குத் தள்ளியமை, ஊழல் செய்ய மறுப்பவரைத்  தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு தொல்லைக் குள்ளாக்குதல் இன்னபிற காரணங்களால் பொது மக்கள் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டின் செம்பரபாக்கம் ஏரியின் செயற்கைப் பேரிடரின் போது அ.தி.மு.க அரசும், கட்சியும் நடந்து கொண்ட முறைகள் ஆட்சியின் அவலட்சணத்தை அம்பலப்படுத்தின.

இப்போதும், தேர்தல் பிரச்சாரத்தின் போது, நடை மேடையில் தனித்தும் வேட்பாளர்களைத் தள்ளி வைத்தும், காசு கொடுத்துக் கூட்டி வந்த பொது மக்களைச் சுட்டெரிக்கும் வெய்யிலில் சுருண்டு செத்துப் போகுமளவுக்கு காக்கவைத்து, ஹெலிகாப்டரில் பறந்து வருகிற ஜெயலலிதாவை அவரது கட்சி உறுப்பினர்களும், அனுதாபிகளும் தவிர வேறுயாருமே ஆதரிக்க முன்வரப் போவதில்லை, அதனால் அ.தி.மு.க. அரசு, மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை.

இப்படி ஒவ்வொரு கட்சியு-ம் பல்வேறு காரணங்களுக்காக வாக்காளர்களால் ஒதுக்கப்பட 

1) மதுவிலக்கு அமுல்

2)  ஏழைகள் நலன்

3) ஏழை விவசாயிகள், உழைக்கும் வர்க்கத்தினர் நலன்

4) நெசவாளர் நலன்

5) மாற்றுத் திறனாளிகள் நலன்

6) திருநங்கைகள் நலன் 

7) அரசு ஊழியர், தனியார் துறையினர், மாணவர் நலன் 

8) சிறுபான்மையோர், தாழ்த்தப்பட்டோர் நலன் 

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி வளர்ச்சித் திட்டங்கள், ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் பொதுவான வளர்ச்சித் திட்டங்கள்

என ஒவ்வொன்றிலும் தனிக்கவனம் செலுத்தி, தளபதி -ஸ்டாலின் சுற்றுப் பயணத்தின் போது மக்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்களை அலசி ஆராய்ந்து, அவசியமான அனைத்துக்கும் முன்னுரிமை கொடுத்து, சொன்னதைச் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்று உறுதிமொழி தந்திருக்கின்ற &

திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் கூட்டணிக்கட்சிகளுமே 2016 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறும் என்பது உறுதி.

வெளுக்கிறது கிழக்கு! விடிகிறது வானம்!!