(உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அறவாணர் திரு.வி.ஆர். கிருஷ்ணய்யர் 21.07.2009 இந்து ஆங்கில நாளிதழில் முல்லைப் பெரியாறு அணைச்சிக்கல் தொடர்பாக ஓர் அணையும் சில அதிமுக்கியக் கேள்விகளும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இதில் அவர் தெரிவித்த கருத்தை மறுக்கும் வகையில் தமிழ்நாடு பொதுப் பணித்துறை முன்னாள் செயற்பொறியாளர் திரு.எஸ். சுதந்திர அமல்ராஜ் இந்துவுக்கு எழுதிய கடிதத்தை அந்நாளேடு வெளியிடவில்லை. அதனை நாம் இங்கு வெளியிடுகிறோம்)

திரு கிருஷ்ணய்யர் தமது கட்டுரையில் ஒருதலைச் சார்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தென்தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களில் வாழும் ஒரு கோடி மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு முல்லைப் பெரியாறு அணை நீரையே பெரிதும் நம்பியுள்ளனர். இம்மக்களின் பெருந்துயரை அவர் கருத்தில் கொள்ளவில்லை. முல்லைப் பெரியாறு அணை பற்றிப் பேசுகிறவர்கள் யாரும் இந்த வறிய உழவர்களின் வாழ்நிலை பற்றிக் கவலைப்படுவதில்லை. சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி பற்றிய ‘ரியோத ஜனிரோ’ பிரகடனத்தில் வகுத்துரைக்கப்பட்டுள்ள கொள்கை, 113 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணைக்குப் பொருந்தாது. ஏனென்றால் இந்த அணை தொடக்கத்திலிருந்தே கேரளத்தைச் சேர்ந்த தேக்கடிச் சுற்று வட்டாரத்தில் சுற்றுச் சூழலை மேம்படுத்தியுள்ளது. அணை குறித்து எழுப்பக் கூடிய ஒரே கேள்வி: இப்போது 136 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள அணைக் கட்டமைப்பு பாதுகாப்பானதா என்பதே. இது குறித்து கேரளப் பொறியாளர்களும் தமிழகப் பொறியாளர்களும் நேரெதிர்க் கருத்துடையவர்களாக உள்ளனர். பூசலுக்கு இதுவே காரணம். இந்தப் பொறியியல் சிக்கலைத் தீர்ப்பதற்காகவே உச்ச நீதி மன்றக் கட்டளையின்படி இந்திய அரசு மிகச் சிறந்த பொறியாளர்களைக் கொண்ட ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது.

நிலநடுக்கத்தின் தாக்கம் உட்பட கட்டமைப்புப் பாதுகாப்பின் எல்லாக் கூறுகளையும் இந்த வல்லுநர் குழு ஆராய்ந்தது. 2000ஆம் ஆண்டில் அணை கட்டமைப்பு மீது வல்லுநர்கள் பல்வேறு ஆய்வுகள் நடத்திய போது முல்லைப் பெரியாறு அணையில் செயற்பொறியாளராக இருந்தவன் என்ற முறையில் நான் ஒன்றைத் திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள பெரும்பாலான அணைகளைக் காட்டிலும் இந்த அணை சிறப்பானது என்று நிபுணர்கள் தெரிவித்த கருத்துகளைக் கேரளப் பொறியாளர்களும் ஆய்வுக் களத்தில் முழுமையாக ஏற்றுக் கொண்டார்கள்.

வல்லுநர்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றமும் நீர்த்தேக்க மட்டத்தை பழைய நீர்த்தேக்க மட்டமாகிய 152 அடிக்கு இல்லையயன்றாலும் பகுதியளவாக 142 அடிக்கு உயர்த்தத் தமிழக அரசை அனுமதித்துள்ளது. இவ்வாறு நீர்த்தேக்க மட்டத்தைப் பகுதியளவு உயர்த்துவதற்கும்கூட கேரள அரசு அற்பக் காரணங்களைச் சொல்லி மறுத்து வருகிறது. கேரள அரசியல்வாதிகள் அணைப் பாதுகாப்புப் பற்றி பொய்மைக் கருத்துகளைப் பரப்பி மக்களை மிரளச் செய்து வருகிறார்கள். திரு. கிருஷ்ணய்யர் இந்தப் பொய்மைக்கு இரையாகி விடக்கூடாது. முல்லைப் பெரியாறு அணைப் பூசலானது முழுக்க முழுக்க ஒரு பொறியியல் சிக்கலே ஆகும். அரசியல்வாதிகளல்ல, வல்லுநர்களும் உச்ச நீதிமன்றமும்தான் இதற்குத் தீர்வுகாண வேண்டும்.

Pin It