(கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் அ.தி.மு.க.ஆட்சியின் அவலங்கள் குறித்து, நாள், வார ஏடுகள் எழுதத் தொடங்கியுள்ளன. அண்மையில் வெளிவந்த ‘ஆனந்த விகடன்’ சில அரிய புள்ளிவிவரங்களையும், செய்திகளையும் தந்துள்ளது. அதன் அடிப்படையில்  சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.)

jayalalitha at vikatan wrapperவிதிமீறல்

விதி 110 என்பது, பொது முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை அவையில் குறுக்கீடு ஏதுமில்லாமல், அமைச்சர்கள் படிப்பதற்கு உதவும் ஒரு விதி. ஆனால் அதனையே காலமெல்லாம் பற்றிக்கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதா, இதுவரை அவ்விதியின் கீழ் 181 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.  அவைகளில் 90% வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டன.

செங்கல்லும் இல்லை

வீட்டு வசதி வாரியத்தின் மூலம், 2160 கோடிரூபாய் செலவில், 3111 ஏக்கரில், சென்னை அருகே உள்ள திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்று 2011 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இன்றுவரை அங்கு ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை.

எங்கே நகரம்?

மதுரை விமான நிலையத்துக்கு அருகில் 586 ஏக்கர் நிலத்தில், அனநித்து வசதிகளுடனும், ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்பதும் 110 விதியின் கீழ் வெளிவந்த அறிவிப்பு. எங்கே அந்தத் துணைக்கோள் நகரம் என்று கேட்டால், அதற்கான வரைபட வேலைகள் விரைவில் தொடங்கிவிடும் என்கின்றனர்.

வெறும் சாலை

நெடுஞ்சாலைத் துறை சார்பில் 35 அறிவிப்புகள் வெளிவந்தன. இன்றுவரை 6 பணிகள் மட்டுமே முடிக்கப்பாட்டுள்ளன.

எல்லாம் தலைகீழ்

மாமல்லபுரத்தில் 10 கோடி ரூபாய் செலவில், பல ஏக்கர் பரப்பில், நீர்மூழ்கிக் கப்பலுடன் கூடிய கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இப்போது அதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்று ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். ஆராய்ச்சிக்குப் பின் அறிவிப்பு என்பது அந்தக் காலம். அறிவிப்புக்குப் பின் ஆராய்ச்சி என்பது ஜெயா காலம்.

மின் வெட்டு வாரியம்

2013-&-14 ஆம் ஆண்டில், அரசு மின்சாரத்தைத் தனியாரிடம் பெற்றமைக்கான தொகையாக 30,529 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் மின்வெட்டு முழுமையாக நீங்கவில்லை. மின் வாரியம் ஒரு லட்சம் கோடி கடனில் உள்ளது. இதுதான் தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக ஆக்கும் ‘லட்சணம்.’

மிடாஸ்தான்

பெரியவர் சசி பெருமாள் தன் உயிரையே கொடுத்துப் போராடிய பின்னரும், மதுவிலக்கு பற்றிய சிந்தனைக்குக் கூடத் தமிழக அரசு வரவில்லை. டாஸ்மாக்குக்கு மொத்தம் 19 நிறுவனங்கள் சரக்கு அனுப்புகின்றன. அவற்றுள் மிடாஸ் முதலிடம். பிறகு எப்படித் தமிழக அரசு மதுவிலக்கை எண்ணிப் பார்க்கும்?

காழ்ப்புணர்ச்சி

கலைஞர் காலத்தில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுகிறோம் என்று சொல்லி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது. இன்றுவரை அது சிறந்த மருத்துவமனையாகவும் மாற்றப்படவில்லை.

கொள்ளைகள் பலரிடம்

பகாசுர கிரானைட் கொள்ளை, பருப்பு கொள்முதல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை என்று ஊடகங்கள் முன்வைக்கும் பட்டியல் நீள்கிறது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி கடத்தப்படுகிறது என்ற அதிர்ச்சியான தகவலை நாடாளுமன்றப் பொருளாதார அறிக்கை கூறுகிறது. 3.76 லட்சம் டன் அரிசி கடத்தப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

மந்திரி விளையாட்டு

2011ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் 34 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அவர்களுள் 11 பேர் மட்டுமே இன்னும் அமைச்சர்களாகத் தொடர்கின்றனர். அமைச்சர்களை நீக்குவதும், புதிய அமைச்சர்களைச் சேர்ப்பதும், நீக்கிய அமைச்சர்களையே மறுபடியும் சேர்ப்பதுமான ‘அமைச்சரவை விளையாட்டு’ ஓயவே இல்லை. கல்வி அமைச்சர் யார் என்று கண்டுபிடிப்பதற்குள், அடுத்த அமைச்சர் வந்துவிடுகிறார்.

பறந்து போன சாலை

சென்னைத் துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரையில் பறக்கும் சாலைத் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டு, 30 சதவீதம் பணியும் முடிந்துவிட்டது. அந்தச் சாலைப் பணி நிறைவடைந்திருக்குமானால், புறவழிச் சாலை வழியாகச் சரக்குகளைத் துறைமுகம் கொண்டு செல்வது மிக எளிதாக ஆகி இருக்கும். இது அரசுக்கும் தெரியும். ஆனால், கடந்த ஆட்சி கொண்டுவந்த திட்டம் எதுவும் மக்களுக்குப் பயன்படக் கூடாது என்னும் ‘நல்ல எண்ணத்தில்’ அதனை அப்படியே நிறுத்திவிட்டது இன்றைய அரசு. நீதிமன்றம் சென்றும் அத்திட்டம் நிறைவேறவில்லை.

முட்டை ஊழல்

முட்டையில் தொடங்கி திரையரங்குகள் வரையில் வகை தொகை இல்லாமல் ஊழல் புகார்கள்.’டாப் 10 ஊழல் பெருச்சாளிகள் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பெயர்களோடு விளம்பரப் பலகை வைக்கிற அளவுக்கு அது சென்றுள்ளது.ஆவின் நிர்வாகத்தில் நடந்த மிகப் பெரிய ஊழலை இறுதியில் அரசே ஒப்புக்கொள்ள நேரிட்டது.

படிக்காதே இடி!

உலக அளவில் தமிழர்களுக்குப் புகழ் தேடித் தரக்கூடிய அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை, கோட்டுர்புரத்தில், சென்ற ஆட்சியில் உருவாக்கப்பட்டது. அதனைப் பாழடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. நீதிமன்றத் தலையீட்டினால் தப்பிப் பிழைத்துள்ளது. எனினும், ‘உள்குத்து’ வேலைகள் நடந்துகொண்டே உள்ளன.