தேசியப் பணமயமாக்கல் என்று பொதுச்சொத்துகளைக் குத்தகைக்குவிடும் ஒன்றிய அரசின் அறிவிப்பு பற்றிய தங்களுடைய கருத்து...

arunan 340இப்போது இருக்கக்கூடிய மோடி தலைமையிலான பாஜக அரசு இதற்கு முந்தைய ஒன்றிய அரசுகளின் பொருளாதாரச் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. காங்கிரஸ் கட்சியினுடைய அதே பொருளாதாரக் கொள்கையைத்தான் பாஜக பின்பற்றுகிறது என்று தொடர்ந்து பாஜகவினர் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. நாங்கள் கம்யூனிஸ்டுகள், காங்கிரசினுடையப் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தோம். ஆனால் அதைவிட இது மோசமானதாக இருக்கிறது. ஏனென்றால் காங்கிரஸ் தனியார்த் துறையை வளர்த்தது, ஆனால் பொதுத் துறையை முற்றிலுமாக ஒழிக்கவில்லை. குறிப்பாக நேரு காலத்தில் அவர் பொதுத்துறைகளை உருவாக்கினார். நாட்டினுடைய நவீனத் திருக்கோவில்கள் பொதுத்துறைதான் என்று சொன்னார். இந்திராகாந்தி காலத்திலேயே கூட வங்கிகளை நாட்டுடைமை ஆக்கினார்கள். நரசிம்மராவ் காலத்தில் இருந்துதான் அவர்கள் மாறுபட்டார்கள். ஆனால் அவருடைய காலத்தில் கூட பொதுத்துறைச் சொத்துகளை எல்லாம் விற்பது என்ற நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அல்லது பொதுத்துறை இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. ஆனால் பாஜகவின் நிலைப்பாடு பொதுத்துறை இருக்கக்கூடாது என்பது. எப்படி ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று சொல்கிறார்களோ அதேபோல பொருளாதாரத்தில் ஒரே துறை தனியார்த் துறை என்று ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

இந்தக் கொள்கை எங்கிருந்து வருகிறது என்றால் இவர்களுடைய குருபீடம் ஆகிய ஆர்.எஸ்.எஸ் லிருந்து வருகிறது. சென்ற வாரம் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “அரசு என்பது தொழிலை ஒழுங்கமைக்கும் ரெகுலேட்டராக மட்டுமே இருக்க வேண்டுமே ஒழிய தொழிலை நடத்தக் கூடாது. இதுதான் எங்களுடையக் கோட்பாடு.” என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். பாஜக செய்தித் தொடர்பாளர்கள் சிலர் தெளிவாகவே எங்களுடையக் கோட்பாடு பொதுத்துறை கூடாது, அரசாங்கம் தொழில் நடத்தக் கூடாது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இப்படி ஒரு கொள்கை இருக்கிறவர்கள் என்ன செய்வார்கள்? பொதுத்துறையை எல்லாம் விற்று விடுவார்கள். பொதுத்துறையை விற்பதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று ஏற்கனவே லிமிடெட் கம்பெனியாக இருந்தால் பங்குகள் இருக்கும். பொதுத்துறை என்றால் அந்தப் பங்குகள் அரசாங்கத்திடம் இருக்கும். அந்தப் பங்குகளை விற்க ஆரம்பித்தார்கள். காங்கிரஸ் ஆரம்பித்தது. அதை இவர்கள் கொஞ்சம் தீவிரமாகச் செய்துப் பார்த்தார்கள். அது என்ன என்றால் பெரும்பான்மைப் பங்குகளை வைத்துக்கொண்டு குறைந்தபட்சப் பங்குகளை பெருமுதலாளிகளுக்குக் கொடுத்தார்கள். கேட்டபோது எங்களிடம்தானே அதிகரம் இருக்கப்போகிறது, போர்ட் ஆப் டைரக்டர்ஸ் சொல்வதுதான் முடிவாகும். ஆனால் நடைமுறையில் வேறு மாதிரி ஆகும். ஆனாலும் அரசுக்கு ஒரு பிடிமானம் இருக்கும். இவர்கள் இன்னும் தீவிரமாக, 51சதவீதப் பங்குகள் கூட அரசிடம் வைத்திருப்பதில்லை 100 சதவிகிதமாக விற்பது என்கிற வழியில் போனார்கள். அப்படி விற்ற போதும் சில பொதுத்துறை நிறுவனங்களை விற்க முடியவில்லை.

இப்போது என்ன செய்கிறார்கள் என்றால் இந்த இரண்டாவது மாடல் நாங்கள் பொதுத்துறைச் சொத்துகளை விற்கவில்லை, குத்தகைக்குத்தான் விடுகிறோம் என்று சொல்கிறார்கள். இந்த முடிவுக்கு ஏன் வந்தார்கள் என்று யோசிக்க வேண்டியுள்ளது. பெருமுதலாளிகள் எல்லாம் முதலில் பங்குகளை வாங்கி பிறகு டைரக்டர்ஸ் ஆனதற்குப் பிறகு பொதுத்துறைச் சொத்துகளையெல்லாம் ஆள்வது என்பது ரொம்பவும் சுத்திவளைப்பது போன்ற மாதிரி இருக்கிறது. அதனால் அவர்களுக்கு அனைத்துச் சொத்துகளையும் கொடுத்து விடுவது. மிக முக்கியமாக நிலங்கள், இடங்கள், பெரிய பெரியக் கட்டிடங்கள் ஆகியவற்றைக் குத்தகைக்கு என்று கொடுத்துவிடுவது. ஆண்டுக்கு 1.5 இலட்சம் கோடி ரூபாய் என்று நான்கு ஆண்டுகளில் ஆறு லட்சம் கோடி ரூபாய் முடிவு செய்திருக்கிறார்கள்.

குத்தகைக்கு விடப்படும் பொதுச்சொத்துகளைக் குத்தகைக் காலம் முடிந்தவுடன் அரசு மீட்டுக் கொள்வதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள்.

நிலம் குத்தகைக்கு விடுவது என்பது சொத்துகளை விற்பதை விட ஆபத்தானது. முதலில் 40 ஆண்டுகள் குத்தகை என்று இருந்தது, தற்போது 25 ஆண்டுகள் என்று சொல்கிறார்கள். அரசுச் சொத்துகளை அத்தனை ஆண்டுகள் குத்தகைக்குக் கொடுக்கும்பது சம்பந்தப்பட்ட அரசு நிலங்களுக்குள் அரசு நுழைய முடியாது. நடைமுறையில் இது தனியாருக்குத்தான் சொந்தமாகும். நீண்ட காலம் குத்தகைக்கு விட்டதை அரசாங்கம் திரும்பப் பெற்றதாக வரலாறு கிடையாது. அதிலும் இவர்கள் அதானி, அம்பானி, டாடா, பிர்லா போன்ற சில பெருமுதலாளிகளுக்காக இதைச் செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து மீட்டு எடுப்பார்களா? விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவற்றை அதானிக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெட்ரோலிய நிறுவனங்களை அம்பானிக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் யார் யாருக்கு என்ன என்று ஏற்கனவே பேசி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அரசுச் சொத்துகள் அதாவது பொதுமக்களுடையச் சொத்துகளைத் தனியார் பெருமுதலாளிகளிடம் ஒப்படைக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் திருப்பித் தருவார்களா? குத்தகையை நீட்டிக்கச் சொல்வார்கள். அரசு நீட்டிக்கவில்லை என்றால் வழக்குத் தொடுப்பார்கள். அது பல ஆண்டுகள் இழுத்துக்கொண்டே போகும். பிறகு சலித்துப் போய் அரசாங்கம் அவர்களிடமே கொடுத்து விடும். பொதுச் சொத்துகளை நாங்கள் விற்கவில்லை குத்தகைக்குத்தான் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். கடைசியில் என்னவென்றால் அந்த குத்தகைப் பணத்துக்கே விற்று வடுவார்கள்.

பொதுச்சொத்துகளைப் பெருமுதலாளிகளிடம் கொடுக்கும்போது மக்களுக்கு என்ன விளைவுகள் ஏற்படும்?

இப்படிக் கொடுக்கும் போது அது சாதாரண மக்களுக்குப் பெரியக் கேடாக விளையும். அனைத்துக் கட்டணங்களும் உயர்ந்துவிடும். அதைவிட முக்கியம் சேவைத்துறை எல்லாம் தனியாரிடம் சென்றுவிட்டால் பொதுமக்களுக்குப் பயன்படுமா? அவர்கள் வைத்ததுதான் விலை. கொரோனா காலத்தில் ஏர் இந்தியாதானே உதவியது. சேவைத்துறை தனியாருக்குப் போனால் பொதுமக்களுக்கு ஆத்திர அவசரத்திற்கு உதவாது. கடைசியில் காசுள்ளவனக்குத்தான் சேவைத்துறை. காசில்லாதவன் எதற்கு இரயிலில் விமானத்தில் செல்ல வேண்டும் என்கிற நிலை ஏற்படும்.

இந்தியாவில் பொது மக்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள்தான். அவர்கள் கூற்றுப்படி தங்களை இந்துக்களுக்கான கட்சி என்று சொல்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு உயர்ந்திருக்கிறது. இன்று சமையல் எரிவாயு மேலும் 25 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. அடுத்த மாதம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தி விடுவார்கள். இப்படி, சுமைகளைப் பொதுமக்களுக்குத்தான் தருகிறார்கள். பொதுமக்கள் என்றால் இங்கு பெரும்பானமை இந்துக்கள்தானே. ஏழை இந்துக்களின் தலையில்தான் சுமையை வைத்திருக்கிறார்கள். தனியார்மயம் என்று கூட சொல்ல முடியாது. இது ஏகபோகமயமாக்கல். குறிப்பிட்ட 6-7 பெருமுதலாளிகளிடம் அனைத்தையும் கொடுப்பது ‘privatisation’ அல்ல ‘monopolisation’ ஆகும். இனி அவர்கள் வைப்பதுதான் பொருளாதாரம். அன்று இந்திரா காந்தி அம்மையார் வங்கிகளைத் தேசியமயமாக்கிய போது அதை எதிர்த்த ஒரே கட்சி ஜனசங்கம்தான். அதுதான் இன்றைய பாஜக. இப்போது அரசு வங்கிகளை தனியார் வங்கிகளாக மாற்றுகிறார்கள். ஆக இது இட ஒதுக்கீடு சமூகநீதி போன்றவற்றில் மற்றும் இந்து விரோத ஆட்சி அல்ல பொருளாதார அடிப்படையிலும் இது இந்து விரோத ஆட்சி தான். இது முஸ்லிம் விரோத, கிறிஸ்தவ விரோத ஆட்சி மட்டுமல்ல இந்து விரோத ஆட்சி ஆகும்.

நேர்கண்டவர்: மா.உதயகுமார்