periyar quote on statue“குளம் வற்றினால் குத்துக் கல்லுக்கு என்ன வாட்டம்?” என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. குளத்தில் தண்ணீர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், குளத்தின் நடுவே இருக்கும் கல்லுக்குக் கவலை கிடையாது. அதுபோலத்தான் உள்ளது இன்றைய தமிழக அரசின் செயல்பாடு (?).

எப்படியாவது கலவரத்தை அரங்கேற்றி அதன்மூலம் அரசியல் செய்திட முயலும் பா.ஜ.க ஒருபக்கம். கூழைக் கும்பிடு போட்டே ஆட்சியைப் பிடித்து, இன்று தில்லி எசமானுக்கு விசுவாசமாய் அடிமைச் சேவகம் செய்கிற அதிமுக அரசு மற்றொரு பக்கம். நாட்டில் என்ன நடந்தாலும் சரி, அதைக் கண்டுகொள்ளாமல் வீட்டிற்குக் கொண்டுபோக எவ்வளவு சுருட்டலாம் என்பதே அரசை நடத்துபவர்களின் அன்றாடத் திட்டம்.

திருப்பத்தூர், சென்னை, தாராபுரம், சோமரசன்பேட்டை, காவராப்பட்டு என, தொடர்ந்து தந்தை பெரியாரின் சிலை அவமதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் விஷ விதை ஊன்றப்பட்டது இந்த ஆண்டு மார்ச் மாதத்தில்தான். ஆம்! பா.ஜ.க. வைச் சேர்ந்த ஹெச். ராஜாவின் ட்விட்டர் பதிவுதான் அது.

வரலாறு நெடுகிலும் சிலை குறித்த நிகழ்வுகளுக்குப் பஞ்சமில்லை. பாமியானில் புத்தர் சிலை தாலிபான்களின் மதவெறி காரணமாக உடைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கண்ணகி சிலை ஆணவப் போக்கினால் அகற்றப்பட்டது. சமூக விடுதலைக்குப் பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரின் சிலை இன்றும் சிறையிலிருந்து மீள முடியவில்லை.

ஒரு செயலைச் செய்துவிட்டு, பின்னர் அதன் விளைவுகளைக் கண்டு அஞ்சி நடுங்கி அச்செயலை நான் செய்யவில்லை என்று பின்வாங்குவது எவ்வளவு வெட்கக்கேடானது? ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், சில நிமிடங்களுக்கு முன்னர் தான் பேசியதை இல்லவே இல்லை என்று ஹெச்.ராஜா சாதித்தபோது நாடே அதைக் கண்டு சிரித்தது. ட்விட்டர் பதிவு விஷயத்திலும், தற்போது திருமயத்தில் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியதிலும் அதுவே நடந்துள்ளது. “பேச நா இரண்டுடையோய் போற்றி” என்று ஆரிய மாயையில் அண்ணா குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது.

பிள்ளையார் சிலையை உடைத்த பெரியார் துணிச்சலோடு நீதிமன்றத்தை எதிர்கொண்டார். இங்கோ, சிலையுடைப்பைத் தூண்டிய சிறுநரிகள் தொடை நடுங்கிப் போகின்றன.

கார்ட்டூன் போட்டதற்கே காலரைப் பிடித்திழுத்துப் போகும் காவலர்களோ சேவகர்களாய்க் கைகட்டி நிற்கின்றனர்.

மனுநீதி ஆள்கிறது. மனித நீதி அவர்கள்முன் மண்டியிடுகிறது.

இவர்களால் சிலைகளைத் தான் சிதைக்க முடியும், சித்தாந்தங்களை அன்று.