நம் மக்களெல்லாம் வெகு மும்முரமாய்க் கொண்டாடிக் கொண்டிருக்கும் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி. இது எவ்வளவு காட்டுமிராண்டித்தனம்? இதன் ஆபாசமான கதைகளைத் தெரிந்தால் இவர்கள் இப்படிச் செய்வார்களா?

தந்தை பெரியார் (விடுதலை 12.09.1951)

periyar and vinayaga statueபிள்ளையார் பூசைக் கொண்டாட்டங்கள் வழக்கம் போல இந்த ஆண்டும் தொடங்கிவிட்டன. வீதிகள் தோறும் பிரம்மாண்டமான பிள்ளையார் சிலைகள்! கார்கில் கணபதி முதல் கம்ப்யூட்டர் கணபதி வரை! நல்லவேளை வல்லபை கணபதியை வடிவமாக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை. அந்த வரைக்கும் நாம் திருப்திப் பட்டுக் கொள்ளலாம்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அறிமுகமான பிள்ளையார், சங்க இலக்கியக் கடவுளான முருகனுக்கு எப்படி அண்ணனானார் என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. சரி! பிள்ளையார் கதை என்ன என்று கேட்டால், விதவிதமான கதைகள் சொல்லப்படுகின்றன. பார்வதி குளிக்கச் சென்ற போது தனது உடலிலிருந்த அழுக்கையெல்லாம் திரட்டிச் செய்த உருவமே பிள்ளையார் என்றும், யானைகளைப் பார்த்த பின்னர் கலவி செய்து சிவனும், பார்வதியும் பெற்றெடுத்த குழந்தைதான் பிள்ளையார் என்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல கதைகள் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன. இத்தகைய கதைகளை நமது வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கோ, அல்லது பெரியவர்களுக்கோ கூடச் சொல்ல முடியுமா? குடும்பத்தில் உள்ளவர்கள் ஒன்றாக அமர்ந்து பிள்ளையாரின் பிறப்பை விவாதிக்க முடியுமா? அதனால்தானே தந்தை பெரியார் இதைக் காட்டுமிராண்டித்தனம் என்றார்.

வீட்டில் இவ்வாறென்றால், இந்த அழுக்குருண்டைப் பிள்ளையாரை வைத்து நாட்டில் எப்படியாவது கலவரம் செய்துவிட வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் காவிகள் தொடர்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை மத விரோதத்தை வளர்க்கும் ஒரு கருவியாக முதன்முதலில் பயன்படுத்தியவர், பாலகங்காதரத் திலகராவார். 1894 ஆம் ஆண்டு, பள்ளி வாசலின் முன்னால் விநாயகர் சதுர்த்தியின் போது, இந்துக்கள் இசைக்கருவிகள் இசைப்பதை ஆதரித்துத் தமது பத்திரிகைகளிலே தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். பெரிய அளவிலான ஊர்வலங்களையும், பிரம்மாண்டமான கொண்டாட்டங்களையும் நடத்தினார். கொண்டாட்டங்களில் இஸ்லாமிய மத விரோதப் பாடல்கள் பாடப்பட்டன. இத்தகைய கொண்டாட்டங்கள் மதக் கலவரத்தைத் தூண்டுகின்றன என்று திலகரைக் கோபால கிருஷ்ண கோகலே கண்டித்துள்ளார். மராட்டியத்தில் பிளேக் நோய் பரவியபோது, ஆங்கிலேய அரசு எலிகளை ஒழிப்பதில் தீவிரம் காட்டியது. இதைக் கண்டு, விநாயகரின் வாகனமான எலியைப் பிரிட்டிஷ் அரசு அழிக்கிறது என்று மக்களை அரசுக்கெதிராகத் தூண்டினார் இந்து சனாதன ஆட்சியை நிறுவத் துடித்த திலகர். The Myth of Lokmanya: Tilak and Mass politics in Maharashtra (by Richard Cashman) என்ற நூலில், விநாயகர் சதுர்த்தியைத் திலகர் எவ்வாறு அரசியலாக்கினார் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இன்றும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் பகுதிகளில் குறிப்பாகப் பிற மதத்தினர் வாழும் இடங்களில் எவ்வளவு பதற்றம் உண்டாக்கப்படுகிறது என்பது நாம் அறிந்த செய்தி.

விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரையப் பல மாதங்களிலிருந்து ஆண்டுகள் வரை ஆகின்றன. இதனால் நீர்நிலைகள் மாசடைகின்றன. நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளைச் செய்யப் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ், வினைல் அக்ரலிக், எதைல் க்ளைக்கால் போன்ற வேதிப் பொருட்கள், குருதி அழுத்தம், ஆஸ்துமா, சிறுநீரகப் பாதிப்பு போன்ற நோய்களுக்கு வித்திடுகின்றன. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பக்தி என்ற பெயரால், உடலுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்கும் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கப் போகிறோம்.

விநாயகர் சதுர்த்தி மூடநம்பிக்கையையும், ஆபாசத்தையும் பரப்புகிறது என்ற காரணத்தால்தானே பிள்ளையார் சிலையை உடைக்கும் போராட்டத்தை 1953-இல் தந்தை பெரியார் நடத்தினார். மண்ணைத் தோண்டிக் கடலை நிரப்பும் முட்டாள்தனமான செயல் வேறு எந்த நாட்டிலாவது நடைபெறுவதுண்டா? வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்கும் இப்பண்டிகையைத் தமிழர்கள் கொண்டாடுவதைப் பற்றி இனியாவது சிந்திக்க வேண்டும்.