ஓய்ந்தது மழை. வற்றிக் கொண்டிருக்கிறது நீர். இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது கேரளம்

இது கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது.

மழையால் வெள்ளம் நிரம்பி மக்கள் வாழ்க்கையோடும், உயிரோடும் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களுக்கு உள்ளூர் மக்கள், குறிப்பாக மீனவர்கள் செய்த உதவி அளப்பரியது.

அவர்கள் தங்கள் உயிர்களையும் பொருட்படுத்தாது, தங்கள் படகுக்கு ஏற்படும் சேதத்தைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் உதவியிருக்கிறார்கள்.

அதிலும் கூட ஒரு வேதனை.

வெள்ளத்துக்குள்ளும் சாதி புகுந்து விட்ட கொடுமை அங்கே நடந்திருக்கிறது.

வெள்ளத்தின் கொடூரத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது ஒரு நம்பூதிரி குடும்பம்.

அதைப் பார்த்த ஒரு மீனவர் அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்க அந்தக் குடும்பத்தை நெருங்கியிருக்கிறார்.

அந்த நம்பூதிரிக் குடும்பம் தன்னைக் காப்பாற்ற வந்த மீனவரைப் பார்த்தவுடன் பதறிப்போனது.

காரணம் அந்த மீனவர் தாழ்ந்த சாதியாம்.

தொட்டால் தீட்டாம், கை பட்டால் பாவமாம்.

அந்தக் குடும்பம் மீனவருடன் வர மறுத்துவிட்டது. ஆனாலும் அந்த ஏழை மீனவர் அவர்களைக் காப்பாற்றித் தீரவேண்டும் என்ற முடிவில் கெஞ்சியிருக்கிறார்.

நெடுநேரத்திற்குப் பின்னர் அந்த குடும்பம் ஒரு வழியாக இறங்கி வந்து ஒரு நிபந்தனை போட்டிருக்கிறது மீனவரிடம்.

  தாங்கள் படகில் வரும்போது தவறியும் கூட மீனவர் தம்மைத் தொட்டுவிடக் கூடாது, உடல் பட்டுவிடக்கூடாது என்பதே அந்த நிபந்தனை.

ஏற்றுக் கொண்ட அந்த மீனவர் அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றிக் கரை சேர்த்த மகிழ்ச்சியோடு போய்விட்டார்.

 இங்கே உயர்ந்த சாதியான நம்பூதிரி தாழ்ந்துவிட்டார்

 தாழ்ந்த சாதியாகச் சொன்ன மீனவர் உயர்ந்துவிடடார்.

 “ சாதி நீடிக்குமானால் வீசும் காற்றில் ‘விஷம்’ பரவட்டும்“ என்று கவிஞர் பழனிபாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது.