பெண்களின் முக்கியத்துவம் மறுக்கப்பட்டால்,

வரலாறு ஆண்களுக்கும் பொருளற்றதாகிவிடும்

- ரோஸலிண்ட் மைல்ஸ்

amitabh pink movieபெண்களை உடைமையாகப் பார்க்கக்கற்-றுக்கொடுத்துவரும் இந்த சமூகத்தின் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறது ஒரு திரைப்படம்..! பெண்ணின் விருப்பத்தை, தன்மானத்தைப் புறந்தள்ளி, அவள் தன்னுடைய தேவைகளுக்கானவள், அவளை எப்படிவேண்டுமானாலும் கையாளலாம் என்ற ஆணாதிக்கத் திமிரையும், அதை நாலா பக்கங்களில் இருந்தும் தாங்கிப்பிடிக்கும் அத்தனை சமூகக் கூறுகளையும் நார் நாராய்க் கிழித்துத் தொங்கவிட்டுள்ளது அப்படம். இந்தியில் வெளிவந்து நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் அந்தப் படத்தின் பெயர் - பிங்க்.

தன் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாகத் தன்னைத் தொட முயலும் ஒருவனைத் தாக்கிவிட்டுத் தன் தோழிகள் இருவருடன் தப்பித்து வரும் மினல்... அதன் பிறகு தாக்குதலுக்குள்ளானவனும் அவனுடைய நண்பர்களும் போடும் சதித்திட்டத்தில் சிக்கி விபச்சாரத்திற்கு அழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறாள்..அங்கு அந்தக் குற்றச்சாட்டிற்குத் துணையாக, அவளுடைய உடை உடுத்தும் முறை, உணவுப் பழக்கம், பழகும் விதம் என அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது...இறுதியில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள் என்றாலும்..இடையில் நடக்கும் நிகழ்வுகள்...பெண்ணின் சுதந்திரத்தின் மீது சமூகமும், தனி மனிதர்களும் தொடுக்கும் தாக்குதல்களை எந்தவித சமரசமும் இன்றி சொல்லிச் செல்கின்றன..

அந்தப் பெண்களுக்காக வாதிடும் வழக்குரைஞராக அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார்... நீதிமன்றத்தில் அவர் முன்வைக்கும் கேள்விகளும், வாதங்களும் பெண்களைப் பற்றிய சமூகத்தின் பார்வைக் குறைபாட்டிற்குத் தரப்படும் சிகிச்சைகள். சட்டத்தின் பிரிவுகளை அடுக்கிக்கொண்டே போகாமல், சமூகச் சட்டகங்களை உடைத்தெறிகின்ற வசனங்கள்...பெண்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் பல இருந்தாலும், நடைமுறையில், அதிகார வர்க்கத்திற்கும், ஆணாதிக்க சமூகச் சட்டங்களுக்கும் உட்பட்டே இயங்குகின்றன என்பதை இப்படம் அழுத்தமாக உணர்த்துகிறது..

குற்றம் சாட்டப்பட்ட மினல், கோப்பையில் மது ஊற்றுவது போன்ற புகைப்படத்தை நீதிமன்றத்தில் காட்டி, மது அருந்தும் அவர் எதற்கும் தயாராகத்தானே இருப்பார் என்கிறார் வழக்கறிஞர்..ஆண் நண்பர்களுடன்..சிரித்தபடி செல்ஃபி எடுத்துக் கொண்டது.. குடும்பத்தை விட்டுத் தனியாக வீடு எடுத்துத் தங்கி வேலைக்குச் செல்வது, இரவு நீண்ட நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்புவது - என அப்பெண்களின் நடவடிக்கைகள், வாழ்க்கை முறைகள் அனைத்தையும் ஒழுக்கத்துடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கும் போக்கை, அமிதாப்பின் வசனங்களின் வாயிலாக அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது படம்.

நீதிமன்றத்தில் அமிதாப்பின் கேள்விக்குப் பதிலளிக்கும் மினல், 19 வயதில் தன்னுடைய நண்பனுடன் தான் உடலுறவு வைத்துக் கொண்டதைத் தெரிவித்ததும், அப்போது மறுக்காத நீ, இப்போதுமட்டும் ஏன் இவனைத் தாக்கினாய் என்று கேட்க, ‘அன்று நானும் விரும்பித்தான் உறவு கொண்டேன்..ஆனால் வேண்டாம் என்று நான் சொல்லியும், இவன் என் விருப்பத்தை மீறி என்னைத் தொட முயன்றான்’ என்று சொன்னவுடன்.. நீதிபதியைப் பார்த்து அமிதாப் சொல்வார், ‘பெண்கள் வேண்டாம் என்று சொன்னால், வேண்டாம் என்பதுதான் பொருள்.’

இதுதான் படத்தின் சாரம்..கணவனே என்றாலும் மனைவியின் விருப்பமின்றி அவளைத் தொடக்கூடாது என்கிறது சட்டம்..ஆனால் நடைமுறை எப்படி இருக்கிறது-? பெண்களின் பாலியல் விருப்பங்களுக்கு இங்கே இடமிருக்கிறதா-? தனியாக வாழும் பெண்களைப் பற்றிய மதிப்பீடு என்னவாக இருக்கிறது-? இரவு 9 மணிக்குமேல் ஆண் நண்பனுடன் வெளியில் சுற்றினால் இப்படித்தான் நடக்கும் என்பதும், ‘அவள் அணியும் ஆடைகள்தான் என்னைக் தவறு செய்யத் தூண்டியது’ என்று கூசாமல் சொல்வதும் என்னமாதிரியான மனநிலை-? நிர்பயா வழக்கின் முக்கியக் குற்றவாளி சொல்கிறான், ‘அவளுடைய கண்களில் பயம் இல்லை..என்னை அவள் நேருக்கு நேர் பயமின்றிப் பார்த்துச் பேசினாள்..அதனால்தான் எனக்கு இத்தனை வெறி வந்தது’. சமூகத்தின் இந்த மனப்பிறழ்வு நிலைக்கு என்ன காரணம்?

பெண்ணிற்கு விருப்பமில்லை என்றாலும், தொடர்ந்து பின்சென்று அவளை அடைந்துவிட வேண்டும், முடியாவிட்டால் அழித்துவிட வேண்டும் என்ற தவறான மனநிலைக்கான விதை எங்கு ஊன்றப்படுகிறது? - ஒற்றை வரியில் விடை சொல்லிவிட முடியாத சிக்கலான, அதே நேரத்தில் விடை கண்டாக வேண்டிய வினாக்கள் இவை.

காலங்காலமாக இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ள பெண்ணடிமைத்தனம், அதனை அப்படியே கட்டிக்காத்துவரும் ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகள், கற்பிதங்கள், சமூகச் சடங்குகள் எனப் பல்வேறு கூறுகளையும் கவனத்தில் கொண்டே தீர்வு காண முயல வேண்டும்.

பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கக் கூடாது என்று ஆண்களுக்கும், உன் உடல் மீது உனக்கு மட்டுமே உரிமையுண்டு என்று பெண்களுக்கும் உரக்கச் சொல்லும் படம் இது.