தமிழ்நாட்டு அரசியல் களம் பல தலைவர்களைக் கண்டிருக்கிறது. எதிரெதிர் துருவங்களாக இருந்த தலைவர்களின் அரசியல் பயணத்தைச் சந்தித்திருக்கிறது. அவர்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் மிகுந்த கண்ணியத்தை, உயர்ந்த நாகரிகத்தை, ஆகச்சிறந்த மாண்பைக் கடைப்பிடித்து இருக்கிறார்கள்.

திருச்சி திருவரங்கம் மாமாக்களும் மாமிகளும் மனம் குளிர வேண்டும் என்பதற்காகவே தன்னை அக்கிரஹாரத்து அத்திம்பேராகக் கருதிக் கொண்டு அந்த நபர் ஆற்றிய உரை, இல்லையில்லை அந்த நபர் உளறிக் கொட்டியிருக்கும் இரண்டு செய்திகள் முக்கியமானவை. அவற்றை நாம் கவனத்தில் கொள்ளாமல் கடந்து போவது சரியானதல்ல.

annamalai bjp 316ஒன்று தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் பெரியார் சிலைகளை அகற்றுவாராம் இந்த மாஜி போலீஸ்காரர். அடுத்ததாக , பாஜக ஆட்சியின் முதல் கையெழுத்தே இந்து சமய அறநிலையத் துறையின் கடைசி நாளாகும் என்றும் இவர் பேசியிருக்கிறார்.

அறிவியலின் துணையோடு காளைமாடு கூடக்கன்று ஈனும். சேவல் கோழி கூட முட்டை வைக்கும். ஆனால் சமூகநீதித் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வருவது என்பது முயற்கொம்புதான்.

அந்த நபர் குறிப்பிட்டிருக்கிறபடி பெரியார் சிலை அகற்றம் என்பதை இந்த நபருக்குப் பதிலாக, பீகார் இறக்குமதிக் கும்பலைச் சார்ந்த எந்த ஒரு ராஜாவோ, ரவியோ பேசி இருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டின் தட்பவெப்பம், வடகிழக்குப் பருவமழை, கார்த்திகை மாதப் பனி அனைத்தையும் கடந்து 100 டிகிரியாகக் கொதித்திருக்கும் என்பதை எல்லோரும் அறிவோம். சம்பந்தப்பட்ட அந்த நபரும் அறிவார்.

ஆனால், பேசியநபர் பார்ப்பனர் அல்லாத ஒரு சூத்திரர் என்பதாலும், ஏதோ தன் வயிற்றுப் பிழைப்புக்காகப் பார்ப்பனர் வீசி எரிகிற எலும்புத் துண்டைத் தின்றுவிட்டுப் பேசுகிறார் என்பதாலும் அந்த நபரைப் பரிதாபத்தோடு பார்த்துவிட்டு தமிழ்ச் சமூகம் கடந்து போகிறதே இதுதான் பெரியார் பக்குவப்படுத்திய தமிழ்நாடு.

இந்த உளறல் பேர்வழியாகட்டும், இவருக்கு முன்பாக ஒருவர் வேல் ஏந்தி இதே போல் பயணித்தாரே அவராகட்டும், அவருக்கும் முன்னால் ஓர் அம்மா குறுக்கும் நெடுக்குமாக ஓடியோடி இந்தக் கட்சியை வளர்த்தப் படாதபாடு பட்டார்களே அவர்களாகட்டும் இவர்கள் எல்லோரையும் தமிழ் சமூகம் பரிதாபத்திற்குரிய அக்கிரகாரச் சூத்திரர்களாகக் கருதிக் கடந்து போவதுதான் இந்த மண்ணில்,பெரியார் தூவியிருக்கிற பகுத்தறிவு விதையின் விளைச்சல்.

இந்த நபர் சொல்கிறார் தமிழ்நாடு என்கிற பூமாலையை திமுக பிய்த்துப் போட்டுவிட்டதாம். சொல்லுகிறவர் யார்?

இந்தியா என்கிற பெருநிலப்பரப்பின் சமூக அரசியல் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழித்து மீளமுடியாத நூறடிப் பள்ளத்தில் மூழ்கடித்திருக்கிற மதவாத, பிரிவினைவாத, வெறுப்பு அரசியலின் பிதாமகன்களுக்குக் கைக்கூலி வேலை பார்க்கிற நபர்.

16 ஆம் நூற்றாண்டு சிவாஜியை 1961இல் காளிகாம்பா கோவிலிலும், 1921 ஆம் ஆண்டு செத்துப் போன சுப்பிரமணிய பாரதியை 1931 ஆம் ஆண்டு ஈரோட்டிலும் சந்தித்த இந்த மானஸ்தன், 1967-ல் ஆட்சிக்கு வந்த திமுக 1962இல் மருதமலைக்கு மின்சாரம் தர மறுத்ததென்று பேசிவிட்டுத் தன் பேச்சின் தவறுகளைக் கூடத் தவறு என்றோ, பேசிய பொய்க்கு வருத்தமோ தெரிவிக்காமல், பேசி அசிங்கப்பட்ட பின் கூச்சமோ கவலையோ படாமல் மேலும் மேலும் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் எனில், ஒரு சராசரி மனிதனுக்கு இருக்கிற மான உணர்ச்சியைக் கூட இழந்துவிட்டு நாக்பூர் சித்பவன் கும்பல் அடிமைகளாகப் பயிற்றுவித்து இருக்கிறதே என்றுதான் நாம் பரிதாபப்படுகிறோம்.

தமிழ்நாட்டு அரசியல் களம் பெரியார் என்கிற பேருருவின் முன்னால் அல்லது பின்னால் இருந்து தான் இயங்கும். நான் பார்ப்பனர்த்திதான் என்று சட்டமன்றத்தில் பேசிய அம்மையார் ஜெயலலிதா கூட, அய்யங்கார் பார்ப்பனரான ராஜகோபால ஆச்சாரியின் சிலைக்கு மாலை போட மாட்டார். பெரியாரின் சிலைக்குதான் மாலை போட முடியும்.

எதிர்த்துப் பேசுகிற இடத்தில் நீயும் உனது தொண்டரடிப் பொடியான்களும் தற்காலிகமாக நிற்பதற்குக் கூட இங்கே பெரியார் தான் காரணம். சுருங்கச் சொன்னால் யாகாவாராயினும் நாகாக்க! எச்சரிக்கை!

- காசு.நாகராஜன்