நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என நடந்த சட்டமன்றத் தேர்தல்கள் இந்த அளவுக்கா என்ற ஏற்ற இறக்கங்கள் உண்டு என்ற போதிலும் ஒட்டுமொத்தத்தில் நான் விரும்பியபடியும், அஞ்சியபடியும் முடிவுகளைக் கொண்டுவந்திருக்கின்றன.

முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்போடு இணைந்த தேர்தல் என்பதால், இந்த அமைப்பை முற்றிலுமாக நம்புகிறவர்கள் போல இனிமேல் அடியோடு மாற்றங்கள் வந்துவிடும் என்ற மயக்கம் கொள்ளத் தேவையில்லை. அதேவேளையில், புரட்சிகரமான மாற்றங்களுக்கு ஏற்ற சமுதாயத் தயார்நிலைகள் உருவாகிற வரையில் இந்த நாடாளுமன்ற அமைப்பைப் புறக்கணிக்கத் தேவையில்லை.

நாடுதழுவிய அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தத் தேர்தல் முடிவுகளை அலசலாம். முதலில், அனைத்து மாநிலங்களிலுமே, குறிப்பாகத் தமிழகத்தில், பெரும் எண்ணிக்கையில், 80 விழுக்காட்டிற்கு மேல் வாக்காளர்கள் பங்கேற்றதைப் பாராட்டியாக வேண்டும். இதுவரையில் தேர்தலுக்காகக் கைவிரலில் மையிட்டுக்கொள்வதை அநாகரிகமாகக் கருதி ஒதுங்கி வந்த நடுத்தர வர்க்கத்தினர் இம்முறை உற்சாகத்தோடு பங்கேற்றார்கள். சிறப்பாக, புதிதாகப் பதிவு பெற்ற இளம் வாக்காளர்கள் ஒரு கடமையை நிறைவேற்றுகிற உணர்வுடனேயே வாக்குப் பதிவு எந்திரப் பொத்தான்களை அழுத்தினார்கள். அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவாளர்கள் வாக்குச் சாவடிக்கு வருவதை உறுதிப்படுத்தின. தேர்தல் ஆணையம் தன்னால் முடிந்த எல்லை வரையில் சென்று தேர்தலை முறைகேடுகளின்றி நடத்துவதில் கணிசமாக வெற்றிபெற்றது. தன்னாட்சியோடு கூடிய ஆணையத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை மக்கள் முன்னெப்போதையும் விட இப்போது அனுபவித்துக் கண்டார்கள்.

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம், குறைந்தபட்ச பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கிற வரையில் பின்னிலையில் இருப்போரைக் கழற்றிவிட்டு இரண்டு மூன்று கட்டங்களாக மீண்டும் மீண்டும் வாக்குப்பதிவு செய்யும் முறை, அல்லது ஒரே கட்டமாகவே ஒரு வாக்காளர் 1, 2, 3.... என தனது மாற்றுத் தேர்வுகளையும் பதிவு செய்தல் போன்ற சீர்திருத்தங்களோடு, இதே போன்ற (ஒரேயடியாக முடிவுகளுக்காக ஒரு மாதம் வரையில் இழுத்தடிக்காத) ஆணையத்தின் பொறுப்பில் தேர்தல் நடத்தப்பட்டால் ஜனநாயகம் பல மடங்கு ஆரோக்கியமாக அமையும். ஆனால், வெறும் 20 விழுக்காடு வாக்குகள் மட்டும் பெறுகிற ஒருவர் தம்மை ஏற்காத 80 விழுக்காடு வாக்காளர்களுக்கும் பிரதிநிதியாக முடிகிறது, அப்படியொரு சிறுபான்மை ஆதரவு மட்டுமே உள்ள ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சியமைக்க முடிகிறது என்ற தற்போதைய ஏற்பாட்டில் இருக்கிற வசதிகள் காரணமாக இந்தியாவின் முதலாளித்துவக் கட்சிகள் எதுவுமே தேர்தல் சீர்திருத்தத்திற்குத் தயாராக இல்லை. இடதுசாரிகள் மட்டுமே இதை வலியுறுத்திவருகின்றனர். இப்போதைக்கு அதற்கு வழியில்லை.

தமிழகத் தேர்தல் முடிவுகள் காட்டுவதென்ன? பொதுவாக இப்படிப்பட்ட தேர்தல்களில் கட்சிகள் அமைக்கும் கூட்டணி பலம் ஒரு முக்கியமான தீர்மான சக்தியாகச் செயல்படுகிறது. அமெரிக்காவுடன் அணு சக்தி உடன்பாடு, ராணுவ ஒத்துழைப்பு உடன்பாடு, பெட்ரோலிய விலைக்கட்டுப்பாடு நீக்கம், சர்வமும் தனியார்மய ஏற்பாடு, அந்நியர் வந்து தங்குதடையின்றிக் கொள்ளையிட அனுமதி என்பன உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் அப்பட்டமான மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க திமுக முடிவு செய்ததைத் தொடர்ந்து அக்கட்சியுடனான உறவை மார்க்சிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் துண்டித்துக்கொண்டன. பின்னர் அணி மாற்றம் நிகழ்ந்தது. தேமுதிக, புதிய தமிழகம், பார்வர்ட் பிளாக், சமக, மநேமக உள்ளிட்ட கட்சிகளும் இந்தப் பக்கம் வந்தன. இவையெல்லாமாகச் சேர்ந்து அஇஅதிமுக அணியின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தின.

ஆனால் அது மட்டுமேயல்ல. திமுக-வினர் கட்டவிழ்த்துவிட்ட பண வன்முறையை மக்கள் ஒற்றை விரலால் முறியடித்திருக்கிறார்கள். வரலாறு காணாத அலைக்கற்றை ஊழல் கொள்ளைக்கு சாதிச்சாயம் பூச முயன்ற சமூக மோசடி, ஆட்சியதிகாரத்தில் மட்டுமல்லாமல், ஜனநாயக வரலாறுள்ள கட்சிக்கு உள்ளேயே தலைமையின் குடும்ப ஆளுமையைத் திணித்த பண்ணைத்தனம், மற்ற ஆதாயங்களுக்காக இந்த அத்துமீறல்களை ஏற்றுக்கொண்ட உடன்பிறப்புகளின் சுயநலம் ஆகியவற்றை வாக்காளர்கள் விளக்குமாற்றால் தள்ளிவிட்டிருக்கிறார்கள்.

முகநூல் நண்பர் ராஜ் பிரின்ஸ் தங்கள் பகுதியில் ஒரு அலுவலகத்தில் நடந்த உரையாடல் பற்றி எனக்குச் சொன்னார். தேர்தல் முடிவுகள் பற்றி உணவு இடைவேளையின்போது ஊழியர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் வழக்கம்போல, “யார் ஜெயிச்சு யார் ஆட்சிக்கு வந்தா நமக்கென்ன? நாம உழைச்சாதான் நமக்கு சோறு,” என்று சொன்னாராம். அதைக் கேட்ட ஒரு பெண் ஊழியர் - துப்புரவுத் தொழிலாளி - உடனே இப்படிச் சொன்னாராம்: “அது நிசந்தான். ஆனா, நாம உழைச்சுக் கிடைச்ச சோத்திலேயே கை வைச்சுட்டாங்களே... அதை விட்டுவைக்க முடியுமா?”

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மே 13 இரவு எனது ரயில் பயணத்தில் சக பயணிகள் இருவர் பேசிக்கொண்டது இதே உணர்வை வெளிப்படுத்தியது. “கருணாநிதி நல்ல நடவடிக்கையெல்லாம் எடுத்தாருதான்... ஆனா எல்லாத்திலேயும் சம்பாதிக்க வழி செஞ்சாங்களே... எதிலேயும் அவரு குடும்பம்தான்னு ஆக்கிட்டாங்களே... அது சரியில்லைதானே...”

“ஆமாமா... லேண்ட் மாஃபியாங்குறது கூட எப்பவுமே இருந்து வர்றதுதான். ஆனா இவங்க ஆட்சியிலே அந்த லேண்ட் மாஃபியாக்காரங்க கட்டுப்பாடே இல்லாம ஆட்டம்போட்டாங்க; இவங்க ஆளுகளே அதிலே டாமினேட் செஞ்சு, எல்லா இடத்தையும் வளைச்சுப் போட்டு,  நம்மளை மாதிரி ஆளுக ஒரு கால் கிரவுண்டு நிலம் கூட வாங்க முடியாம விலையை ஏத்திவிட்டாங்களே...”

எந்த குறிப்பிட்ட அரசியல் கட்சியையும் சேராதவர்கள் என்பது அவர்களது சொல்லாடல்களிலேயே புரிந்தது. அரசியல் இயக்கத்தினர் போல வெளிப்படையாகத் தெரியவராத இப்படிப்பட்டவர்களின் நெஞ்சக நெருப்புதான் சுட்டெரித்திருக்கிறது.

தனக்கு மக்கள் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள் என்று கலைஞர் கூறியிருக்கிறார். அந்த ஓய்வை முறையாகப் பயன்படுத்தி சிந்தித்துப் பார்க்கட்டும். கூடி விவாதிக்கட்டும். திராவிட இயக்கத்தின் தடத்திலிருந்து வெகுதொலைவு விலகிப்போனதை, வெறும் சம்பாத்தியக் கூடாரமாகக் கட்சி மாறிப்போனதை எப்படிச் சீரமமைப்பது என்ற தெளிவுக்கு வரட்டும்.

மூன்றாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்க உள்ள ஜெயலலிதா, தற்போதைய வாக்காளர் முதிர்ச்சியை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். வாக்காளர்களுக்கு நன்றி கூறிக்கொண்டே கோவில்களில் நேர்த்திக் கடன் பூசைகளும் செய்கிற விசித்திரங்களுக்கு இனியாவது விடை கொடுக்க வேண்டும். மத மாற்றத் தடைச் சட்டம், அவரவர் வழிபாட்டு நம்பிக்கைகளின் படி கோவில்களில் விலங்குகளை பலியிடும் பழக்கத்திற்குத் தடை போன்ற அபத்தங்களை இனி கனவிலும் நினைத்துப் பார்க்காமல் இருக்க வேண்டும். அரசு ஊழியர் முதல் அனைத்துத் தொழிலாளர்களின் போராட்ட நியாயங்களுக்குச் செவி மடுக்கிற தலைமைப் பாங்கை வெளிப்படுத்த வேண்டும்.

கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசை இவர் எப்போதும் மைனாரிட்டி அரசு என்றே கூறி வந்திருக்கிறார். தனது அரசும் அவ்வாறு குறிப்பிடப்படக்கூடாது என்ற அவரது விருப்பம் நிறைவேறியிருக்கிறது; தனிப் பெரும் கட்சியாக ஆட்சியமைக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இதை வழங்கியவர்கள் தெய்வங்கள் அல்ல, மனிதர்கள் என்ற புரிதலோடு அவர் செயல்படட்டும். முக்கிய முடிவுகள் எடுக்கிறபோது தோழமைக் கட்சிகளைக் கலந்தாலோசிக்கிற அரசியல் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளட்டும்.

இதையெல்லாம் சொல்கிறபோது கேரளத்தில், மேற்குவங்கத்தில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது.

கேரளத்தைப் பொறுத்தவரை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அந்த மாநில மக்கள் ஆளுங்கூட்டணியை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் என்பது இப்போதும் நடந்திருக்கிறது. அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசையோ, மார்க்சிஸ்ட் கட்சியையோ கேரள வாக்காளர்கள் முற்றிலுமாக நிராகரித்துவிடவில்லை. சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சியை விட கூடுதல் இடங்களை மார்க்சிஸ்ட் கட்சிக்கு வழங்கியிருக்கிறார்கள். நேர்மையான ஆட்சிக்கு அவர்கள் அளித்துள்ள அங்கீகாரம்தான் இது.

சாதி, மத அமைப்புகளின் ஆதரவை காங்கிரஸ் கட்சி கூச்சநாச்சமே இல்லாமல் பயன்படுத்திக்கொண்டது அது ஆட்சி நாற்காலியில் அமரக் கைகொடுத்திருக்கிறது. கேரளத்தின் நல்லிணக்க சமுதாயத் தளத்தில் நச்சு வேர்கள் ஊடுருவ விடுகிற அரசியல் சுயநலம் இது. வரும் காலத்தில் இதை எதிர்கொண்டு முறியடிக்கிற கடமையும் இடதுசாரிகளின் தோள்களில் விழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தில்?

கார்ப்பரேட் எசமானர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மம்தா பானர்ஜி கட்சியை கார்ப்பரேட் ஊடகங்கள் ஒரு வீராங்கனை போல சித்தரித்தது, காங்கிரஸ் கூட்டு, நக்சலைட் ஒத்துழைப்பு என பல கூறுகள் இடது முன்னணி தோற்கடிக்கப்பட்டதன் பின்னணியில் உள்ளன. முப்பத்தைந்து ஆண்டு கால தொடர்ச்சியான ஆட்சியில், மக்களிடமிருந்து தனிமைப்பட இட்டுச் சென்ற நடைமுறைத் தவறுகளும் அணுகுமுறைக் குறைபாடுகளும் இருக்கவே செய்யும்.

வெகு விரைவில், மம்தா பானர்ஜியின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வரும். உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களை அவரால் சகித்துக்கொள்ள முடியாது, சகித்துக்கொள்வதற்கு அவரை அவரது புரவலர்களாகிய கார்ப்பரேட் கனவான்கள் விடமாட்டார்கள். ஊழல் கதைகள் இனி அங்கே அன்றாடக் காட்சியாக மாறும். இன்று அவரை ஒரு மீட்பர் போல் முன்னிறுத்தும் அதே பெரிய ஊடகங்கள் அப்போது அவரை அம்பலப்படுத்தவும் செய்யும். ஆனால், ஒரு போதும் அவருக்கு மாற்றாக, ஏற்கெனவே முன்னுதாரணம் படைத்த, மதவெறித் தீ மற்ற பகுதிகளில் பற்றியெறிந்தபோது வங்கத்தை மக்கள் ஒற்றுமைச் சோலையாக வளர்த்தெடுத்த இடது முன்னணியை முன்னிறுத்த மாட்டார்கள், வேறொரு கார்ப்பரேட் தயவுத் தலைவரை உருவகப்படுத்துவார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.

இதை மார்க்சிஸ்ட் கட்சியும் இடது முன்னணி கட்சிகளும் எவ்வாறு எதிர்கொள்வார்கள்? ஒற்றை வரியில் சொல்லிவிட முடியும்: “மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடது முன்னணிக்கும் மேற்கு வங்க வாக்காளர்கள் ‘ஸ்டடி ஹாலிடேய்ஸ்’ வழங்கியிருக்கிறார்கள்.” மார்க்சிய இயக்கம் தனக்கே உரிய விமர்சன-சுயவிமர்சனப் பண்பாட்டோடு ஸ்டடி செய்யும்.

அஸ்ஸாமில் காங்கிரஸ் அரசுக்கு மக்கள் மறுபடியும் வாய்ப்பளித்திருப்பது, அந்த தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கு அவர்கள் அளித்த அங்கீகாரம் அல்ல. மாநில நிலைமைக்கு ஏற்ப, தீவிரவாத அமைப்புகளோடு பேச்சு வார்த்தை நடத்த முதலமைச்சர் கோகோய் மேற்கொண்ட முயற்சிகள் போன்ற நடவடிக்கைகளுக்கான அங்கீகாரமே இது. மற்றபடி தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் காங்கிரசை மக்கள் ஒதுக்கிவைத்துவிட்டது ஏன் என்பதை அதன் தேசியத் தலைமை ஆராய வேண்டும். சும்மா இளவரசுப் பட்டத்தோடு ராகுலைச் சுற்றிவரச் செய்வதால் மக்களை ஈர்த்துவிட முடியாது என்பதை உணர்ந்தாக வேண்டும்.

எல்லா மாநிலங்களிலும் இடதுசாரி, ஜனநாயக இயக்கங்கள் வலுவாக வேரூன்ற வேண்டியிருக்கிற அரசியல் தேவையையும் இது உணர்த்துகிறது.

வரலாறு எப்படி அமைய வேண்டும் என்ற விரும்பலாம். அப்படித்தான் அமைய வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் புதிய வரலாற்றை விரும்பியபடி படைக்க, வரலாற்றின் உண்மை நாயகர்களாகிய மக்களோடு தோள் சேர்ந்து நடை போடலாம், போராட்டப் பாதையில் முன்னேறலாம்.

Pin It