தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீராதாரமாகத் திகழ்ந்த தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு புதிதாகத் தடுப்பணை கட்டுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தமிழகத்தின் சார்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழகத்தின் சார்பில் கர்நாடகாவின் இந்த நடவடிக்கை, 1892 நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் அதைத் தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது.

thenpennai riverஆனால் மத்திய அரசின் சார்பாக வைக்கப்பட்ட வாதத்தில், 1892 ஒப்பந்தத்தின் 4 வது விதியின் கீழ் நதிநீர்ச் சிக்கலைத் தீர்க்க நடுவரை நியமிக்க வழிமுறை உள்ளது. ஆனால் தமிழக அரசில் இருந்து அதற்கான எந்தக் கோரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும், 1956 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ச் சிக்கல் சட்டத்தின் படி மாநில அரசு மத்திய அரசுக்கு நதிநீர்ப் பங்கீட்டுச் சிக்கலை எடுத்துக் கூறி அதைத் தீர்க்க நதிநீர்த் தீர்ப்பாயம் அமைக்கவும் கோரிக்கை வைக்கலாம். ஆனால் தமிழக அரசின் சார்பில் அப்படி எந்த ஒரு கோரிக்கையும் எழுப்பப்படவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

வழக்கை முழுதும் விசாரித்த சென்னை நீதிமன்றம் தென்பெண்ணையாற்றில் கர்நாடகா தடுப்பணை கட்டுவதற்கு எதிரான விவகாரத்தில் தமிழக அரசு தனது கடமைகளைச் செய்யத் தவறிவிட்டது என்று தெரிவித்துத் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் தமிழக அரசின் அக்கறையற்ற தன்மையை வெட்ட வெளிச்சமாகக் காண்பிக்கின்றன. அவை:-

• இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாகத் தீர்ப்பாயம் அமைப்பதற்கான எந்த ஒரு வழிகாட்டுதலையும் கோரவில்லை.

• தமிழகம் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞரிடம் தமிழக அரசு நதிநீர்ப் பங்கீட்டுச் சிக்கல் குறித்த தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு விடுத்த கோரிக்கையைக் காண்பிக்குமாறு கேட்கப்பட்டது. ஆனால் அவர் அப்படி எதுவும் நேரடியாகக் கேட்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுவிட்டார்.

• தெரிந்தே நதிநீர்ப் பங்கீட்டுத் தீர்ப்பாயம் அமைப்பதற்கான நேரடிக் கோரிக்கையை மாநில அரசு முன்வைக்கவில்லை.

• இந்த நிலையில், மாநில அரசு மத்திய அரசிடம் அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தீர்ப்பாயம் அமைக்கக் கோரிக்கை வைக்கலாம். தீர்ப்பு வெளியான நான்கு வாரங்களுக்குள் கோரிக்கை வைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசிற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு குறிப்பிட்டு அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தென்பெண்ணை நதியில் தமிழ்நாட்டுக்கு இருந்த நியாயமான உரிமையை விட்டுக் கொடுக்கும் விதமாக, ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையையும், வாழ்வாதாரத்தையும் நிர்ணயிக்கக் கூடிய நதிநீர் தொடர்பான சிக்கலில் தமிழக அரசு இத்தனை அலட்சியமாக நடந்து கொண்டிருப்பது பெரும் கண்டனத்துக்கு உரியதும், வெட்கக் கேடான காரியமுமாகும்.

மக்கள் நலன் மீது இவர்களுக்கு உள்ள அக்கறையின்மையை இந்தத் தீர்ப்பு நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

காவிரி நதிநீர்ப் பிரச்சினையின்போது 8.7.1971 அன்று தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க. ஆட்சியில், காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் கோரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, 27 முறைக்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எதனையும் எட்ட இயலவில்லை என்பதால் தலைவர் கலைஞர் அவர்களின் வலியுறுத்தலின் பேரில் 2.6.1990 அன்றைய பிரதமர் திரு.வி.பி.சிங்

அவர்கள் தமிழ்நாட்டின் நிலை உணர்ந்து காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார். அந்த நடுவர் மன்றத்திற்கு இடைக்கால உத்தரவு வழங்க அதிகாரம் இருக்கிறது என்று 10.1.1991 அன்று உச்சநீதிமன்றம் வரை சென்று ஆணை பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அதன் அடிப்படையில்தான் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்கும் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வெளிவந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தச் சிக்கலில் எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்காமல் கோரிக்கையையும் முன்வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது ஏன்? ஒருவேளை கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அது மோடி அரசுக்கு ஏதேனும் சங்கடம் ஏற்படுத்திவிடும். முக்கியமாக கர்நாடகத் தேர்தலில் எவ்விதச் சங்கடமும் ஏற்படக்கூடாது எனும் நோக்கத்தில் மக்களை அலட்சியப்படுத்தித் தங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கும் பாஜகவிற்கு நன்மை செய்ய முனைப்புக் காட்டி உள்ளதா தமிழக அரசு?

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை விவாதிக்காமல் அரசின் அதிகார பலம், பணபலம் மற்றும் ஆளும் கட்சியினருக்கு ஆதரவான ஊடகங்களின் மூலமாகச் சிக்கல்களைத் திசை திருப்பும் வேலையை விட்டுவிட்டுத் தமிழக அரசு அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

- சந்திரசேகர்