கடந்த 20-10-2016 அன்று, யாழ்ப்பாணம் குளப்பிட்டிச் சந்தி அருகில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார்கள், சிங்கள இனவெறிக் காவலர்கள் இருவரால்.

சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் கந்தரோடை சுந்தரராஜா சுலக்சன், கிளிநொச்சி நடராஜா கஜன்.

கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தை சின்னதுரை விஜயகுமாரின் மூத்த மகன் ஏற்கனவே காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறார். இப்போது இளைய மகன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அவர் சொல்கிறார், “எங்களுக்கு உதவி வேண்டாம். நீதிதான் வேண்டும்” என்று.

அதேசமயம் சுன்னாகம், கிளிநொச்சி அருகில் கோபம் அடைந்த மக்கள் காவல்துறையைத் தாக்கி இருக்கிறார்கள்.

அதுகுறித்து இலங்கை அரசு விசாரிக்க கூடாது, ஐ.நா. அளவில் விசாரிக்க வேண்டும் அப்பொழுதுதான் நீதி கிடைக்கும் என்று தமிழ் இளையோர் அமைப்பு கூறுகிறது.

ஈழத்தமிழர்களின் கோபம் பிற நாடுகளில் எதிரொலித்ததால், இலங்கை அரசு சொல்கிறது சுட்டுக்கொன்ற காவலர்களைக் கைது செய்துவிட்டோம். தமிழர்கள் பிரச்சனையை கைவிட வேண்டும் என்று.

அதே நேரத்தில் ஜாதிக ஹெல உறுமைய என்ற சிங்கள இனவெறிக் கட்சியின் முன்னணிப் பொறுப்பாளர் ஒருவர் சொல்கிறார், “நல்லது தமிழர்களே! ஆட்டத்தை ஆரம்பித்து வையுங்கள். நாங்கள் அதை ‘முடித்து’ வைக்கிறோம்” என்று.

இன்று ஈழமண்ணில் வீடிழந்து, வாழ்விழந்து குற்றுயிரும் கொலையுயிருமாக எஞ்சி இருக்கின்ற ஈழத்தமிழர்கள் மீது, மீண்டும் ஒரு கொடுமையான தாக்குதல் நடத்தி இன அழிப்புச் செய்ய இந்த அடித்தளம் அமைக்கிறது.

சிங்கள நாட்டின் ஆட்சி அரசியலில் ஆட்கள் மாறியிருக்கிறார்கள் தேர்தல் மூலம். ஆனால் தமிழர்களுக்கு எதிரான கொள்கை மட்டும் மாறவில்லை.

நாம் நமது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம்.