இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஆணையர் கரியவாச, இலங்கை அரசாங்கத்தில் வேலை பார்க்கும் ஓர் ஊழியர்.

இந்தியா சொல்வதை இலங்கைக்கும், இலங்கை சொல்வதை இந்தியாவுக்கும் சொல்வதோடு அவரின் வேலையை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு, சிங்கள இனவாதச் சிந்தனையை இந்திய மண்ணில் விதைப்பதற்கும், அரசியல் சித்து விளையாட் டுகளைச் செய்ய முனைவதற்கும் அவர் முயற்சிக்கக் கூடாது.

சிங்கள இனவாத அரசால் ஈழத் தமிழர்கள் உடைமைகள் இழந்தும், உயிரிழந்தும் கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். தமிழக மக்கள் உள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சிங்கள இனம், வட இந்திய வங்காளி - ஒரிய இனத்தின் வம்சாவாளியினர் என்று சொல்லித் தில்லு முல்லு வேலைகளில் ஈடுபட்டவர் கரியவாச.

இலங்கையில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்ததோடு அல்லாமல், வட இந்தியா தமிழகத்தோடு ஓர் இனப்போர் நிகழ்த்த வேண்டும் என்பதுபோலக் கரியவாசவின் கரிய வார்த்தைகள் அமைந்திருக்கின்றன.

அப்போதே இந்திய உள்விவகாரங்களில் தலையிடாதே என்று மத்திய அரசு அவரை அழைத்துக் கண்டித்திருக்க வேண்டும். கண்டிக்கவில்லை.

இப்பொழுது, இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இது தமிழக சட்டப்பேரவையின் உரிமை.

இத் தீர்மானம் இயற்றிய சிலமணி நேரங்களில், இம்மாநாட்டில் மன்மோகன்சிங் பங்கேற்காவிட்டால், யாருக்கு இழப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும், இம் மாநாட்டில் பங்கேற்காவிட்டால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்றும், தமிழக அரசுக்கு இலங்கை பற்றிச் சரியான தகவல் கொடுக்கப்படவில்லை என்றும் நாக்குத் தடித்துப் பேசியிருக்கிறார் கரியவாச.

இந்திய மண்ணில் இருந்து கொண்டு இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று பேசியது இந்தியாவின் சுயமரியாதையை இழிவுபடுத்துவது.

தமிழக அரசின் பேரவைத் தீர்மானத்தை விமர்சித்தது பேரவையின் உரிமை மீறல்.

இந்த இரு குற்றங்களுக்கும் மத்திய அரசு கரியவாசவை உடன் நாடுகடத்த வேண்டும். அல்லது தமிழக சட்டப் பேரவை அவரைப் பேரவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித்தண்டிக்க வேண்டும்.

நச்சு விதையை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் அது மரமாகி வெட்ட வேண்டிய நிலைமை ஏற்படும்.

கரியவாச இராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேசுகிறார் இந்தியாவில்.

ஈழப்போரின் போது மவுனம் காத்த பா.ஜ.க.,வின் ஆதரவை இலங்கை அரசுக்காகத் திரட்டும் வேலையைச் செய்கிறாரா? இது ஒரு மரியாதைக்குரிய சந்திப்பு என்று சொன்னால், ஏனைய கட்சித் தலைவர்களை ஏன் சந்திக்கவில்லை?

கரியவாசவின் பேச்சும் செயலும் ஐயத்தை ஏற்படுத்துகிறது. இனியும் அவர் இலங்கையின் உயர் ஆணையராகத் தொடர்வது இந்திய இறையாண்மைக்கே ஆபத்தாகப் போய்விடும்.