2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் நாள், அன்றைய முதல்வர் ஜெயலலிதா உடல் நலமின்றி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பெற்றார்.

அன்றிலிருந்து சரியாக இரண்டு மாதத்தில் 2016 நவம்பர் 23 அன்று நீட் தேர்வைத் தமிழகத்தில் அனுமதிக்கும் அரசாணை வெளியிடப் பட்டது. இதற்குப் பின்னணியில் இருந்தது பா.ஜ.க. இந்திய அளவில் மருத்துவத் துறையில் தமிழகம் முன்னிலையில் இருந்து வந்தது. இது பா.ஜ.க வுக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. காரணம் பா.ஜ.கவை என்றுமே ஏற்காத தமிழகம், பெரியார் மண் என்பதுதான்.

அதனால் தமிழக மாணவர்களை மிகவும் பின்தள்ளச் செய்ய, நீட் தேர்வு மூலம் வடிகட்டும் ஏற்பாட்டைச் செய்தது பா.ஜ.க மத்திய அரசு . விளைவு அனிதா, பிரதிபா போன்ற மாணவர்கள் மரணத்திற்குப் பலியானார்கள்.

இந்நிலையில் தமிழகம் கல்வியில் பிற மாநிலங்களை விட முன்னிலையில் இருப்பதனால் , தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது என்று சொல்கிறார் பிரகாஷ் ஜவடேகர். அதாவது முன்னிலையில் இருக்கும் தமிழகத்தைப் பின்னிலைக்குக் கொண்டு செல்லும் குரல் இங்கு தொனிக்கிறது.

அதுமட்டுமன்று, நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தீவிரவாதிகளைப் போல மெட்டல் டிடக்டர் சோதனை. காதில், கழுத்தில் இருக்கும் நகைகள் கழற்றப்படுகின்றன. வளையல்கள் கால் கொலுசு போன்ற அனைத்து நகைகளும் அகற்றப்படுகின்றன. நெற்றிப் பொட்டு அழிக்கப்படுகின்றது. தலை முடிச்சோதனை என்ற பெயரில் கலைக்கப்பட்டுத் தலைவிரி கோலமாக்கப் படுகின்றனர், உடைகள் கூடச் கிழிக்கப்படுகின்றன. ஏறத்தாழப் பெண்கள் "கைம்பெண்"கோலத்திற்கு ஆளாக்கப் படுகின்றனர்.

ஆனால் எந்தப் பார்ப்பனனின் பூணூலையும் அவர்கள் தொடுவதில்லை.

இவ்வளவு கொடுமைகளையும் தாண்டி மாணவர்கள் எப்படி நிம்மதியாகத் தேர்வு எழுதுவார்கள் ?

அவர்கள் மாணவர்களா, அல்லது மத்திய நீட் தேர்வு மையத்தின் அடிமைகளா ?

 நீட் தேர்வை ஒழித்தாலன்றி, இதற்கு வேறு வழியே இல்லை.