சிவில் சர்விஸ் என்று அழைக்கப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற 24 பணியிடங்களுக்கான தேர்வுகளில் பார்ப்பனர்களே முதல் இடத்தில் இருக்கிறார்கள்.

இரண்டாவதாகப் பிற்படுத்தப்பட்டவர்கள். மூன்றாவதாக மிகக் குறைந்த அளவில் சிறுபான்மையினர், கிராமப்புறம், தாழ்த்தப்பட்டவர்களில் இருந்து வருகிறார்கள். மலைவாழ் பழங்குடி மக்கள் இன்னும் குறைவு.

அப்படி இருந்தும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை, கிராமப் புற, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களிடமிருந்து சிவில் சர்விசை முற்றிலும் பிடுங்கிவிட இங்கேயும் கைவைக்கப் போகிறது பா.ஜ.க. ஆட்சி.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இத்தேர்வில் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, அடுத்து நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாகத் தேர்வு நடத்தபடுகிறது.

இதன்படி முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை வைத்து பணியிடங்கள் ஒதுக்கப்படும்.

இப்போது மத்திய அரசு இத்தேர்வு முறையில், மேற்சொன்ன தேர்வு மதிப்பெண்களை வைத்து ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். பணிகளை முடிவு செய்கிறது.

இதுவரை எந்த மாநிலத்தில் தாம் வேலை செய்யவேண்டும் என்பதை, தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முடிவு செய்து கொள்ள வழி இருந்தது.

இப்பொழுது இந்த நடைமுறையை மாற்ற மத்திய அரசு திட்டமிடுகிறது.

அதாவது தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உத்தரகாண்ட் முசௌரிக்குச் செல்ல வேண்டும், மூன்று மாதப் பயிற்சிக்காக.

இந்தப் பயிற்சி காலங்களில் கொடுக்கப்படும் மதிப்பெண்களையும் கூடுதலாகச் செர்த்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற பணிகள் கொடுப்பது பற்றி முடிவு செய்யப்படும். எந்த மாநிலத்தில் அவர்கள் பணியாற்ற வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.

முசௌரி பயிற்சியின் போது அங்குள்ள 10 போராசிரியர்கள் நினைத்தால், முதல் இடத்தில் உள்ளவரை 500ஆம் இடத்திற்கும், 500ஆம் இடத்தில் உள்ளவரை முதல் இடத்திற்கும் கொண்டு வர முடியும், அவர்கள் தரும் மதிப்பெண் மூலம்.

இதன்மூலம் பயிற்சி தரும் பேராசிரியர்கள் தயவிலேயே இருக்க வேண்டிய அவல நிலைக்கு தேர்வானவர்கள் ஆளாகின்றார்கள்.

இங்கே அதிகாரம், அரசியல், மதம், சாதி. பாலினம் இவையெல்லாம் நுழைந்து விடும்.

மேற்சொன்ன 10 பேராசிரியர்களில் ஆசிரியர்களில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் இருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

அப்படியானால் நிலைமை என்ன ஆகும்?

பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதி வகுப்பினர் மட்டுமே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். பதவிகளையும், இதர பதவிகளை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பெறும் நிலையும் ஏற்படும்.

மீண்டும் வருணாசிரமம் தலைதூக்கப் போகிறது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சியினால்.

இதை ஆரம்பத்திலேயே முறியடித்தால் அன்றி, வேறு வழியில்லை.