மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலைத் திட்டம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டம் 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செயல்படுத்தப்படத் திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் கிட்டத்தட்ட 250 கி.மீ. வனப்பகுதியில் அமையும் படி உருவாக்கப்பட இருக்கிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிணறுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டு, ஏரிகள், கண்மாய்களை ஆக்கிரமித்து இந்தச்சாலை அமைக்கப்படுகிறது. விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மீண்டும் ஒரு தூத்துக்குடி போன்ற நிகழ்வைச் சந்திக்க நேரிடும் என்று எதிர்க்கட்சியான தி.மு.கழகம் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச் சாலை திட்டம் மற்றும் திட்டத்திற்கான எதிர்ப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். இத்திட்டத்தினால் பாதிப்புகள் மிகவும் குறைவாகவும், பயன்கள் அதிகமாகவும் இருப்பதால், இத்திட்டத்தினைச் செயல்படுத்துவது அவசியம் என, முதல்வர் தெரிவித்தார். ஆனால் இதனால் யாருக்குப் பயன், பொது மக்களுக்கா அல்லது பெரு முதலாளிகளுக்கா, என்று அவர் சொல்ல வில்லை.

10 ஆயிரம் கோடிக்குச் சாலை என்று சொல்லும் போதே இதில் எவ்வளவு பணம் சூறையாடப்படப்போகிறது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கப் போகும் மக்கள், பசுமையை இழக்கப் போகும் காடுகள் இவைபற்றி இவர்களுக்கு என்ன அக்கறை? பெருமுதலாளிகள் இலாபம் அடைய வேண்டும். அந்த இலாபத்தில் ‘கமிஷன்’ பெற்றால்போதும் என்கிற அளவில் இயங்குகிறவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை. தெருக்களிலும், மக்கள் அன்றாடம் பயன் படுத்தும் சாலைகளிலும் அத்தனைக் குறை பாடுகள் இருக்கின்றன. பல இடங்களில் சாலைகளே இல்லை. இதையெல்லாம் சரிசெய்தால் மக்களுக்குப் பயன் கிடைக்கும், இவர்களுக்கு என்ன பயன் கிடைக்கும்? அதனால், பயன் தரும் பணம் கொழிக்கும் திட்டங்களை அல்லவா அவர்கள் விரைந்து செயல்படுத்துவார்கள். காவிரி உரிமை, தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலை, நீட் எதிர்ப்பு என மக்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ஓர் அரசால் ஈரம் காய்வதற்கு முன் இப்படி ஒரு மக்கள் விரோதத் திட்டத்தைத் தொடங்க முடிகிறதென்றால், அவர்கள் பின்புலத்தில் இருக்கும் பார்ப்பனிய முதலாளித்துவத்தின் கோர முகம் என்ன என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடிகிறது.

“நவீன அரசமைப்பில் “நிர்வாகம்” என்பது முதலாளி வர்க்கத்தின் நலன்களைப் பேணிக் காக்கும் கமிட்டியாகவே இருக்கும்” என்று மார்க்ஸ் சொன்னது இங்கு பொருந்துவதை நாம் காணலாம். மேலும், மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கும் “பாதுகாப்புத் தாழ்வாரம்” (defence corridor) அமைக்கப்படுவதற்கும் இந்த 8 வழிச்சாலை பெரிதும் பயனாகவும், பின்னர் தூணாகவும் அமையும். இந்திய இராணுவத்தைத் தமிழ்நாட்டில் குவிப்பது இதன் முதன்மையான நோக்கம். முதலாளித்துவமும் இராணுவமும் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதை நாம் கற்பனைச் கூட செய்ய முடியாது. மக்கள் போராட்டம் மட்டுமே நமக்கு இருக்கும் நம்பிக்கை. இந்த ஆட்சியாளர்கள் அகற்றப்படும் நாளே தமிழ்நாட்டிற்குப் பொன்னாளாகும்.