வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும் என்பது பழைய பாடல்.

இன்று வரப்பும் உயரவில்லை, நீரும் உயரவில்லை, நெல்லும் உயரவில்லை, குடியும் உயரவில்லை.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவைச் சாகுபடிக்காக கடந்த 12ம் தேதி நீர் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விட்டிருக்க வேண்டும்.

ஆனால் திறந்துவிடவில்லை.

தமிழக முதல்வர் எடப்பாடி சட்டமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார் நீர் திறந்து விடமுடியாது என்று.

அவர் சொன்ன காரணம் அணையில் நீர் இல்லை என்பது.

விவசாயிகளும், தமிழகத் தலைவர்களும், இருக்கும் நீரையாவது திறந்து விட்டுக் குறுவைச் சாகுபடியைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தும் அரசின் காதுகளுக்குக் கேட்கவில்லை.

உச்சநீதிமன்ற ஆணையின்படி மத்திய அரசு காவிரி ஆணையம் அமைத்தும் கூட, தமிழகம், கேரளம், புதுவை அரசுகள் ஆணையத்துக்குத் தம் பிரதிநிதிகளை நியமித்த பின்னரும்கூட கர்நாடக அரசு இன்னமும் அதன் பிரதிநிதிகளை நியமிக்கவில்லை.

எனவே காவிரியில் தண்ணீர் வருவது தொடர்ந்து

தடைப்பட்டு வருகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும், தமிழக அரசும் மேட்டூர் அணையின் தண்ணீரை உரிய காலத்தில் திறந்துவிடாமல் இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கிறது.

இப்படியே தொடர்ந்து கொண்டு இருந்தால் நாடு சுடுகாடாக மாறவேண்டிய நிலை ஏற்படும்.

இந்தியாவிற்குள் ஒரு சோமாலியாவா?

அரசு மக்களுக்காக இருக்கிறது. அரசுக்காக மக்கள் இருக்கமாட்டார்கள். இதை மத்திய, மாநில அரசுகள் உணரவேண்டும்.