ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக ஒரு திடீர் அரசாணையைப் பிறப்பித்து, ஆலைக்குச் சீல் வைக்கும் நாடகத்தைத் தமிழக அரசு தற்போது அரங்கேற்றியுள்ளது.

 இதுதொடர்பான தமிழக அரசின் அரசாணையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் 48-ஏ பிரிவின்படி காடுகள், வன உயிரினங்களைக் காக்கச் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, மேம்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும். 1974-ஆம் ஆண்டு தண்ணீர் சட்டத்தின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்குச் சீல் வைத்து நிரந்தரமாக மூட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “1974 ஆம் ஆண்டின் நீர்ப் பாதுகாப்புச் சட்டத்தின் 18 1-பி பிரிவின்படி தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூடல் உத்தரவை அரசு ஏற்பதாகவும் அதனை மூடிச் சீல்வைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடுவதாகவும்”, அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

sterlite factory

ஆலை மூடப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையின் விதிமுறை மீறல்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், மக்களுக்கு ஏற்பட்ட உடல் நல சீர்கேடு ஆகியவற்றைக் குறிப்பிடாமல் அரசாணை பிறப்பித்திருப்பது பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

ஆலையிலிருந்து வெளிவரும் ஃபுளூரைடு, சல்ஃபைடு ஆகிய வேதிக்கழிவுகள் மேலாண்மை விதிப்படியும் இந்த ஆலைக்கு உரிமம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, உரிய உரிமம் இல்லாமலேயே உற்பத்தித் திறன் ஒவ்வொரு முறையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அந்த உற்பத்தித் திறனுக்கு ஏற்ப புகை போக்கியின் உயரமும் அமைக்கப்படவில்லை என நிரூபணமாகியிருக்கிறது.

Red Category பிரிவில் உள்ள இந்த ஸ்டெர்லைட் ஆலை, உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் வளைகுடாப் பகுதியிலிருந்து 25 கி.மீ. தூரத்திற்குள் அமைக்கப்படக்கூடாது என்பது முக்கிய நிபந்தனை. ஆனால் மன்னார் வளைகுடாப் பகுதியிலிருந்து 15 கி.மீ. தூரத்திற்குள் அமைக்கப்பட்டிருப்பது இந்த ஆலையின் மீதான மிக முக்கியமான குற்றச்சாட்டு. இரண்டாவதாக, தொழிற்சாலையைச் சுற்றிலும் 250 மீ அளவுக்கு மரம் வளர்த்து பசுமை அரணை (க்ரீன் பெல்ட்) அமைக்க வேண்டும். அதனையும், ஸ்டெர்லைட் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது. இப்படிப் பல முக்கிய விதிமுறை மீறல்களைக் குறிப்பிடாமல் தமிழக அரசு மூடல் அரசாணையை பிறப்பித்துள்ளது.

சட்ட மன்றம் கூடவிருக்கிறது. கொல்லப்பட்டவர்களின் உடல்களை மறு கூராய்வு செய்வது தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் இந்த “சீல் வைக்கும் நாடகம்” அரங்கேற்றப்பட்டுள்ளது.

ஆலையை நிரந்தரமாக மூடுவதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை என்பது மக்களை ஏமாற்றும் மோசடி.“சூழலை மாசுபடுத்தியதற்காக ஆலையை மூடவேண்டும்” என்று 2010 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, 2013 இல் உச்ச நீதிமன்றம் சென்று ஸ்டெர்லைட் முறியடித்தது. 2013 இல் நச்சுப்புகை வெளியானதையொட்டி, (இப்போது சீல் வைப்பதைப் போலவே) அன்றைக்கும் அ.தி.மு.க. அரசு சீல் வைத்தது. ஆனால் பசுமைத் தீர்ப்பாயத்தில் உத்தரவு பெற்று ஆலையை மீண்டும் திறந்தது ஸ்டெர்லைட் நிர்வாகம். அந்த வழக்கு 5 ஆண்டுகளாக இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

எனவே இந்த சீல்வைப்பு என்பது ஒரு கபட நாடகம். உண்மையிலேயே நிரந்தரமாக இந்த ஆலையை மூடவேண்டுமானால், “தாமிர உருக்காலைகளுக்குத் தமிழகத்தில் இடமில்லை” என்று தமிழக அரசால் கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும். இந்தச் சட்டமன்றக் கூட்டத்திலேயே, சல்லிக்கட்டுக்குச் சட்டம் இயற்றியதைப் போல இதற்கும் தனிச் சட்டம் இயற்றப்படவேண்டும். இவ்வாறு செய்வதுதான் இதற்குச் சட்ட ரீதியான தீர்வு என்று சூழலியல் ஆர்வலர்களும், சட்ட வல்லுநர்களும் கூறுகின்றனர். இவ்வாறுதான் மகாராட்டிரத்திலிருந்து ஸ்டெர்லைட் விரட்டப்பட்டது.

தற்போது இந்த அடிமை அரசு இந்த அறிவிப்பைச் செய்வதற்குக் காரணம், பத்து லட்சம், இருபது லட்சம் நிவாரணத்துக்கு தூத்துக்குடி மக்கள் யாரும் மயங்கவில்லை. துப்பாக்கிச் சூட்டால், காயமடைந்து மருத்துவமனையில் கிடக்கும் மக்கள், “என்றைக்கு ஆலையை மூடுவீர்கள்” என்ற ஒரே கேள்வியை மட்டுமே எழுப்புகின்றனர். “ஸ்டெர்லைட்டை மூடினால்தான் இறந்தவர்களின் உடலை வாங்குவோம்” என்கின்றனர். எனவே, மக்களை ஏமாற்றி இப்போதைக்கு இப்பிரச்சினையை முடிப்பதற்காகவே இந்த மோசடி அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்டெர்லைட்டைப் பொறுத்தவரை அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து நடத்தப்பட்டதாகக் கூறி அரசு இன்று ஸ்டெர்லைட்டை பூட்டி முத்திரையிடவில்லை. மாறாக நீர் மாசுக் கட்டுப்பாடு சட்டப் பிரிவு 18(1)(B) சுட்டிக்காட்டப்படுகிறது. ஸ்டெர்லைட்டை பூட்டி முத்திரையிட, அதுவும் நிரந்தரமாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை அரசு இந்த உத்தரவின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.

பிரிவு 18(1)(B) கீழ் மாநில அரசு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு உத்தரவுகள் பிறப்பிக்கலாம். ஆனால் இன்று கூறப்பட்டுள்ள உத்தரவுக்கான காரணம் ‘பொதுநலன்’ என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர வேறு இல்லை.

நாளை ஒருவேளை ஸ்டெர்லைட் நிறுவனம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், அனுமதி நீட்டிக்க மறுத்த காரணத்தைச் சரி செய்தாலோ அல்லது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு எதிராகப் பசுமைத் தீர்ப்பாயம் அல்லது உச்ச நீதிமன்ற உத்தரவைப் பெற்று வந்தாலோ, தமிழக அரசு உத்தரவு என்னவாகும்?

பொதுமக்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்தை வைத்து, சட்டத்திற்கு உட்பட்டு ஒரு தொழிற்சாலை இயங்குவதை மாநில அரசு தடுக்க முடியுமா, என்ற கேள்வி எழுந்தால், அதற்கு இல்லை என்பதுதான் பதிலாக இருக்க முடியும். அதற்குச் சாராயம் காய்ச்சுவது எப்படி சட்டரீதியில் தடை செய்யப்படுகிறதோ அது போல காப்பர் ஸ்மெல்டரிங் தொழிற்சாலை இயக்குவதைத் தடை செய்யக் கொள்கை ரீதியிலான முடிவு எடுக்கப்பட்டுத் தொடர்ந்து சட்ட அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும். அப்படியான எந்த முடிவும் இன்று எடுக்கப்படவில்லை.

அவ்வாறு இல்லாமல் மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதியையும் தாண்டி ‘அரசு நிரந்தரமாக ஒரு ஆலையைப் பிரிவு 18(1)(B)ஐ பயன்படுத்தி மூட வேண்டுமென்றால் அதற்கான் தகுந்த காரணங்கள் இருக்க வேண்டும். அந்தக் காரணங்கள் முறையாக ஆராயப்பட்டு அவை அந்த உத்தரவில் தெளிவுப்படுத்தப்பட வேண்டும்.

எனவே தமிழக அரசு கொள்கை முடிவாக, தமிழகத்தில் இனி காப்பர் ஆலையை இயக்க அனுமதிக்க மாட்டோம் என முடிவு செய்து அதைச் சட்டமாக இயற்றுவதே இப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வாக இருக்க முடியும்.