கல்விக்கு முக்கியத்துவம் தருகிற மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. அதிலும் குறிப்பாகப் பெண் கல்விக்குக் கடந்த 30 ஆண்டுகளில் வழங்கப்பட்ட முக்கியத்துவம் அளப்பரியது, பாராட்டுக்குரியது.

பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வி வேலை, வாய்ப்புகள் அகில இந்திய சராசரியை விடவும் கூடுதலாகவே தமிழ்நாட்டில் இருந்து வருவதும், அனைவருக்குமான வளர்ச்சியை மையப்படுத்திக் கடந்த நூறு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் சமூக அரசியல் நகர்த்தப்படுவதும் இங்கே முக்கியமாகக் கவனிக்கத் தக்கதாகும்.

இந்தியத் துணைக்கண்ட அரசியல் என்பதே திராவிட - ஆரிய அரசியல்தான். ஏகலைவனின் கட்டைவிரலாகட்டும், சம்பூகனின் தலையாகட்டும் இன்றளவும் ஆரிய திராவிடப் போரின் சாட்சிகளே அன்றி வேறில்லை.

புராண காலத்தில்தான் என்றில்லை இன்றும் இதே நிலைதான். அனிதாக்களும் ஶ்ரீமதிகளும் நிகழ்கால சாட்சியங்கள். கல்வியைப் பிடுங்கிவிட்டால் போதும் பிறகு அந்தக் கூட்டத்தையே அடிமைப்படுத்தி விடலாம் என்கிற சூழ்ச்சித் திட்டத்தைத்தான் ஆரியக்கும்பல் இன்றளவும் செயல்படுத்தி வருகிறது.

kallakurichi school 2871938 இல் இராஜகோபால ஆச்சாரி இந்தியைத் திணித்ததும், 1953இல் அதே இராஜாஜி குலக்கல்வியைக் கொண்டுவர முனைந்ததும், முன்னதாக 1950இல் நீதிமன்றம் வழியாக இட ஒதுக்கீட்டைப் பறிக்க முயற்சித்ததும், 1965 இந்தித் திணிப்பும், 1980இல் இட ஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பு என்றதும், 1990-இல் மண்டல் எதிர்ப்புப் போராட்டங்களும், நுழைவுத் தேர்வுகளும், 2014 மோடி காலத்தில் தொடங்கிய நீட்தேர்வும், புதிய கல்விக் கொள்கையும் எல்லாம் நமது கல்வி உரிமையைப் பறிக்கிற ஆரிய சூழ்ச்சிகள்தான்!

 1968ஆம் ஆண்டு நாம் மேற்கொண்ட இரு மொழிக் கொள்கையும், 1928 முதல் மேற்கொண்டு வருகிற இடஒதுக்கீடு கொள்கையும், நமது கல்வியைப் பாதுகாத்து வருகிறது என்பதை உணராத ஒரு தலைமுறை, இப்போது வளர்ந்து உயர்ந்திருக்கிறது.

அந்தத் தலைமுறையின் வாரிசுகள்தான் இப்போது கல்வி கற்கிற இடத்திற்கு வந்துள்ளார்கள். வரலாறு தெரியாத இந்தத் தலைமுறைக்கு அறிவியலும் தெரியவில்லை, உளவியலும் புரியவில்லை. ஆரியத்தின் சூழ்ச்சியில் சிக்கியபடி தங்கள் குழந்தைக்கான கல்வி நிலையங்களைத் தேடுவதிலும், கல்வியைத் தீர்மானிப்பதிலுமே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது.

 குழந்தைக் கல்வியை அருகமைப் பள்ளிகளில்தான் கற்பிக்க வேண்டும் என்கிற அடிப்படையைக் கூட உணராமல், மிகச்சாதாரணமாக விடியற்காலை ஆறு மணிக்கே டிபன் பாக்ஸ் புத்தக மூட்டையோடு சேர்த்து குழந்தைகளைப் பள்ளிப் பேருந்தில் திணித்து அனுப்புவதை ஒரு “ஃபேசனா”கவே கருதத் தொடங்கிவிட்டது, இன்றைய தலைமுறைப் பெற்றோர் சமூகம்.

பள்ளியைப் பற்றிய கவலை இல்லை. படிப்பை பற்றிய கவலை இல்லை. வெறும் பெருமை பற்றி மட்டுமே இவர்கள் கவலைப்படுகிறார்கள்.

இன்றைக்கு அரசோ, தனியாரோ தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் பத்துகிலோ மீட்டர் சுற்றளவில் பத்துப்பள்ளிகள் இருக்கின்றன. அதில் இரண்டு பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள்.

ஆனாலும் நூறு, இருநூறு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற பள்ளியை நோக்கி ஓடுகிறோம். சரி அதைக்கூட ஏதேனும் ஒரு காரணத்தில் சமாதானம் செய்து கொண்டாலும் கூட குழந்தைகளிடம் பெற்றோர் மனம்விட்டுப் பேச வேண்டாமா? பள்ளி - கல்வி - ஆசிரியர் - மாணவர்கள் - விடுதி - காப்பாளர் - உணவு இப்படி அனைத்தையும் குழந்தையோடு இயல்பாகப் பேசி குழந்தையின் உண்மை நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ளவேண்டியது பெற்றோராகிய நமது பொறுப்பில்லையா?

அதேபோல பள்ளிக்கூடம் நடத்துகிறவர் யார்? அவரது பின்னணி என்ன? பள்ளியின் சரி, தவறுகள் பற்றிய கருத்துகள் என்று அக்கம் - பக்கம், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் என விசாரிக்க வேண்டாமா? இவைகளை நாம் பொறுப்பாகக் கருதுவதில்லை என்றால் பெற்றோர்களின், மாணவர்கள் மீதான நிலைப்பாடு, கவனம்தான் என்ன?

குழந்தையின் வகுப்பாசிரியரிடமும், சக மாணவர்களிடமும் மாதம் ஒருமுறையாவது நேரடி தொடர்பு கொண்டு பேச வேண்டாமா? பள்ளியில் சேர்ப்பதோடு சரி, சேர்க்கும்போது பணத்தை மட்டும் கடனை, உடனை வாங்கிக் கட்டி விட்டு வேறு வேலையைப் பார்ப்பது என்பது நமது பொறுப்பையும் கடமையையும் நாம் தட்டிக்கழிக்கிறோம் என்றுதானே பொருள்!

நமது கடமையை நாம் தவறிவிடுகிறபோது இதுபோல நேர்ந்துவிடுகிற தவறுகளின் வலியைச் சுமந்து இனி காலமெல்லாம் அழுது தீர்க்கிறோம்.

கள்ளக்குறிச்சி ஶ்ரீமதியின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்திருக்குமோ... என்கிற பதைபதைப்பு. அதே வயதுடைய குழந்தையின் தந்தையாக எனக்குள் இன்னமும் இருக்கிறது. அந்தக் குழந்தையின் மரணத்தின் பின்னணியைக் கண்டறியப்பட வேண்டும். தவறிழைத்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இனியொரு ஶ்ரீமதி இப்படியொரு துயரத்திற்கு ஆட்படக்கூடாது என்கிற ஆதங்கத்தோடு சில செய்திகளைப் பேசியாக வேண்டியுள்ளது.

ஶ்ரீமதியின் சந்தேக மரணத்தைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்திருக்கிறது. இதற்கு யாரெல்லாம் காரணம்? முதல் காரணம் பள்ளி நிர்வாகம். படிப்பதற்காக சேர்க்கப்பட்ட குழந்தையின் உயிரைக்காப்பாற்ற முடியாத பள்ளி நிர்வாகம், குழந்தையை இழந்து தவிக்கிற பெற்றோருக்கு ஆறுதல்கூட சொல்லாமல் பதுங்கிக் கொண்டிருந்ததே போராட்டம் வெடிக்கக் காரணமானது.

ஒரு கோட்டை அழிக்காமல் சிறிதாக்க பக்கத்தில் ஒரு பெரிய கோடு போடவேண்டும் என்கிற சூட்சமம் போல, ஶ்ரீமதியின் மரணத்தைவிட பள்ளியில் நடைபெற்ற வன்முறை முதன்மையான பேசு பொருளாக்கப் பட்டிருக்கிறது. இது ஒரு திட்டமிட்ட வன்முறை என்கிற அய்யம் இங்கேதான் எழுகிறது.

தமிழ்நாடு எவ்வளவோ பெரிய போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது. எதிலேயும் கொள்ளை நடந்ததில்லை. ஆனால், கள்ளக்குறிச்சிப் போராட்டம் தமிழ்நாட்டு வடிவமாகத் தெரியவில்லை. அது ஏறக்குறைய வடநாட்டுக் கலாச்சாரத்தையே பிரதிபலிக்கிறது. இதன் ஆபத்தை நாம் உணர்ந்து கொள்ளவில்லையேல் தமிழ்நாட்டின் எதிர்கால நலன் கேள்விக்குறியாவது தவிர்க்க முடியாது.

அதேபோலத் திராவிட மாடல் ஆட்சிக்கு ஏற்ற அரசு அதிகாரிகள் இல்லை. அவர்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஆரியமாடல் விரும்பிகளாகவே இருக்கிறார்கள் என்பதை முதல்வர் அவர்கள் கவனத்தில் கொள்வது அவசர அவசியத் தேவையாகும்.

ஆசிரியப் பணிசெய்கிற பெருந்தகைகளுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்... நீங்கள் படித்தவர்கள். பண்பு நிறைந்தவர்களாக, பகுத்தறிவாளர்களாக, நேர்மையாளர்களாக இருக்கவேண்டும். குறைந்த பட்சம் மனிதர்களாகவாவது நடந்துகொள்ள முயற்சியுங்கள். இல்லையேல் எதிர்காலச் சமூகம் உங்களுக்கும் சேர்த்தே பெரிய குழியை வெட்டிவைக்கும் என்பதை உணருங்கள்.

இனியும் ஶ்ரீமதிகள், தங்கள் எதிர்கால லட்சியங்களையும், கனவுகளையும் யாரோ ஒரு மூன்றாம் நபரின் தவறுகளால் புதைத்து விடக்கூடாது. பெருங்கவலையோடும் இழப்பின் வலியுணர்கிற துயரத்தோடும் இந்த வேதனையைப் பகிர்ந்து கொள்கிறோம்.

சம்பந்தப்பட்ட பள்ளி குறித்து தீவிரப் புலன்விசாரணையை அரசு மேற்கொள்ள வேண்டும். உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்பதே ஶ்ரீமதிக்கான நியாயம். அதைத் திராவிட மாடல் அரசு நிச்சயம் செய்ய வேண்டும்!

தீதும் நன்றும் பிறர் தர வாரா! நினைவில் கொள்வோம்!!

- காசு.நாகராசன்