1979 ஆம் ஆண்டு, குடிமை மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு உடன்படிக்கையில் (International Covenant on Civil and Political Rights), இந்திய ஒன்றியம் தன்னை இணைத்துக் கொண்டது. ஒரு நபர் தமது கருத்தைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதைப் பாதுகாக்கும் அம்சங்களைக் கொண்டது இந்த உடன்படிக்கை. ஆனால், இந்தியாவிலுள்ள பல்வேறு சட்டங்கள் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிப்பதாகவே உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சட்டப்பூர்வமற்ற செயல்களைத் தடுக்கும் சட்டம். (Unlawful activities (Prevention) Act, 1967).

இந்திய ஒன்றியத்தின் பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தபோது கொண்டுவரப்பட்ட இச்சட்டம், தற்போது 50 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இக்காலகட்டத்தில், அச்சட்டத்தால் தூக்கி எறியப்பட்ட மனித உரிமைகள் எண்ணிலடங்கா.

prof saibaba

கடந்த ஆண்டு, தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சாய்பாபா, இச்சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டார். “கம்யூனிசச் சித்தாந்தத்தைப் பரப்பினார்” என்பது அவர்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அதற்கான ஆதாரமாக முன்வைக்கப்பட்டது அவரது மடிக்கணிணியில் இருந்த சில கட்டுரைகள். அவ்வாதாரத்தைக் கொண்டு, அவர் தடை செய்யப்பட்ட மாவோயிச (CPI(ML)) அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தார் என நீதிமன்றம் முடிவு செய்தது. வியப்பு என்னவென்றால், பேராசிரியர் சாய்பாபா 90% உடல் செயல்திறன் பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியின் உதவியுடன் வாழ்பவர்.

கடந்த மாதம் 6ஆம் நாள், பீமா கோரிகானில் நடந்த வன்முறை (ஜனவரி 1) தொடர்பாக, ஆறு சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையைத் தூண்டும் நோக்கில் இந்த ஆறு பேரும் பேசியதாக நம்புவதாகக் காவல்துறையினரால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சான்றுகள் மிகச் சிலவே.

சட்டப்பூர்வமற்ற அல்லது சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் எல்லாம் எவை என்று இச்சட்டம் வரையறை செய்கிறது. யாரெல்லாம் இந்திய இறையாண்மைக்கும், பிராந்திய ஒற்றுமைக்கும் எதிராகக் கேள்விகளை முன்வைக்கிறார்களோ அல்லது இந்தியா மீதான பற்றைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார்களோ அவர்கள் சட்டத்திற்குப் புறம்பானவர்கள் (“disclaims,questions,disrupts or is intended to disrupt the sovereignty and territorial integrity of india”) என்ற ஒரு தெளிவற்ற வரையறையை இச்சட்டம் தருகிறது. இதன்மூலம் அதிகாரத்தில் உள்ளவர்கள், தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் யாருடைய அடிப்படை உரிமைகளிலும் தலையிடும் பேராபத்தை இச்சட்டம் முன்னிறுத்துகிறது.

தடை செய்யப்பட்ட அமைப்புகளில் ஒரு நபர் உறுப்பினரா என்பதற்கு எந்தவொரு வரையறையையும், விளக்கத்தையும் இச்சட்டம் தரவில்லை. மாறாக, இச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கைகள், புத்தகங்கள் அல்லது இதழ்களை வைத்திருந்தது, தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் கூட்டத்தில் பங்கேற்றது போன்றவற்றையே அமைப்புகளின் உறுப்பினர் என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றது.

மேலும், வாரண்ட் இல்லாமல் சோதனை செய்வது, கைப்பற்றுவது, கைது செய்வது, குற்றம் சுமத்தப்பட்டவரைக் குற்றப்பத்திரிக்கை (charge sheet) இல்லாமல் 180 நாட்கள் வரை சிறையில் வைத்திருப்பது போன்ற கட்டற்ற அதிகாரங்களைக் காவல்துறைக்கு இச்சட்டம் வழங்கியுள்ளது.

2014 ஆம் ஆண்டில், இச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் 72.2% பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்னும் புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போது, இது முன்னர் கொண்டு வரப்பட்ட தடா (Terrorist And Disruptive Activities (prevention)act, 1987 (TADA) ), பொடா (Prevention Of Terrorism Act, 2002(POTA) ) போன்ற கொடிய சட்டம் என்பது புலனாகிறது.

உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு, இம்மாதிரியான சட்டங்கள் மூலம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குவது போன்ற கேலிக்கூத்து வேறெதுவும் இருக்க முடியாது.