கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றிருந்த தமிழக மீனவர்களை அடித்து உதைத்துச் சிங்கள இராணுவம் வழக்கம்போல் அட்டூழியம் செய்துள்ளது. வேதாரண்யத்தைச் சார்ந்த செல்லப்பன் என்னும் மீனவர் அத்தாக்குதலில் உயிர் இழந்துள்ளார்.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இக்கொடுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு முறை, சிங்கள் இராணுவம் நம் மீனவர்களைத் துரத்திக் கொண்டே வந்து, பாம்பன் அருகில் உள்ள ஓலைக்குடா என்னும் கிராமத்தில் அவர்களைச் சுட்டுக் கொன்றது. மானமுள்ள ஒரு சிறிய நாடு கூட இதனைப் பொறுத்துக் கொண்டிருக்காது.

சிங்களம் செய்யும் அனைத்துக் கொடுமைகளுக்கும், இந்திய அரசு தொடர்ந்து பரிசுகளை வழங்கிக்கொண்டே இருக்கின்றது. தமிழீழ உறவுகளை அழிப்பதற்கு இந்திய அரசு ராடார் முதலான கருவிகளை வழங்கி உதவியது. அதன் பயன்தான் இன்று அவர்கள் எந்த அச்சமும் இன்றி நம் மீனவர்களையே கொன்று குவிக்கின்றனர்.

அங்கே கிளிநொச்சி, ஆனையிறவு போன்ற பகுதிகளில் புதிதாய் முளைத்திருக்கும் நீலக் கூடாரங்களில் சீன எழுத்துகள் காணப்படுவதாய் சென்று வந்தவர்கள் கூறுகின்றனர். ஆம், இலங்கையைத் தன் நாட்டின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொண்டிருக்கும் சீனா, நாளை இந்தியாவின் மீது போர் தொடுக்க ஒரு வசதியான தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அதனால் என்ன, ஈழப்போரில் இறந்தவன் கரைக்கு அந்தப் பக்கத்தில் இருந்த தமிழன் என்றால், சீனப்போரில் இறப்பவன் கரைக்கு இந்தப் பக்கத்தில் இருக்கும் தமிழனாய் இருப்பான்.

இந்திய அரசுக்குச் சொல்வோம், இனியும் நாங்கள் பொறுப்பதற்கில்லை.

- சுப.வீரபாண்டியன்