அம்மா உணவகம், அம்மா குடிநீரைத் தொடர்ந்து, அம்மா உப்பு, மருந்தகம் என்று தொடர் அறிவிப்புகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கு எல்லா மருந்து மாத்திரைகளும் இலவசமாகத் தான் இதுவரை கொடுக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது அம்மா மருந்தகங் களைத் தொடங்கி, குறைந்த விலையில் மருந்துகளைத் தருகிறேன் என்று அறிவிக் கிறார் தமிழக முதல்வர். இலவசத்திற்கு விலை வைத்து விட்டு, அதனைச் சாதனை என்று கூறி, அத்தனை நாளேடுகளிலும் முழுப்பக்கம் விளம்பரம் கொடுக்கப் படுகிறது. மக்கள் மீது இரண்டு வகைகளில் சுமை ஏற்றப் படுகிறது.

இதில் அம்மா மருந்தகத்தில் 10 முதல் 13 விழுக்காடு விலை குறைவாம். அதைத்தான் மெட்பிளஸ் போன்ற மருத்துவ நிறுவனங்களே கொடுக்கின் றனவே.

இன்னொருபுறம் தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2007ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டு, 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி.

அக்கல்லூரி தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதாலோ என்னவோ, அதுவும் இந்த அரசினால் கேட்பாரற்ற நிலையில் இருக்கிறது. அதில் 100 மாணவர்கள் பயில்கின்றனர்.

அதுபோல திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்களும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் 75 மாணவர்களும் ஆக மொத்தம் 225 மாணவர்கள் மருத்துவர்களாக வர வேண்டிய நிலையில், இன்று அது கேள்விக்குரியதாகிவிட்டது.

அக்கல்லூரிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை, பேராசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, ஆய்வுக் கூடங்கள் நவீனமாக இல்லை என்னும் காரணங்களால் அவை களின் அங்கீகாரம் அகில இந்திய மருத்துவக் கவுன்சிலினால் ரத்தாகும் நிலையில் இருக்கிறது.

அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினைகளை எல்லாம் தொலை நோக்குப் பார்வையில் பார்க்காமல், அதற்குரிய நேரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அம்மா மருந்தகங்களைத் திறக்கத் தொடங்கிவிட்டார் ஜெயலலிதா.

இன்னும் சில ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான மாணவர்கள், தமிழ்நாட்டில் மருத்துவர்களாகத் தேர்வு பெற்றிருப் பார்கள். அந்த வாய்ப்பு நம்மைவிட்டு நழுவிக் கொண்டிருக்கிறது என்பது குறித்து எந்தக் கவலையும் கொள்ளாமல், விளம்பரங்களாலேயே நம் வரிப்பணத் தையும், தமிழகத்தின் எதிர்காலத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.