anna 469“இந்தியை மூன்றாவது மொழியாகக் கற்றுக் கொடுப்பதில் என்ன சிரமம் இருக்கிறது?” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அர்ஜுனன் இளையராஜா என்பவர் தொடுத்திருக்கும் பொதுநல வழக்கு விசாரணையின் போது கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

 மும்மொழிக் கொள்கை என்ற வகையில் இந்தியைத்தான் திணிக்கிறார்கள். மூன்றாம் மொழியாக இந்தியைப் படிக்க வேண்டிய கட்டாயம் என்ன இருக்கிறது என்று கேட்க வேண்டி இருக்கிறது.

இந்தி படித்தால் வேலை வாய்ப்பிற்கு உதவியாக இருக்கும் என்று கருதுகிறார்கள். ஏற்கெனவே இந்தியைத் தமிழ் நாட்டில் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தி பிரச்சார சபா மூலம் படிக்கிறார்கள், ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கிறவர்கள், கான்வென்ட்டில் படிக்கிறவர்கள் இந்தி படிக்கிறார்கள்.

எனக்குக் கிடைத்தத் தரவுகளின் படி கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி மக்களுக்கு இந்தி தெரியும். இந்த ஒன்றரைக் கோடி மக்களில் எத்தனை பேர் இந்தி மாநிலங்களில் வேலை பார்க்கச் சென்று இருக்கிறார்கள். மிகக் குறைவுதான். அப்படி இந்தி மாநிலங்களுக்குச் செல்பவர்கள் முன்னரே இந்தி படித்து விட்டுப் போகிறார்கள்.

எப்போதுமே அரசியல் வணிகத் தொடர்பு தமிழ்நாட்டிற்கும் வட மாநிலங்களுக்கும் இருக்கிறது. மும்மொழியைப் படித்துவிட்டு யாரும் செல்வதில்லை. போகிறவர்கள் இந்தி படித்துவிட்டு, தெரிந்து கொண்டு போகிறார்கள்.

ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால் அந்த 40 மாணவர்களும் இந்தி மாநிலங்களுக்குப் போவதில்லை. ஓரிருவர்தான் போவார்கள். எதற்காக மற்ற மாணவர்களை இந்தி கற்க வைத்துத் துன்புறுத்த வேண்டும்? அதற்கான அவசியம் என்ன என்கிற கேள்விதான் நம்முடைய வாதம்.

 அடுத்தபடியாக மும்மொழிக் கொள்கையை நம்மை மட்டும்தான் பின்பற்றச் சொல்கிறார்கள். கர்நாடகாவில், ஆந்திராவில், கேரளாவில் மும்மொழிக் கொள்கை இருக்கிறது என்று சொல்கிறார்களே தவிர, உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறது பீகாரில் இருக்கிறது என்று சொல்ல மாட்டார்கள். ஏனெனில் அங்கே எல்லாம் ஒரு மொழிக்கொள்கை - இந்தி மட்டும்தான். அங்கு ஆங்கிலம் கூட பள்ளியில் எல்லோரும் படிப்பதில்லை. அவர்கள் இந்தி மட்டும் படித்தால் போதும். ஆனால் நமக்கு அப்படி இல்லை, நாம் தமிழ் மட்டும் படிப்பதில்லை. ஆங்கிலத்தையும் சேர்த்துப் படிக்கிறோம்.

தமிழை மட்டும் படித்தால் போதாது என்பதற்காகத்தான் அண்ணா தமிழையும் ஆங்கிலத்தையும் இருமொழிக் கொள்கையாக அறிவித்தார். இந்த இரு மொழிக் கொள்கை இருப்பதினால்தான், மாணவர்கள் ஆங்கிலத்தைப் படித்ததினால்தான் சிலர் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள். அறிவியல் தொழில்நுட்பம் போன்ற எல்லாத் துறைகளிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். அண்ணாவின் இருமொழிக் கொள்கை தந்த வெற்றிதான் இது.

இதை நாம் சொல்ல வேண்டும் என்பதில்லை. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், இந்தியாவின் துணைப் பிரதமராக இருந்தவருமான திரு எல்.கே.அத்வானி அவர்கள் லக்னோ பல்கலைக்கழகத்தில் பேசும்போது, தென்னிந்தியர்கள் ஆங்கிலம் படிப்பதால் ஐரோப்பா அமெரிக்கா என உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள், நீங்கள் இந்தியை மட்டும் படிப்பதால் இங்கேயே இருக்கிறீர்கள், எனவே நீங்களும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்று சொன்னார்.

எனவே அண்ணாவின் இரு மொழிக் கொள்கை என்பது கொள்கை அல்ல, அது தமிழர்களுக்கு அண்ணாவின் கொடை.

பேராசிரியர் அ.இராமசாமி, துணைத்தலைவர், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்