10 லட்ச ரூபாய்க்குக் கோட்டுப் போட்டுக்கொள்வதும், ஊர் சுற்றுவதும், நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதங்களில் கலந்துகொள்ளப் பயந்து ஒதுங்குவதுமாக உள்ள ஒருவர் இந்தியாவின் பிரதமர்.

நாட்டை முன்னேற்றப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு இவரால் நாட்டு மக்கள் அடையும் இன்னல்கள் சொல்லி மாளாது.

குறிப்பாக, தமிழகத்தின் நிலை படுமோசமாகிக் கொண்டு இருக்கிறது.

கடந்த 9ஆம் தேதி முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வத்தின் அனுமதியுடன் மின் துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில் டெல்லியில் ‘உதய்’ என்ற திட்டத்திற்கு அனுமதி வழங்கிக் கையெழுத்து இட்டு இருக்கிறார்கள் அதிகாரிகள்.

டிசம்பர் 5ஆம் தேதி மறைவுற்ற முதல்வர் ஜெயலலிதா, தான் மறையும் வரை இத்திட்டத்தை எதிர்த்தார்.

இன்றைய அரசு மோடிக்கு ‘ஜால்ரா’ தட்டிக்கொண்டு இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

உதய் என்ற இத்திட்டத்தின் படி மின்கட்டணம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். அதாவது மாறுதல் என்ற பெயரில் திணிக்கும் கட்டண உயர்வு இது.

இத்திட்டத்தில் செலவில் 75 விழுக்காடு தமிழக அரசு ஏற்க வேண்டும். 25 விழுக்காடு பாண்டு மூலம் வங்கியில் செலுத்த வேண்டும்.

இதனால் தமிழக அரசுக்கு கடும் நிதிச் சுமை ஏற்படும்.

உதய் திட்டத்தால் இலவச மின்சாரம் நிறுத்தப்படும். இதனால் விவசாயம், குடிசைப்பகுதி மக்களின் நிலை கடும் பாதிப்புக்கு உள்ளாகும்.

இதுவரை அரசிடம் இருந்த மின்வாரியம், மக்களின் தேவைக்காக மின்சாரம் வழங்கி வந்தது.

உதய் திட்டத்தால் மின்வாரியம் கார்பரேட் பெரு முதலாளியிடம் போய்விடும். ஆகவே இனி மின்சாரம் இலாப நோக்கம் கருதும் வணிகமாக மாறிவிடும்.

இப்பொழுது இருக்கும் 57 விழுக்காடு மின்சார கட்டணம் இனி தாறுமாறாக ஏறிக்கொண்டே போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதுவரை மின்தடை அல்லது கோளாறு ஏற்பட்டால் அரசின் மின்வாரியத்தில் சொல்லிச் சரிசெய்யலாம்.

உதய் திட்டத்தால் தனியார் மயமாகும் போது யாரிடம் முறையிடுவது, எப்படிச் சரிசெய்வது?

இரயில்வே, சேலம் இரும்பாலை, ஊட்டி படச்சுருள் நிறுவனம், வங்கி என்று அரசு நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவாத்து விடத் துடிக்கும், பாசிச பா.ஜ.க மோடி அரசு மின்சாரத்தையும் கார்பரேட் பெரு முதலாளிகளிடம் ஒப்படைத்துவிடத் துடித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு அ.தி.மு.க அரசும் துணை போய்விட்டது.

மக்களுக்காக அரசு என்பது மாறி, அரசுக்காக மக்கள் என்ற நிலை இன்று உறுவாக்கப்பட்டு விட்டது.

மின்சாரத்தைத் தொட்டால் மரணம்.

மத்திய மாநில அரசுகள் இப்பொழுது மின்சாரத்தில் கைவைத்து விட்டன.

விளைவு...

மக்கள் காண்பிக்கத்தான் போகிறார்கள்...