women with dmk flagநடந்து முடிந்திருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி என்பது மக்கள் இந்த ஆட்சியின் மீது தெரிவித்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. எனவே இது ஒரு மகத்தான வெற்றி. இந்த வெற்றியை நாம் கொண்டாடுவதற்கு அனைத்துக் காரணிகளும் இருக்கின்றன. ஏனென்றால் திராவிட இயக்கத்தின் ஆட்சியில் மிக நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு எந்தத் தங்குதடையும் இன்றி, இது திராவிட இயக்கத்தினுடைய, திராவிட வரலாற்றினுடைய ஆட்சிதான் என்பதைப் பல வழிகளிலும் மிக உறுதியாக திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துக் கொண்டிருக்கிற வேளையில், மக்கள் இந்த நம்பிக்கையை அளித்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இடையில் திராவிட இயக்கத்தின் ஆட்சியாக இருந்தாலும் நிறைய சமரசங்களோடு நடைபெற்றிருக்கிறது. ஆனால் இன்று, நாங்கள் இந்தியாவிற்கே தலைமை தரக்கூடிய நிலையில் இருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மிகத் தெளிவாக தன்னுடைய நிலைப்பாடுகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த வெற்றி என்பது அவரது நிலைப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம், பெண்களுக்கு 11 மாநகராட்சிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டின் வரலாற்றில் சாதிய அடிப்படை தூக்கிப் பிடிக்கப்பட்ட அளவிற்குப் பாலின அடிப்படை தூக்கி பிடிக்கப்படவில்லை. பஞ்சாயத்துகளில் பாலின அடிப்படையில் உள் ஒதுக்கீடு என்பது தமிழகத்திற்கு வெளியில் இருந்துதான் வந்திருக்கிறது. ஆனால் இன்று அதில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது திராவிட இயக்கத்தின் குறிப்பான பங்களிப்பாகும்.  இதில் உச்சபட்ச சிறப்பாக சென்னை மாநகராட்சி என்பது ஒரு பட்டியல் சமூகப் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தலைமையின் மீது பல்வேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன. அவர்கள் ஆண்களின் பினாமியாகச் செயல்படுகிறார்கள் என்று பல இடங்களில் சொல்லப்பட்டாலும், அது எதார்த்தமாக இருந்த போதிலும் கூட, அதனையும் மீறி பெரு வெடிப்புகளாகப் பெண்கள் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த 11 இடங்கள் பெண்களின் தலைமையின் கீழ் வரப்போகிறது என்பதையும், அதில் அந்தப் பெண்கள் என்ன மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறார்கள் என்பதையும் வரலாறு உற்று கவனிக்கப் போகிறது. பெண்கள் தலைமைப் பதவிக்கு வரும்போது என்ன செய்துவிடப் போகிறார்கள் என்கிற கேள்விகள் எல்லாம் நம்மைச் சுற்றி வரும். இதற்கெல்லாம் அந்தப் பெண்கள் சரியான சிறப்பான பதிலை எழுதுவார்கள், அவ்விதமே ஒரு மாற்றமான பதிலைத்தருவார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

குறிப்பிடத்தக்க வகையில் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி, பட்டியல் சமூகப் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டு அவர் இன்று மேயராகப் பொறுப்பேற்க இருக்கிறார் என்பது சிறப்பான நிகழ்வாகும். இதைச் சொல்லும் போது இரண்டு விதமான கருத்துகள் வரலாம். ஒன்று இன்னும் இட ஒதுக்கீட்டின் மூலமாகத்தான் பட்டியல் சமூக பெண்கள் தலைமைப் பதவிக்கு வர முடிகிறது. ஏன் அவர்கள் பொதுவான இடங்களில் வெற்றி பெற்று வர முடியவில்லை என்கிற கருத்து வரலாம். அப்படி இட ஒதுக்கீடு இல்லாமல் பொதுவான இடங்களில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்கள் வெற்றி பெற்று வரவேண்டும் என்பதுதான் நம்முடைய கனவு விருப்பமெல்லாம். ஆனால் நாம் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்பது ஒரு வருத்தமான உண்மை. அதிலும் பெண்களை இடஒதுக்கீடு மூலமாகத்தான் கொண்டு வர வேண்டியிருக்கிறது. இடஒதுக்கீடு இல்லை என்றால் இத்தனைப் பெண்கள் வரையலுமா? அதற்கான வாய்ப்புகள் சமூகத்தில் இல்லை. மேலும் சாதிய அடிப்படையிலான இடஒதுக்கீடுகள் சாதி மறைந்து போகும் போது முடிவுக்கு வந்துவிடும். ஆனால் பாலின அடிப்படையிலான இடஒதுக்கீடு நம்நாட்டில் மட்டுமல்ல, உலக அளவில் கொண்டு வரப்பட்டு  நிரந்தரமாகப் பேணப்பட வேண்டிய ஒன்றாகும். இது இயற்கையின் நியதி.

இன்னொரு பக்கம் பட்டியல் சமூக மக்களுக்கு அதிகார மையத்தில் எவ்வளவு பங்கு இருக்கிறது என்கிற கேள்வி இன்று மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. வரலாற்றைப் பார்க்கும்போது, மீனாம்பாள் சிவராஜ், சத்தியவாணி முத்து அம்மையார் போன்றோர் தனித்துத் தெரிகிறார்கள்.

அன்றும் சரி இன்றும் சரி திராவிட இயக்கம்தான் இதற்குக் கால்கோள் நிறுவி இன்று வரை அதன் தொடர்ச்சியை எடுத்துக்கொண்டு வருகிறது. அன்று மீனாம்பாள் சிவராஜ் நீதிக்கட்சியின் சாதனைகளுக்குச் சாட்சியானார். இன்று வர இருக்கும் பெண் மேயர் நீதிக் கட்சியின் தொடர்ச்சியான திராவிட இயக்க வெற்றிக்குச் சாட்சியாகிறார். இது திராவிட இயக்கத்தின் ஒரு அரசியல் செயல்திட்டமாக இருந்து வருகிறது. வாழ்க திராவிட இயக்கப் பாரம்பரியம்!

எனவே இந்த இடஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட சமூகங்களை மேல் எழுப்புவதற்காக தரப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் அவர்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பணியாற்றிட வேண்டும் அதேநேரம் தங்கள் சமூகத்திற்கும் அடிமைத்தனத்திலிருந்து வெளிவரவும், விழிப்புணர்வு பெறவும், மேலெழும்பவும் பணியாற்ற வேண்டும்.

ஓவியா, புதிய குரல்