fishermen 338தமிழ்நாடு மீனவர்கள் 68 பேர் இலங்கை கடற்படையால் கைது. 10 படகுகள் பறிக்கப்பட்டன. மீட்கக் கோரி மீனவர்கள் போராட்டம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம்.

இது இந்த வாரச் செய்தி மட்டும் அல்ல. எண்ணிக்கையும் பெயர்களும் மாறி மாறி வரும் பல்லாண்டு காலச் செய்திதான். விடுதலை இந்தியாவில் தமிழ்நாடு காவேரி மட்டும் அல்ல, கடல் எல்லையும் இழந்து உள்ளது. பாரம்பரிய எல்லையில் மீன் பிடிப்பதை வாழ்க்கை முறையாகக் கொண்டுள்ள மீனவர்கள், விடுதலை இந்தியாவில் உரிமையை இழந்தனர்.

சர்வதேசச் சட்டங்கள் பாரம்பரிய மீன்பிடி எல்லைகளை மீனவர்கள் பயன்படுத்த அனுமதிக்கின்றன. இருநாட்டு உறவுகள் மீனவர் உரிமைகளைப் பாதிக்கக் கூடாது என்கின்றன. ஆனால் இந்தச் சட்டங்கள் மருந்துக்கும் மதிக்கப்படுவதில்லை. மீனவர்கள் சிறைப்படுத்தப்படுவது அல்லது கொல்லப்படுவது தொடர் கதையாகி வருகின்றது.

முறைப்படி அனுமதி பெற்று மீன்பிடியில் ஈடுபடச் சென்ற மீனவர்களை முதலில் இராமேஸ்வரப் பகுதியைச் சார்ந்த 55 பேர் இலங்கைக் கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டு உள்ளனர். பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் பிடித்துச் செல்லப்பட்டு உள்ளனர். இது மீனவர்கள் நடுவே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மீனவர்கள் இந்துகள் மட்டும் இல்லை கணிசமான அளவு கிறிஸ்தவர்கள் உள்ளனர். கிருஸ்மஸ் விழா நெருங்கும் நேரத்தில் நடைபெறும் இந்தத் தொடர் கைது, அவர்களின் மதம் சார்ந்த விழாவை முடக்கிப் போடும் என்பதில் அய்யம் இல்லை. இந்தக் கோணத்திலும் பார்க்க வேண்டியுள்ளது.

பிடிபட்ட மீனவர்களுக்குக் கொரோனா பரிசோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது, சரி. ஆனால் கிருமிநாசிகள் தெளிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல் அவர்களின் இழிவான பார்வையின் வெளிப்பாடு. இவை மனித உரிமை மீறல் ஆகும். இது போன்ற இழிவானப் பாரபட்சமான நடவடிக்கைகள் இந்தியத் துணைக் கண்டத்திற்குப் புதியது அல்ல. பாரம்பரியப் பண்பாடோடு கலந்ததே ஆகும். அதனாலோ என்னவோ இது போன்ற நடவடிக்கையில் ஒருவர் பாதிக்கப்படும் பொழுது, அவரின் மனவேதனை மற்றவர்களுக்குக் குறிப்பாக ஒன்றிய அரசுக்குப் புரிவதில்லை.

இந்தக் கைதுகளை ஒன்றிய அரசின் கவனத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இரு முறையும் கொண்டு சென்று உள்ளார். முதல் முறை கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்பட்டது. இரண்டாவது முறை கடிதத்தை திமுக எம்பி-கள் நேரில் சென்று வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வழங்கினர்.

இதில் அச்சமூட்டும் நிகழ்வுகளில் இலங்கை ஈடுபடுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், நமது பாரம்பரியப் பகுதிகளில் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும், மீனவர்களையும் அவர்தம் உடைமைகளையும் பாதுகாப்பதும் நமது கடமையாகும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

வெளியுறவுத் துறையைக் கையில் வைத்திருக்கும் ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு கடிதம் எழுதும் வரை, நடந்தவைக் குறித்து எதுவும் தெரியாதா என்ன? உலகின் மிகப்பெரியக் கடற்கரை வைத்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவின் மீனவர் சார்ந்த பார்வைதான் என்ன? தெற்காசிய நாடுகளில் வல்லாதிக்க நாடாக இருக்கும் இந்தியாவிற்குத் தனது குடிமக்கள் கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும், அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும், பொருட்கள் சேதப்படுத்தப்படுவது குறித்தும் எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை.

அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள் என்பது பழமொழி. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி ஒன்றிய அரசுகளுக்குத் தன் நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை எனில், இந்த அரசுக்கு எதற்கு இவ்வளவு பெரியக் கடற்படை எனக் கேட்கத் தோன்றுகின்றது.

தெற்காசிய நாடுகளுக்கு மனிதர்களின் வாழும் உரிமை மதிக்கும் பண்பு மனதளவில் இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டியது இருக்கின்றது. தங்களது வல்லாதிக்கத்தை நிலை நிறுத்தும் போக்கே முக்கியமானது எனும் குறுகியப் பண்பாட்டுக் கூறுகளில் இருந்து வெளிவர வேண்டும். இந்தக் குறுகியப் பண்பாட்டுக் கூறை, ஒவ்வொரு உள்ளூர் வீதிகளுக்குள்ளும் காண முடியும் என்பது வேதனை.

ஒன்றிய அரசு தனது வெளியுறவுத்துறை மூலம் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நிரந்தர முடிவைப் பெற்றுத் தர வேண்டும். மற்றும் மீனவர்கள் பாதுகாப்பையும் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளையும் உறுதி செய்ய வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தலின் படி ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

- மதிவாணன்