“மக்களின் தேவைக்காக அமைக்கப்படுவதே அரசு” என்கிறார் சாக்கரடீஸ் என்பதைத் தன் “குடியரசு” நூலில் பதிவு செய்கிறார் பிளேட்டோ.

இதைச் சில மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

ஒரு பக்கம் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை ஒன்றைக் கட்டியே தீருவோம் என்கிறது கர்நாடகம்.இதனால் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் பற்றாக்குறை நீரையும், வரவிடாமல் தடுக்கப் பார்க்கிறது அம்மாநில அரசு.

இன்னொரு பக்கம் முல்லைப் பெரியாறு அணை பலம் இழந்துவிட்டது, இடியப் போகிறது என்று சொல்லிச் சொல்லி அணையை இடித்துத் தள்ளக் குதித்துக் கொண்டிருக்கிறது கேரளம்.

தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள், அணையின் வலிமையை அது கட்டப்பட்ட காலத்தைக் கொண்டுப் பார்க்கக் கூடாது. அணையின் கட்டுமானம், பராமரிப்பு உள்ளிட்டவைகளைக் கொண்டு பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் கேரளம் குதிப்பதை விடவில்லை.

வேளாண் நிலங்கள், குடிநீர் பயன்பாட்டிற்காகக் கட்டப்படும் அணை குறித்த உரிமை அந்தந்த மாநிலத்திற்கே உரியது. அது பிற மாநிலங்களைப் பாதிக்கக் கூடாது. இவைகளை எல்லாம் இன்றைய ஒன்றிய அரசால் தீர்த்து வைக்க முடியவில்லை. ஆனால் மாநில உரிமைகளைப் படிப்படியாகப் பிடுங்கும் வேலையை மட்டும் செய்து வருகிறது.

அண்மையில் அணைப் பாதுகாப்புச் சட்ட முன்வடிவு நாடாளுமன்ற இரு அவைகளிலும் கொண்டு வரப்பட்டது.

அதன் மீதான விவாதத்தில் தி.மு.க சார்பில் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க சார்பில் வைகோ, அ.தி.மு.க சார்பில் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட உறுப்பினர்களும், காங்கிரஸ், திருணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இச்சட்ட முன்வடிவை எதிர்த்துப் பேசியுள்ளார்கள்.

ஆனாலும் தனக்கிருக்கும் உறுப்பினர்கள் பலத்தை வைத்து அதை சட்ட மாக்கிக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி விட்டது பா.ஜ.க. ஒன்றிய அரசு. இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளான அவை உறுப்பினர்களையும் அவர்களின் பேச்சையும், எதிர்ப்பையும் கூட மதிக்காமலும், கனிவுடன் பார்க்கவும் மறுக்கிறது பா.ஜ.க. ஒன்றிய அரசு.

நாட்டின் பன்மைத்துவத்தை மறுத்து, அத்வைதம் போல ஒருமைக் கோட்பாட்டை, சனாதன ‘ ராமராஜ்ய’த்தை அமைக்கத் துடிக்கும் இந்துத்துவ சக்திகளின் பின்னணியில் இருந்து கொண்டு, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் சர்வாதிகாரத்தைத் தவிர்த்துக் கொண்டு மக்களின் அரசாக, மாநிலங்களின் உரிமைகளில் தலையிடாத அரசாக எஞ்சி இருக்கும் ஆண்டுகளை ஒன்றிய பா.ஜ.க அரசு நிறைவு செய்ய வேண்டும் என்பதே மக்களின் விருப்பமும், எதிர்பார்ப்பும் ஆகும்!