தமிழக அரசியல் வரலாற்றிலேயே உள்ளாட்சித் தேர்தலில் இத்தனை குழப்பங்கள், தவறுகள், முன்னெப்போதும் நடந்ததில்லை. இதற்கெல்லாம் தகுதியற்றுத்தான் 1996க்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலே நடைபெறவில்லை போலும்!

சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம்.

election votingஊராட்சி மன்ற அலுவலகம் அது. நாற்காலியின் நுனியில் அமர்ந்திருந்தார் அவர். யாராவது வந்து எழச் சொல்லலாம், ”வெளியே போ” என்று அதட்டலாம் என்ற பயத்தில் அமர்ந்திருந்தார் போலும். அப்படித்தான் அவர் உடல்மொழி இருந்தது. இத்தனைக்கும் அவர்தான் ஊராட்சித் தலைவர். அங்குள்ளவர்களுக்குச் சரிசமமாக இவரைப் போன்றவர்கள் அமர்வார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நெடுங்காலமாகத் தேர்தல் நடக்க விடாமல், நடந்தால் தங்களுக்குள் வேண்டப்பட்ட ஒருவரை நிறுத்தி, பின்னர் பதவி விலகச் செய்ய வைக்கும் சாதிய வாதிகள் பெரும்பான்மையாக உள்ள ஊர் அது.

அந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள பாப்பாபட்டி. இதே போல் சாதிக் கட்டுமானம் உள்ள கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டாங்கச்சியேந்தல் போன்ற ஊர்ப் பெயர்களும் அவ்வப்போது செய்தித்தாள்களில் வரும், அப்பொதெல்லாம்.

பின்னர் தேர்தல் நடைபெற்று ஊராட்சி மன்றத் தலைவர்கள் அந்தந்த ஊர்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் ஒருவர்தான் நான் மேலே குறிப்பிட்டுள்ளவரும், தனது பதவியேற்பின்போது நாற்காலியின் ஓரத்தில் அமர்ந்திருந்தவருமான பெரிய கருப்பன்.

பின்னர் நிகழ்ந்த கதைகள் நிறைய உண்டெனினும் 2006-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் தலைமையிலான திமுக அரசுதான் அங்கு தேர்தல் நடந்தே ஆக வேண்டும்,

ஜனநாயகம் எனும் மாளிகையின் வாசலுக்காவது தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களும் வரவேண்டும் என ஒற்றைக்காலில் நின்று அதை நடத்தி முடித்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் த.உதயச்சந்திரன் அவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, சாதுர்யமாகவும்,  விரைவாகவும் செயல்பட்டு அப்போது தேர்தல் நடைபெற்றது. அதன்விளைவாக, தனி ஊராட்சிகளான பாப்பாபட்டியில் பெரிய கருப்பன், கீரிப்பட்டியில் பாலுச்சாமி, நாட்டார்மங்கல்த்தில் கணேசன், கொட்டாங்கச்சியேந்தலில் கருப்பன் ஆகியோர் வெற்றி பெற்றுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட்டனர்.

இதற்கெல்லாம் முன்முயற்சியாகக் கலைஞர் அரசு அங்கிருந்த மற்ற சமுதாய மக்களை அழைத்துப் பேசி, சமத்துவத்தை ஏற்படுத்தி, ‘‘சமத்துவப் பெருவிழா”வெல்லாம் நடத்தி, போட்டியிட்டவர்களுக்கு ஊக்கமளித்து, பாதுகாப்பளித்து, தேர்தல் சுமுகமாக நடந்தால் ஊர் மேம்பாட்டுக்காக அதிக நிதி ஒதுக்கப்படும் என்றெல்லாம் அறிவித்து, பின்னர் நடந்த தேர்தல் அது.

பெரியாரை வழிகாட்டியாகக் கொண்டு, சமூக நீதியைப் பேணிக் காக்கும் ஓர் அரசு எப்படி இயங்கவேண்டும் என்பதற்கான இலக்கணத்தை நிரூபித்த வரலாற்றுத் தருணம் அது.

ஒரு தனிநபரோ, அரசு இயந்திரத்துக்குச் சம்பந்தமில்லாத ஒரு கூட்டமோ, விழிப்புணர்வில்லாத ஒரு கும்பலோ, சாதிவெறி தலைக்கேறிய சமூகத்தின் ஒரு பகுதியோ மேற்சொன்ன மாதிரித் தவறிழைத்தால் அதைத் திருத்த வேண்டிய பொறுப்பு ஒரு அரசுக்கு இருக்கிறது. ஆனால் அரசே இந்த ஜனநாயக வன்முறையைப் பிரயோகித்தால்? தற்போது ஆட்சி பீடத்தில் மகுடம் சூடியிருக்கும் எடப்பாடி தலைமையிலான அரசு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிப் பகுதிகளுக்குச் சரிவர வார்டு வரையறை செய்யப்படவில்லை என்பது அனைத்துக் கட்சியினரும் ஒப்புக் கொள்ளும் உண்மை. பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதிக்குள் வரும் வார்டு அமைப்பு, உள்ளாட்சித் தேர்தலின் போது வேறு ஒரு தொகுதிக்குள் செல்லக்கூடாது. இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நிறையக் குழப்பம் இருந்தாலும் கூட நாம் இதில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்தி என்னவெனில் சமூக நீதி சரிவரப் பின்பற்றப்படுகிறதா என்பதுதான். திமுக தொடர்ந்த வழக்கும் இதன் அடிப்படையில்தான். இந்த வரையறைகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சிமுறையைப் பின்பற்றாமலும், அவசர கதியில் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது, எடப்பாடி அரசின் கைப்பாவையாக விளங்கும் மாநிலத் தேர்தல் ஆணையம்.

பெண்களுக்கு 50 சதவிகிதம், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவிகிதம் என்பதைப் புதிய மாவட்டங்களுக்கு மட்டுமன்றி இன்னும் பழைய மாவட்டங்களுக்கும் கூட வரையறை செய்யாத நிலையில், அதற்கு முயற்சிக்காமல் “பேடி கை வாளாண்மை” போலச் செயல்படும் இந்த அரசு கடும் கண்டனத்தைப் பொது வெளியில் எதிர்கொள்கிறது என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

நகர்ப்பகுதிகளுக்குத் தேர்தல் இல்லை என்றும், ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் என்றும் சொன்னவர்கள் இப்போது அதிலும் ஒரு வெட்டு வெட்டுகிறார்கள். 9 மாவட்டங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாம். இவர்கள் தேர்தல் நடத்துவது ஜனநாயகத்தைக் காக்க என்று யாரும் இன்னும் நம்பிக்கொண்டிருந்தால் அய்யோ பாவம், அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

பின் ஏன் அவர்கள் மெனக்கெட வேண்டும்? அவர்களின் நோக்கம் நமக்குத் தெரியாமலில்லை. அவர்கள் கண்களுக்குத் தெரிவது நமக்கும் தெரிகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் நிதி, மத்திய அரசால் வழங்கப்படாமல் இருக்கும் அந்த நிதிதான் அவர்கள் கண்ணை உறுத்துகிறது. இருக்கிற அனைத்துத் துறைகள் மூலமும் நல்ல வரும்படி பார்த்த கை இந்தத் துறையை விட்டுவிடுமா?

கிணறு வெட்டாமலும், அதை மூடாமலும் அவர்கள் கடைசியாய் எழுதப்போகும் கணக்குதான் அவர்களின் இத்தனை நாடகங்களுக்கும் காரணம். ஆனால் அதுவே அவர்களின் கடைசிக் கணக்கென அவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். அதற்குத்தான் இத்தனை அக்கறையோடு எலி அரிசி மூட்டையை அவிழ்க்குமே அதுபோல வேகமாகச் செயல்படுகிறார்கள்.

ஆங்காங்கே பெரிய அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுப் பதவிகள் ஏலம் எடுக்கப்படுகின்றன. கடந்த 7-ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளிவந்து 9-ஆம் தேதி மனுத்தாக்கல் தொடங்கி, இன்னும் அதிமுக சார்பு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் பல இடங்களில் வெளிப்படையாக ஏலம் நடைபெறுகிறது. பண்ருட்டி அருகே ஊராட்சித் தலைவர் பதவியை 50 லட்சத்திற்கு  ஏலம் எடுத்துள்ளார் அப்பகுதி அதிமுக பிரமுகர். துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சம் ‘ஒரு தரம், இரண்டு தரம்’ என்று கூப்பாடு போடும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிக் கிடக்கிறது.

2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி வரும் 27, 30-ஆம் தேதிகளில் தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். 2011ஆம் ஆண்டில் தமிழக மக்கள் தொகை 7.14 கோடியாகும். அதற்கு முன் 2001ஆம் ஆண்டில் தமிழக மக்கள் தொகையானது 6.21 கோடியாக இருந்தது. இந்த வளர்ச்சியின் அடிப்படையில் 2018-ஆம் ஆண்டு மக்கள் தொகை 8.12 கோடி எனப் புள்ளி

விவரங்கள் சொல்கின்றன. 2018ல் 5.18 கோடி பேர் வாக்காளர்கள் இருக்கிறார்கள் எனவும் புள்ளிவிவரம் சொல்கிறது. ஆக, வாக்காளர்கள் எண்ணிக்கை உயரும்போது அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் படி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது.

ஆனால் 1991-ஆம் ஆண்டு வரையறையை மாற்றாமலே தேர்தலை நடத்த முற்படுகிறது அரசு. 1991 வரையறையின்படி நாம் மக்கள் தொகையைக் கணக்கிட்டுத் தேர்தல் நடத்த முற்படுகையில் தார்மீக ரீதியாக மட்டுமல்ல, தர்க்க ரீதியாகத் தவறாக அமையும். எனவே முறையாகவும், முழுமையாகவும் 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின் படி வரையறை செய்துவிட்டுத் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் மேல்முறையீட்டில் தெரிவித்தனர் திமுக மற்றும் இதரக் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்.

நீதிமன்றத்தில் இறுதியாக 2011 மக்கள் தொகைக் கணக்கீட்டின் படிதான் நடத்துகிறோம் என ஒப்புக்குச் சொல்லிவிட்டுத் தன் பணியைத் தொடங்கிவிட்டது எடப்பாடி அரசு.
தமிழக மக்களான நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. 2006-இல் இருந்த கலைஞர் தலைமையிலான அரசையும், தற்போதுள்ள அடிமைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய தருணம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது.

நாம் செய்ய வேண்டிய காரியங்கள், ஒன்று சமூக நீதியைப் புறந்தள்ளும், ஜனநாயக வன்முறையை ஏவும் சமூக விரோதிகளைப் புறந்தள்ளுவோம்.

இரண்டு சமூக நீதிக்காகப் போராடும், இன நலன், மொழி நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும், தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்தை ஆதரிப்போம்.

அவர் முன்னின்று நிறைவேற்றிய தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல், உள்ளாட்சி அமைப்புகளே இல்லாமல் தங்களுடைய குறைகளையும் தேவைகளையும் பிரதிபலிக்கும் வாய்ப்பின்றி, வாய்ப்பூட்டுப் போடப்பட்டு அல்லலுக்கு ஆளாகி வரும் தமிழக மக்கள் திமுக பக்கம் நின்று பேராதரவை நல்கிடுவோம்.