இலங்கையில் இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே அந்நாட்டின் தேசிய கீதம் பாடப்படும், தமிழ் மொழியில் இதுவரைப் பாடப்பட்டு வந்த தேசிய கீதப்பாடல் அகற்றப்படும் என்று கொழும்பில் கூடிய அமைச்சரவையில் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார்.

ராஜபக்சே ஓர் இனவெறியன், தமிழர்களைப் பூண்டோடு அழிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் மனிதநேயம் அற்ற ஒரு விலங்காண்டி என்பதை கடந்த காலங்களில் ஈழத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் மூலம் உலகமே அறிந்துள்ளது.

ஈழத்தில் மட்டுமின்றி, இலங்கையின் தலைநகர் கொழும்பில் வாழும் தமிழ் இளைஞர்களும், விசாரணையின்றி இராணுவத் தினரால் கொண்டு செல்லப்படுகின்றனர். அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் இருக்கிறார்கள்.

நடந்து முடிந்த போருக்குப் பின்னர் வதை முகாம்களில் வாடி வதங்கும் ஈழத் தமிழர்களைச் சிறுகச் சிறுகச் சாகடிக்கும் வேலையை ராஜபக்சே செய்து வருகிறார்.

இந்த வழியில் தமிழர்களை மட்டுமின்றி, தமிழ் மொழியையும் அழிக்கத் திட்டமிட்டு இருக்கும் ராஜபக்சே, அதன் முன் நடவடிக்கை யாகத்தான் இலங்கையில் தமிழில் இனி தேசிய கீதம் பாடக் கூடாது என்று அறிவித்துள்ளார்.

இலங்கையின் தொன்மை வரலாறு, அத்தீவின் முதல்குடி மக்கள் தமிழர்கள் என்றும், முழு இலங்கையும் தமிழர்களுடையது என்றும் தெளிவாகச் சொல்கிறது ‡ சான்றுகளும் உள்ளன.

பின்னர் அங்கு வந்தேறிகளாகக் குடியமர்ந்த சிங்கள இனம், தமிழர்கள் மீது இனப்பகை கொண்டு, பலநூறு ஆண்டுகளாகத் தொடுத்து வரும் தாக்குதலில், 1950 கால கட்டங்களில் தமிழும் பாதிக்கப்பட்டது.

ஆனாலும் தமிழர்களின் போராட்டத்தினால், தமிழை அவர்களால் அசைக்க முடியவில்லை.

இன்று தமிழை ஒழிப்பதற்காக முதலில் தமிழில் பாடக்கூடாது என்று சொல்லும் அளவுக்கு ராஜபக்சே தன் இனவெறியைக் காட்டிவிட்டார்.

இலங்கை ஒருதேசிய இன நாடு அன்று. தமிழ்த் தேசிய இனம், சிங்களத் தேசிய இனம் என்று இரு தேசிய இனங்களைக் கொண்ட நாடு அது. தமிழில் பாடக்கூடாது என்று சொல்ல, ராஜபக்சேவுக்கு எந்த அருகதையும் கிடையாது.

இதற்கு எதிர்ப்புகள் வலுத்தவுடன், அப்படி எந்த ஆனையும் பிறப்பிக்கப்படவில்லை என்று இப்போது சிங்கள அரசு சொல்கிறது.