periyar and soundrapandiyanarதமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் மூலம் வெளிவரும் ஒன்று முதல் 12ஆம் வகுப்புப் பள்ளிப் பாடநூல்களில், தலைவர்களின் பெயருக்குப்பின் இருக்கும் சாதிப் பெயர்கள் நீக்கப் பட்டிருக்கின்றன என்ற செய்தி தேனாய்த் தித்திக்கிறது.

தமிழ்நாட்டில் சாதிக்கு எதிராகச் சமூகப் போராட்டத்தை முன்னெடுத்தவர், போராடியவர் ஐயா தந்தை பெரியார்.

1929ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை மாநாட்டில் மக்கள் தங்கள் பெயர்களில் இருக்கும் சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியவர் பெரியார்.

அந்த மாநாட்டிலேயே பெரியார், சவுந்தர பாண்டியனார் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் பெயரில் இருந்த சாதிப் பெயரைத் தூக்கி எறிந்தனர்.

எம்.ஜி.ஆர் தன் ஆட்சிக் காலத்தில் தெருப்பெயர்களில் இருந்த தலைவர்களின் சாதிப் பெயர்களை நீக்கி அரசாணை பிறப்பித்தார்.

சாதிகள் ஒழிய வேண்டும் என்பது நமது கொள்கை. அதற்காகப் பாடப் புத்தகங்களில் இருந்து சாதிப் பெயரை எடுத்து விட்டால் சாதி ஒழிந்து விடும் என்று கூற வரவில்லை.

கல்வி கற்கும் மாணவப் பருவத்தில் அவர்கள் நெஞ்சில் சாதி எனும் நச்சு விதை விழாமல் தடுக்கவும் - சாதியத்திற்கு எதிரான ஓர் அடையாளமுமாக, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் மூலம் அரசு எடுத்திருக்கும் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்கு உரியது