gandhimathi paatti‘நாங்க பெரியார் கட்சி’, ‘இப்ப இருக்குற பிள்ளைங்க தப்ப தட்டிக்கேக்க பயப்படுறீங்க, நானெல்லாம் கையில அருவா எடுத்து சத்தம் போட்டன்னா ஒரு பய எதிர்ல நிக்க மாட்டான்’ ‘ஒரு கையில புள்ளைங்களயும், இன்னொரு கையில புருசனயும் புடிச்சிக்கிட்டு மாநாட்டுக்குப் போயிடுவோம்’ காந்திமதிப் பாட்டிக்கு 90 வயதிருக்கும்போது, அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் என் கையை அழுத்தியபடி சொன்னவை. அந்தப் பெரியார் பெருந்தொண்டர் காந்திமதியம்மாள் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி 100ஆவது வயதை எட்டிப் பிடித்த நேரத்தில் காலமானார்.

1930களிலேயே அருப்புக்கோட்டை ச.வீ.க.முத்துச்சாமி என்னும் திராவிடர் கழகத்தவரைச் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். இயக்கமே குடும்பம், கொள்கையே வாழ்க்கை என இறுதி மூச்சு வரை வாழ்ந்தவர். 1947இல் மதுரையில் நடந்த திராவிடர் கழகக் கருஞ்சட்டை மாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைக்கப்பட்டபோது, உயிர்தப்ப ஏறிய பேருந்தையும் வன்முறையாளர்கள் ஆயுதங்களுடன் மறிக்கின்றனர். கைக்குழந்தையாக இருந்த மகன் தமிழரசனையும், கணவரையும், வன்முறையாளர்களுடனும், காவல் துறையினருடனும் போராடி மீட்கிறார் காந்திமதியம்மாள். கணவருடைய மறைவுக்குப் பிறகும், இயக்கப் பணிகளில் முழுவீச்சுடன் ஈடுபட்ட காந்திமதியம்மாளின் தலைமையில், எண்ணற்ற சாதி மறுப்பு, சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன.

பெண்ணிற்குக் கல்வி கிடைத்தால் ஒரு சமூகமே பயன்பெறும் என்பதால்தான் திராவிட இயக்கம் பெண் கல்விக்கு முதலிடம் தருகிறது. கல்வி மட்டுமன்று, கொள்கையும், ஒரு பெண்ணின் வழியாகத் தலைமுறை தலைமுறைக்கும் கடத்தப்படும் என்பதற்குக் காந்திமதியம்மாள் மிகச் சிறந்த சான்றாக வாழ்ந்து மறைந்திருக்கிறார். 

தான் பற்றி நின்ற கொள்கையையும், அந்தக் கொள்கை தந்த துணிச்சலையும் அப்படியே தன்னுடைய பேத்தி ஓவியாவிற்குக் கடத்தியிருக்கிறார். ஓவியா ஏ.பி.வள்ளிநாயகம் இணையரின் மகன் ஜீவசகாப்தன், ஜீவசகாப்தன் - சமீம் இணையரின் பிள்ளைகள் இதயச் சிற்பி, நிலவன் என ஐந்தாவது தலைமுறையாகத் தொடர்கிறது காந்திமதியம்மாள் ஊட்டிய கொள்கை உறுதி.

மறைந்த காந்திமதியம்மாளின் உடல் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்புப் பயன்பாட்டுக்காகக் கொடையாக வழங்கப்பட்டது.

நிறைய காந்திமதிகளை உருவாக்க வேண்டும்...நாமும் காந்திமதிப் பாட்டியைப் போல வாழ்ந்து காட்ட வேண்டும்.

- இரா.உமா