அண்மையில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் “ஓ...காதல் கண்மணி” என்னும் திரைப்படம், லிவிங் டுகெதர் என்னும், திருமணம் தவிர்த்து வாழுவதைக் குறித்துக் கொஞ்சம் பேசுகிறது. கொஞ்சம் என்று நாம் சொல்வதற்குக் காரணம், வழக்கமான காதல் கதைகளைப் போன்று, இதுவும் திருமணத்தில்தான் போய் நிற்கிறது.

kadhal kannamani 600

ஆனாலும், தாலி சென்டிமெண்ட்டை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் தமிழ்த் திரைப்படச் சூழலில், திருமண ஏற்பாட்டைத் தவிர்த்து வாழ்தலைப் பற்றி பேச முன்வந்ததால், இளைய தலைமுறை மத்தியில் வரவேற்பு இருப்பதைப் பார்க்க முடிகிறது. விறுவிறுப்பான கதை ஓட்டம், கச்சிதமான கலைஞர்கள் தேர்வு, காதலும், காமமும் வேறு வேறு இல்லை, ஒன்றை விட்டு மற்றொன்றைப் பேசிவிடவோ, உணரவோ முடியாது என்னும் இயற்கை நியதியை அழகான கவிதை வரிகளைப் போலக் காட்சிப்படுத்தியிருப்பது - இவற்றிற்காக இயக்குனர் மணிரத்தினத்திற்கு நம்முடைய பாராட்டுகள்.

இங்கே தனி மனித மதிப்பீடுகள் என்று தனியாக எதுவும் இல்லை. அனைத்துமே குடும்பம் என்னும் நிறுவனத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. நம் நாட்டைப் பொறுத்தவரை, குடும்பம் அமைப்பு கலாச்சாரத்தின், பண்பாட்டின், பெருமையின் குறியீடாக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மை மக்கள், விரும்பியோ, விரும்பாமலோ அந்தக் கருத்தியலோடு ஒத்துப்போகின்றவர்களாக இருக்கிறார்கள். சிலர், குடும்ப அமைப்பு நீடிக்க வேண்டுமா என்னும் வினாவையும், இன்னும் சிலர், இருக்கட்டும், ஆனால் ஜனநாயகமுள்ள அமைப்பாக இருக்க வேண்டும் என்னும் கருத்தையும் முன் வைக்கிறார்கள்.

ஓர் ஆணின் வெற்றி - தோல்விகள், தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறை - இவைகள் அந்த ஆணுடைய தனிப்பட்ட விருப்பங்களாக இங்கே அங்கீகரிக்கப்படுகின்றன. பெண்ணைப் பொறுத்தவரையில், அவளுடைய முன்னேற்றம் என்பது குடும்பத்தோடு தொடர்புடையது மட்டுமே. ஆனால் அவள் சந்திக்கின்ற தோல்விகளுக்கு அவளே பொறுப்பாளி. ஓர் ஆண் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதை, இந்த சமூகத்திற்கும், குடும்பத்திற்குமான தியாகமாகவும், தொழிலின் மீதான பற்றுதலாகவும் பார்க்கும் இந்தச் சமூகம் இதில் எந்தவொன்றையும் பெண்ணிற்குப் பொருத்திப் பார்ப்பதில்லை. பெண்ணாய்ப் பிறந்ததே, மனைவியாக, தாயாக, பாட்டியாக ஆகி இறந்து போவதற்குத்தான் என்பதாகவே இன்றுவரை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இப்படி ஆணுக்கும், பெண்ணுக்கும் இருவேறு பார்வைகளைக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில், திருமணம் தவிர்த்து வாழ்தல் என்பது இப்போது இருக்கின்ற குடும்ப அமைப்புக்குச் சரியான மாற்றாக அமையுமா என்றொரு வினா எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. இவற்றுக்குப் பழகிப்போன மனநிலையில் சட்டென்று ஒரு மாற்றம் நிகழ்ந்து விடாது. திருமணம் தவிர்த்த வாழ்க்கையிலும், காபி போடுவதும், உணவு சமைப்பதும் பெண்ணிற்கான வேலையாகத் தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. தந்தை பெரியார் சொன்னதுபோல, இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான வாழ்க்கை முறைதான். லாபமோ - நட்டமோ ஒப்பந்ததார்கள் இருவருக்குமே சரி சமமாக இருக்க வேண்டும் என்பார் பெரியார். பொருளாதார நிலையில் சமமான இருவர், இந்த முறையில் இணைந்து வாழ்ந்தாலும், பெண்ணிற்கென்று குடும்ப அமைப்பில் விதிக்கப்பட்ட பொறுப்புச் சுமைகள் இங்கு மாறிவிடுகிறதா என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஒத்த சிந்தனைப் போக்கு, சமமான பொருளாதார வலிமை ஆகியவை இதில் முக்கியப் பங்காற்றக் கூடிய கூறுகள். இருந்தபோதும், பண்பாட்டுச் சூழலில் முழுமையான மாற்றம் ஏற்படும் போதுதான், இதுபோன்ற வாழ்க்கை முறை பொதுவில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக மாறும். அந்த நிலையில்தான், குடும்ப வாழ்க்கை - திருமண வாழ்க்கை பெண்ணுக்கானதாகவும் இருக்கும்.

லிவிங் டுகெதர் என்னும் மாற்றுமுறைக் கோட்பாடே, முற்போக்குச் சிந்தனையாளர்களின் மத்தியில் அறியப்பட்ட - விவாதம் செய்யப்படுகின்ற ஒன்றாகத்தான் இருக்கிறது. அது குறித்து பொதுவெளியில் போதுமான உரையாடல்களோ, கருத்துகளோ இன்னும் உருவாகவில்லை என்றே தோன்றுகிறது. இந்தப் படத்தில், அவர்களின் சூழல்களே திருமணத்தை வெறுக்கச் செய்கின்றன. அல்லாமல், சாதிய, ஆணாதிக்க அமைப்பான குடும்ப அமைப்பிலுள்ள ஜனநாயகமற்ற தன்மையைப் புரிந்து கொண்டதனால் எடுக்கப்பட்ட முடிவு இல்லை.

எனவேதான், ஆணும், பெண்ணும் இறுதியில் திருமணம் என்னும் ஏற்பாட்டிற்குள் வந்தே தீர வேண்டும் என்னும் வழக்கிலுள்ள நடைமுறையையே தீர்வாகச் சொல்கிறது ஓ...காதல் கண்மணி படம்.

இந்தப் படத்தையும், திராவிடர் கழகம் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தையும் இணைத்து, பூணூல் மணி பத்திரிகை ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளது (23.04.2015) வைத்தியநாதய்யர் வகையறாவைப் பொறுத்தவரை, சமூகச் சீர்திருத்தங்கள், பண்பாட்டு மாற்றங்கள் எல்லாமே, அவர்கள் வைத்துள்ள ஒழுக்க விதிகளுக்கு எதிரானவை. சிறிதும் வெட்கமின்றி, தங்களுடைய மன வக்கிரங்களை, அசிங்கங்களை அச்சில் ஏற்றுவதும், மக்களின் சுயமரியாதையைக் கேலி செய்வதும் அவர்களுக்கு சரியானவை. பார்ப்பானைப் புறக்கணித்து, அடிமைச் சின்னமான தாலியை மறுத்து வாழும் நம்முடைய பெண்கள் ஒழுக்கமற்றவர்கள்.... ஐந்து கணவர்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும்போதே, தன் மனம் ஆறாவதாக ஒருவனை நாடுகிறது என்று சொல்லும் அவர்களுடைய திரௌபதி பத்தினி - தெய்வம்.

இந்தப் படத்தின் தலைப்போடு - தாலி அகற்றும் சுயமரியாதை நிகழ்வையும் - அதை நடத்திய திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் வீரமணியையும் இணைத்துக் கேலி செய்யும் தினமணி, படத்தின் இயக்குனர் மணிரத்தினத்தின் பக்கம் மறந்தும் கூட பார்வையைத் திருப்பவில்லை. இதே ‘வேறு’ இயக்குனராக இருந்திருந்தால், ‘பூணூல்’ சுழன்றிருக்கும்.