“ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காங்கிரசு அல்லாத ஆட்சி, ஆகியவை முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகளாக இருந்தன. அந்தக் கொள்கைகளே எனது கொள்கைகளாகும்”

இப்படி ஒரு பொன்மொழியைத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உதிர்த்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் நினைவு இல்லத்தில் இருக்கிற அவரது சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை வழங்கியுள்ளார். அப்போதுதான் இந்த தத்துவத்தை அவர் பேசியுள்ளார்.

முத்துராமலிங்கத் தேவர் வலியுறுத்திய ஆன்மிகம் என்பது “இந்துத்துவம்”, அவருடைய தேசியம் என்பது “இந்திய தேசியம்”(இந்து தேசியம்), தேவர் வலியுறுத்திய “பொதுவுடைமை” என்ன என்பதை அம்மையார் தான் விளக்க வேண்டும். இல்லையென்றால் அம்மையாரைப் பிரதமராக்கியே தீருவோம் என்கிற கொள்கை வெறியுடன் இயங்கும் இடதுசாரிகள்தான் விளக்க வேண்டும்.

இந்துத்துவத்தையும், இந்திய தேசியத்தையும் தன் இரு கண்களாக போற்ற வேண்டும் என்று கூறிய முத்துராமலிங்கத் தேவரின் “ஏகாதிபத்திய எதிர்ப்பு” பாட்டாளி வர்க்க நலன் சார்ந்ததா என்பதையும் இடதுசாரித் தோழர்கள்தான் நமக்கு வகுப்பு எடுக்க வேண்டும்.அடுத்தபடியாக, தேவர் விரும்பிய “காங்கிரசு அல்லாத ஆட்சி” - அதுதான் தன் இலட்சியம் என்கிறார் ஜெயலலிதா.

தேவர் விரும்பிய காங்கிரசு அல்லாத ஆட்சி என்பது காமராசர் அல்லாத ஆட்சியைத்தான். பச்சைத் தமிழன் காமராசரின் பங்களிப்புதான் தேவருக்கு எரிச்சலாக இருந்தது. மற்றபடி காங்கிரசின் உடைமைச் சிந்தனையிலோ, ஏக இந்தியா கற்பிதத்திலோ தேவருக்கு எந்த மாறுபாடும் இல்லை.

நரேந்திர மோடிக்கும் தேவரின் கொள்கைகள் மிகவும் பிடிக்கும். காங்கிரஸ் அல்லாத ஆட்சியைத்தானே அவரும் விரும்புகிறார். இத்தைகைய கொள்கை கொண்ட தேவரின் கொள்கைகள்தான் தனது கொள்கையும் என்கிறார் அம்மையார். இந்த விசயத்தில் அம்மையாரை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

ஏனென்றால், தான் ஒரு “இந்துத்துவ சக்தி” என்பதைத் தேவரின் கொள்கைகளே தனது கொள்கைகள் என்று பறைசாற்றியதன் மூலம் இவ்வுலகிற்கு வெளிப்படையாக அறிவித்துள்ளார். காங்கிரஸ், மற்றும் பாரதிய ஜனதாவிற்கு மாற்றாக இந்த “இந்துத்துவ சக்தி” யைத்தான் நம் தோழர்கள் முன்னிறுத்துகின்றனர்.

jeya-in-posumpon 600சூத்திர தேவரைப் பார்ப்பனர்கள் விரும்புவதன் பின்னணி என்ன?

கல்வி, சமூக தளத்தில் மிகவும் பின்தங்கிய சமூகமாக இருக்கும் கொண்டைய கொட்ட மறவர் சமூகத்தில் பிறந்தவர் முத்துராமலிங்கத்தேவர். நேதாஜி தலைமையில் இயங்கிய பார்வர்டு பிளாக் கட்சியில் தேவர் இருந்தாலும், வாஞ்சிநாதன், இராசாசி போன்ற பார்ப்பனத் தலைவர்களின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். ஆர்.எஸ்.எஸ் முன்னோடியான “கோல்வால்கரை” தமிழகத்திற்கு அழைத்துக் கூட்டம் நடத்தியவர்.

திராவிட இயக்கக் கொள்கைகளை எதிர்ப்பதையே தன் வாழ்நாள் இலட்சி யமாகக் கொண்டவர். கொண்டைய கொட்ட மறவர், பிரான்மலைக் கள்ளர் சமூக மக்களிடம் பெரியாரின் சமூக நீதிக் கொள்கை சென்று சேராமல் பார்த்துக் கொண்டவர். இது போதாதா பார்ப்பனர் கள் தேவரைக் கொண்டாடுவதற்கு.

மேலும், காங்கிரசில் காமராசரின் செல்வாக்கைக் கண்டு கொதித்தெழுந்த இராசாசிக்கு, தேவரின் காமராசர் எதிர்ப்பு பயன்பட்டது. பிற்படுத் தப்பட்ட காமராசர் பெரியார் பக்கம் நின்றார். பிற்படுத்தப்பட்ட முத்துராமலிங்கத் தேவரோ, இராசாசி பக்கம் நின்றார். இராசாசியின், பெரியார் எதிர்ப் பிற்கும் தேவர் பயன்பட்டார். தேவரைப் போன்றே ம.பொ.சி என்கிற ஒடுக்கப்பட்ட சமூகத் தைச் சேர்ந்தவரும் இராசாசியின் ஆதரவு நிலைப்பாடு எடுத்தார்.

தமிழர் நலனிற்காகப் பாடுபட்ட பெரியாரைத் தமிழர்களைக் கொண்டே எதிர்த்த பார்ப்பனிய தந்திரம், இன்றும் நம் தமிழர் களுக்குப் புரியவில்லை. இன்றளவும் கூட சுப்ரமணியசாமி போன்ற தமிழின எதிரிகள் முத்து ராமலிங்கத் தேவரைக் கொண்டாடுவதில் உள்ள பார்ப்பனிய சதியைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையிலேயே மறவர் சமூகம் கல்வியில், வேலை வாய்ப்பில் முன்னேற வேண்டும் என்கிற அக்கறை இந்துத்துவ சக்திகளுக்கு இல்லை. அவர்கள் காலங்காலமாக இதே நிலையில் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அதனால்தான் முத்துராமலிங்கத் தேவர் போன்ற இந்துத்துவ சக்தியை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். வீரமங்கை வேலுநாச்சியாரும் கொண்டைய கொட்ட மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்தானே(!) அவருக்கு ஏன் தங்கக் கவசம் செலுத்தவில்லை? அவருடைய வரலாறு முன்னிறுத்தப்படாததன் பின்னணி என்ன?

ஏனென்றால், அவர் திப்புசுல்தான் என்கிற இசுலாமிய மன்னனுடன் நட்பு பாராட்டியவர். “குயிலி” என்கிற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத் தனது உறவாக நினைத்துப் பழகியவர். தன் சொந்தச் சாதியினரின் துரோகத்தைத் தோலுரித்தவர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதையே தன் வாழ்க்கையாக வகுத்துக் கொண்டவர்.

இத்தைகைய சிறப்புடைய வேலுநாச்சியாரின் பெருமையை இந்துத்துவ சக்திகள் ஒரு போதும் பேசமாட்டார்கள். அப்படிப் பேசினால், அவர்கள் கொண்ட அரசியலுக்கு ஆபத்தாக முடிந்துவிடும். இசுலாமியர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் அரசியல் களத்தில் தனது தோழமையாக்கிக் கொண்ட வேலுநாச்சியார் போன்ற பெண் போராளிகளை மறவர் சமூக மக்களிடம் முன்னிறுத்தப் பயப்படுகிறார்கள். முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களை முன்னிறுத்து வதன் மூலம் மறவர் சமூகம் எழுச்சி பெறாமல் தடுக்கும் வேலையை இந்துத்துவம் திட்டமிட்டுச் செய்து வருகிறது.

தேர்தல் காலங்களில் கொம்பு சீவப்படும் சாதிய உணர்வு

தென்தமிழகத்தில் உள்ள கொண்டையக் கொட்ட மறவர், பிரான் மலைக்கள்ளர் சமூகங்களை, சாதி உணர்வைத் தூண்டி விட்டு, தனக்கான வாக்கு இயந்திரமாகத் தக்க வைப்பது நீண்ட கால மாக அரசியல் தந்திரமாக இருந்து வருகிறது. தென் தமிழகத்தில் வெற்றியைத் தீர்மானிக்கும் வகையில் மறவர், கள்ளர், அகம்ப டையார் சமூகங்கள் அடர்த்தியாக இருக் கின்றனர். இத்தைகைய சூழலில் ஜெயலலிதா தன்னுடைய ஆட்சியைத் “தேவர் ஆட்சி” என்று சொல்லியே பெருமிதம் கொள்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், இமானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சிக்குச் சென்ற 7 தேவந்திரகுல வேளாளர்கள்(பள்ளர் சமூகம்) காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தில் மறவர்களுக்கும், பள்ளர்களுக்கும் இடையே சண்டை நடக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவைகள், அரசே தலைமையேற்று நடத்திய வன்கொலைகள் என்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும். ‘தாழ்த்தப் பட்டோரை(குறிப்பாகப் பள்ளர்களை) அடக்கும் பொறுப்பை அரசே செய்யும். எனவே மறவர்களோ, கள்ளர்களோ சிரமப்பட வேண்டாம்’ என்று முக்குலத் தோருக்கு அறிவிக்கும் நிகழ்வே பரமக்குடி கொலைகள் என்றால் அது மிகையில்லை.

இந்தக் கூற்றை உண்மை என்று நிறுவும் வண்ணம், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதியன்று (தேவர் ஜெயந்தி யன்று), பரமக்குடியில் 7 தாழ்த்தப்பட்ட மக்களைக் கொன்று குவித்த காவல் துறைக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டது. ஆக , இந்தப் படுகொலையும், பாராட்டுப் பத்திரமும் முக்குலத்தோரின் வாக்குகளைப் பெறுவதற்கான அரசியல் அரங்கேற்றம் என்ப தைத் தனியாக விளக்க வேண்டிய தில்லை.

பிப்ரவரியில் தேவர் பாசத்திற்கும், கவசத்திற்கும் காரணம் என்ன?

பொதுவாக அக்டோபர் மாதம்தானே தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முறை பிப்ரவரியில் தேவர் சிலை மீது பாசம் வருவதற்குக் காரணம்(!) இன்னும் இரண்டு மாதங்களில் வர இருக்கிற மக்கள வைத் தேர்தல்தான். பொதுவாக முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவிற்குச் சாதகமாகவே இருக்கும்.

ஆனால் இந்த முறை பாரதிய ஜனதாவின் இந்துத்துவச் சிந்தனைக்குப் பல முக்குலத்துச் சகோதரர்கள் பலியாகி வருகின்றனர். எந்த இந்துத்துவச் சிந்தனை மூலம் முக்குலத்தோரை ஜெயலலிதா தன் வயப்படுத்தினாரோ, அந்த அடிமை மனநிலைதான் தற்போது பாரதிய ஜனதாவிற்கும் சாதகமாக இருக்கிறது.

பெரியாரின் தாக்கம் குறைவாக இருக்கிற சமூகங்களை எளிதாக இந்துத்துவம் உள்ளிழுத் துக் கொள்ளும். அதன் படி பாரதிய ஜனதாவின் அகண்ட பாரத கனவிற்கு அடியாட்களாக, முக்குலத்தோரை வெறியூட்டும் வேலையை ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிறது. இதன்படி பார்த்தால், அதிமுகவிற்கு இருக்கும் செறிவான முக்குலத்தோர் வாக்கு வங்கியைப் பாரதிய ஜனதா பதம் பார்க்கிறது.

சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் பல கிராமங்களில், முக்குலத்தோர், பாரதிய ஜனதாவால் ஈர்க்கப்படுவதை அதிமுக தலைமை கண்டு கொண்டுவிட்டது. அதனால்தான் இந்தத் தங்கக் கவசம் அரங்கேற்றமானது. ஒரு வகையில் பார்த்தால், இதனை அதிமுகவின் தேர்தல் செலவு என்று கூட சொல்லலாம்.

இதைப் போன்று, கொங்கு நாட்டில் உள்ள கவுண்டர் சமூகமும் அதிமுகவின் வாக்கு வங்கிதான். ஆனால் அவர்களும் இந்த முறை பாரதிய ஜனதாவின் பக்கம் கணிசமாகச் சாய்கின்றனர். இதைப் போல், தமிழகம் முழுவதும் உள்ள பார்ப்பனர்களும் அதிமுகவின் வாக்கு வங்கிகளா கவே இருந்தனர். இந்த மக்களவைத் தேர்தலில், பார்ப்பனர்களும், பாரதிய ஜனதாவின் கரத்தை வலுப்படுத்த முடிவு செய்துவிட்டனர்.

ஆக, முக்குலத்தோர், கொங்கு வேளாளக் கவுண்டர், பார்ப்பனர்கள் என மூன்று சமூகத்தினரின் வாக்குகளும் கணிசமாகப் பாரதிய ஜனதாவிற்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. இந்தச் சமூக மக்களின் வாக்குகள் பிரிந்து போகாமல் தடுப்பதற்கான முதல் முயற்சியே முத்துராமலிங்கத் தேவருக்குக் கவசம் அணிவித்த செயல் எனலாம். அடுத்தபடி யாக, கவுண்டர்களின் வாக்கு வங்கியைத் தக்க வைக்க தீரன் சின்னமலைக்குத் தங்கக் கவசம் ஆயத்தமாக இருக்கலாம்.

இந்த மக்களவைத் தேர்தலில், ஜெயலலிதாவும், நரேந்திர மோடியும் தங்களைத்தான் பிரதமர் வேட்பாளராக அறிவித்துப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், இதுவரை எல்லா மாநில முதல் வர்களையும் விமர்சித் துப் பேசிய மோடி, ஜெயலலிதாவை விமர்சிக்கவில்லை. ஜெயலலிதாவும் இதுவரை மோடியின் இந்துத்துவக் கொள்கைகளையோ, அவரின் அரைவேக்காட்டுப் பேச்சையோ விமர்சனம் செய்யவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

எத்தனையோ அரசியல் கூட்டணிகளைப் பார்த்திருப்போம். ஆனால், உண்மையில் இதுவல்லவோ கொள்கைக் கூட்டணி. முக்குலத்தோர் சமூக இளைஞர்களுக்கு , தேவர் சிலைக்குத் தங்கக் கவசம் வழங்கியது என்பது, கிளர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கலாம். ஆனால், மறவர் சமூக இளைஞர்கள் கல்வி, பொருளாதார, சமூக எழுச்சி பெறுவதற்குப் பெரியார் அம்பேத்கர் என்கிற பகுத்தறிவு கவசங்களே தேவை என்பதை உணர வேண்டும்.