சிறுவயதில் பார்த்ததுபோல்

என் கிராமம் இல்லை

சில்லாங்குச்சி விளையாடிய தெரு இல்லை

நிலா பார்த்தபடி படுத்துறங்கிய

திருப்பதி தாத்தா வீட்டுச்

சாணி தெளித்த முற்றம் இல்லை

சுற்றிச் சுற்றி விளையாடிய

மரத் தூண்கள் கொண்ட

தொரைப்பூச்சி பெரியம்மாவின் வீடு இல்லை

ஊருக்குள் குடிசைகளே இல்லை

புத்தகப் பையோடு குதித்து விளையாடிய

வைக்கோல் போரும், களத்துமேடும் இல்லை

கோழிக்குஞ்சு பெரியப்பா வீட்டுக்

கொல்லையில் எலந்தை மரம் இல்லை

ஐக்கம்மா அத்தை தோட்டத்தில்

வாதாங்கொட்டை மரம் இல்லை

வடக்குக் கிணற்றில் நீரிறைக்கும்

உருளைச் சத்தம் இல்லை

தெருவே கூடி ரசிக்கும்

ராஜகோபால் அப்பாவின்

பாட்டுக் கச்சேரி இல்லை

கைப்பேசி முதல் கணிணிவரை

அறிவியல் நுழையாத வீடுகளே இல்லை

சாதி மட்டும் அப்படியே இருக்கிறது!