பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெற்றிபெறும் என்னும் நம்பிக்கையை ஏற்காடு இடைத்தேர்தல் உடைத்துவிடும் என்று அந்தப் பகுதி மக்களே கூறுகின்றனர். கடுமையான நேரடிப் போட்டி அங்கே நிலவுகின்றது என்றாலும் இறுதி வெற்றி திமுகவிற்கே கிடைக்கக்கூடும்.

இன்றுவரையில் நடைபெற்றுள்ள ஏற்காடு சட்டமன்றத் தேர்தல்களில், நான்கு முறை தி.மு.கழகமும், ஆறு முறை அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வெற்றி, தோல்வியும் கூட, கூட்டணிகளின் அணிச்சேர்க்கையைப் பொறுத்தே அமைந்துள்ளன. அங்கே தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் ஏறத்தாழ சம வலிமையில் இருந்தாலும் கூட்டணிகளால் வாக்கு வேறுபாடு ஏற்படுகின்றது. 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளர் பெருமாள், 43ஆயிரம் வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றிருந்தார். இன்றோ மிகக் குறைந்த வாக்குகளில் கூட வெற்றி பெறுவது கடினம் என்பதை அவர்களே உணர்ந்துள்ளனர்.

அதன் காரண மாகவே வழக்கத்திற்கு மாறாகச் சில முயற்சி களை ஜெயலலிதா மேற் கொண்டுள்ளார். மிகப் பெரும்பான்மையாக இடைத்தேர்தல் நடை பெறும் தொகுதிகளுக்கு அவர் நேரில் சென்று பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. இம்முறை ஒரே நாளில் 9 இடங்களில் பேசு வதாக அறிவித்துள்ளார். இறந்துபோன சட்ட மன்ற உறுப்பினர்களின் உறவினர்களையும் அவர் வேட்பாளராக அறிவிப்பதில்லை. திருச்சியில் இடைத் தேர்தல் நடைபெற்றபோது, மறைந்த அமைச்சரின் மனைவிதான் வேட்பாள ராக அறிவிக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் தொடர்பே இல்லாத இன்னொருவரை அவர் அறிவித்தார். யார் ஒருவரும், இறந்து போனவர்களின் உறவினர் என்ற அனுதாப அடிப்படையில் வாக்குகளைப் பெற்றதாக நாளைக் குச் சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கக்கூடியவர் அவர். தன்னுடைய செல்வாக்குக் காரணமாகவே அனைவரும் வெற்றி பெறுகின்றனர் என்பதை நிறுவுவதில் அவருக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. தான்தான் எல்லாம் என்பதுதான் அவருடைய சுருக்கமான விதிமுறை.

ஏற்காடு இடைத்தேர்தலில் அந்த விதியும் தளர்ந்து போய்விட்டது. இறந்து போன பெருமாளின் மனைவி சரோஜாதான் இப்போது அங்கு வேட்பாளர். ஆதலால் தன்னுடைய வழக்கமான நடைமுறைகளை எல்லாம் மாற்றிக் கொண்டு, எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பதை உணர முடிகிறது-.

இந்த இடைத்தேர்தலில் அவர் பெரிதும் நம்பியிருக்கும் இன்னொரு நபர், அம்மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம்தான். அவர் ஒரு மாவட்ட ஆட்சியரைப் போல் அல்லாமல், அ.தி.மு.க.,வின் மாவட்டச் செயலாளரைப் போல் செயல்படுகிறார் என்று தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையரிடம் தெரிவிக்கப்பட்டது. எனினும் எந்தப் பயனும் இல்லை. மறைமுகமான அவருடைய உதவிகள் தங்களின் வெற்றிக்குக் கண்டிப்பாக உதவும் என்று அ.தி.மு.க.,வினர் உறுதியாக நம்புகின்றனர். பண வலிமை, அதிகார வலிமை ஆகியனவற்றையும் அவர்கள் முழுமையாக நம்பியுள்ளனர்.

மலைவாழ் மக்களிடம் நாட்டின் நடப்பு அரசியல் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அத்தொகுதியில் உள்ள அயோத்தியா பட்டினம், வாழப்பாடி, தும்பல் போன்ற பகுதிகளிளெல்லாம் ஆளும் கட்சியின் மீது மக்கள் கடும் கோபம் கொண்டுள் ளனர். கடுமையான விலைவாசி உயர்வு, மீண்டும் ஏற்பட்டுள்ள மின்வெட்டு, அன்றாடம் நடைபெறும் கொலை கொள்ளைகள் ஆகியன மக்களிடம் ஒரு வெறுப்பையே ஏற்படுத்தியுள்ளன என்று கூறலாம். ஆளும் கட்சி கொட்டிக்கொடுக்கப்போகும் பணத்தையும் உதறிவிட்டு, வரும் டிசம்பர் 4ஆம் தேதி அத்தொகுதி மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள் என்று உறுதியாகத் தெரிகிறது.

தலைவரின் வழிகாட்டலில், இறுதி நான்கு நாள்கள் தொகுதியிலேயே தங்கி, 42 இடங்களில் மக்களைச் சந்தித்து தேர்தல் பணியாற்ற இருக்கிறார் தளபதி. தேர்தல் வெற்றிக்கு அதுவும் ஒரு பெரிய காரணமாக அமையும் என்று கருதலாம்.

Pin It