‘வாயில் நாக்கில் குற்றம் இருந்தாழொலிய
வேம்பு இனிக்காது - தேன் கசக்காது’
என்பார்கள்.

அப்படித்தான் தமிழ்த் தேசியவாதிகளுக்குத் தந்தை பெரியார் என்றால் பிடிக்காமல் போயிற்று போலும். பல தளங்களில், பல்வேறு வகைகளில், வெவ்வேறு கால கட்டங்களில், அவர்களுடைய பெரியார் எதிர்ப்பு என்பது தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டு வருவது நாம் அறிந்த ஒன்றுதான். என்றாலும், ஈழத் தமிழர் இனப்படுகொலை நினை வாக அமைக்கப்பட்டுள்ள ‘முள்ளிவாய்க்கால் முற்ற’த்தைக் கூட இதற்காக அவர்கள் பயன்படுத்திக் கொண்டதுதான் அவலத்தின் உச்சமாகப் படுகிறது.

முள்ளிவாய்க்கால் முற்றம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது முதல் இன்று வரை, பல்வேறு சிக்கல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. முற்றம் திறக்கத் தடை, அதனால் அவசரம் அவசரமாக நடைபெற்று முடிந்த திறப்புவிழா, அதற்கும் மேல் ‘ஈழத்தாயின்’ நீதிமன்ற மேல் முறையீடு எனப் பல நெருக்கடிகள் வந்தபோதும், அய்யா நெடுமாறனும், நடராசனும் காதும் காதும் வைத்தாற்போல கச்சிதமாகக் காரியமாற்றிய சாமார்த்தியத்தை எல்லாம் எழுதத் தொடங்கினால், சொற்களுக்குப் பஞ்சம் வந்துவிடும்-. மேலும் அவையெல்லாம் அவர்களின் ‘சொந்த விருப்பு, வெறுப்புகள்’ என்ற காரணத் தால், அதற்குள் போகாமல் பொதுச் செய்திக்கு வருவோம்.

முள்ளிவாய்க்கால் முற்றம் இரண்டு பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று ஈழம் பற்றியது. அதில், ஈழப் போரின் படுகொலைக் காட்சிகள் கற்சிற் பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மற்றொன்று தமிழக வரலாறு பற்றியது. அதில், தமிழ் இனம், மொழிக்காகப் பாடுபட்ட தலைவர்கள், தமிழறிஞர்கள், மொழிப்போர் தியாகிகள் ஆகியோரின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் படங்களின் வரிசையில், தந்தை பெரியாரின் படம் இடம்பெறவில்லை.

இது குறித்து நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ‘தமிழர் தேசிய இயக்கத்தைப் பொறுத்தவரை எப்போதுமே பெரியாரை ஏற்றுக்கொள்வ தில்லையே’ என்றார். உண்மைதான். ஆனால் இது ஒன்றும் தமிழர் தேசிய இயக்கத்தின் கொள்கை விளக்கக் கண் காட்சியகம் என்று சொல்லப்பட வில்லையே. ‘உலகத்திலுள்ள தமிழர்கள் அனைவரும் வந்து வழிபட வேண்டிய கோயில் போன்றது’ என்று அய்யா நெடுமாறனே சொல்லியிருக்கிறாரே!

அதுவுமில்லாமல், தந்தை பெரியாரைத் தவிர்த்துவிட்டுத் தமிழக வரலாற்றை எழுதினால், அது உண்மையான வரலாறாக இருக்காது என்பது அவருக்குத் தெரியாததா? ஆனாலும் ஏதோ ஓரிடத்தில் பெரியார் அவர்களுக்கு உறுத்தலாக இருக்கிறார். எனவேதான் அங்கே பெரியார் தவிர்க்கப்படுகிறார். திராவிட இயக்கமும் புறக்கணிக்கப் படுகிறது.

அந்த உறுத்தல் வேறு ஒன்றும் இல்லை, சாதிதான். காரணம் அவர்களின் தமிழ்த் தேசியம் சாதியை உள்ளடக்கிய தமிழ்த்தேசியம். பெரியாரின் தமிழ்த் தேசியம், சாதிகளற்ற, சமத்துவ மான இடதுசாரித் தமிழ்த் தேசியம். பெரியார் என்னும் பெருந்தீயை, சாதிப் பொந்தான தங்களுடைய தமிழ்த்தேசிய அரங்கிற்குள் வைத்தால், வெந்து தணிந்துவிடும் என்ற அச்சமே, பெரியாரைத் தவிர்க்கச் செய்கிறது போலும். ஆனால் அதற்காக வரலாற்றை இருட்டடிப்புச் செய்கின்ற நேர்மையற்ற செயலைச் செய்வதா?

ஈழம் தொடர்பான நினைவிடத்தில், அவர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றைச் சித்தரிக்கின்ற காட்சிகள், ஈழ விடுதலையை முன்னிறுத்தித் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட, தாய்த்தமிழகத்தின் தியாகிகளைப் பற்றிய பதிவுகள் உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்க வேண்டும். அல்லது, துணிச்சலோடு வரலாற்றை அப்படியே சொல்லியிருக்க வேண்டும். அதைவிடுத்து, எதற்காக இந்த மறைத்தல்களும், மழுப்பல்களும்?
சாகும்போதுகூட, ‘சூத்திரப் பட்டத்தோடு உங்களை விட்டுச்செல்கி றேனே’ என்று மனம் குமுறியவர் தந்தை பெரியார். ஆனால் ஈழத்தமிழர்களின் சாவில்கூட, தமிழ்த் தேசியச் சாதி அரசியல் செய்யும் இவர்களை வரலாற்றின் எந்த வகையில் சேர்ப்பது? தமிழ்நாட்டுக் குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தவர் பேரறிஞர் அண்ணா.

சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்றும், அவர்களு டைய குழந்தைகள் சட்டத்திற்குப் புறம்பாகப் பிறந்தவர்கள் என்றும் இருந்த இழிநிலையை, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தின் மூலம் துடைத்தெறிந்தார். அவருடைய படத்தை எழுத்தாளர்களின் வரிசையில் வைத்து, அவருடைய பங்களிப்பையும் ஒற்றை வரியில் சுருக்கிவிட்டார்கள்.

முற்றத்தில் வைத்திருக்கின்ற பெரியவர்களின் படங்களும் பெரும்பாலும் சாதிப் பட்டங்களோடு தான் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

வங்கியில் சொந்தக் கணக்கு கூட வைத்துக்கொள்ளாத முதல்வராக வாழ்ந்த, பெருந்தலைவர் - பெரியாரின் சொற்களில் சொல்வதானால், பச்சைத் தமிழன் காமராசரின் படத்தையும் வைக்காமல் விட்ட, முற்றத்துப் பொறுப்பாளர்களின் மூளைக் கணக்கு என்னவென்று நமக்குப் புரியவில்லை.

ஆனாலும் ஒரு முடிவுக்கு நம்மால் உறுதியாக வரமுடிகி றது. தமிழ்நாட்டு இளைஞர்கள், பொதுமக்களிடம் ஊன்றிப் போயிருக்கின்ற ஈழ ஆதரவு மன நிலையை திராவிட இயக்கத் திற்கும், பெரியாருக்கும் எதிராக மடைமாற்றம் செய்கின்ற வேலையை மணியரசன், சீமான் உள்ளிட்ட பல தமிழ்த் தேசியவாதிகள் செய்து வருகின்றனர்.

இன்று நம்முடைய இளைஞர்களின் நிலை என்னவாக இருக்கிறது? அதிலும் குறிப்பாக, 2009 முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பிறகு இளைய தலைமுறை யினரின் போக்கு எப்படி இருக்கிறது? ஈழம் என்று சொன்னால், ஏன், எதற்கு என்று கேட்காமல் ஒன்று திரண்டு போராட்டக் களத்திற்கு வருமளவுக்கு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்பால் ஆழ்ந்த பற்றுள்ளவர்களாக நம்முடைய இளைய தலைமுறையினர் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களுக்குத் தேசியத் தலைவரின் தலைமையில் தமிழீழம் மலர வேண்டும் என்னும் ஒற்றை விருப்பம் மட்டுமே உள்ளது. ஆனால் அவர்கள் பின்பற்றிச் செல்கின்ற, ஈழ ஆதரவுத் தமிழ்த் தேசியத் தலைவர்களின் நோக்கம் வேறு மாதிரியாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

ஈழத்தின் பெயரைச் சொல்லி, இளைஞர்களிடம் தவறான வரலாறு களைக் கொண்டு செலுத்துகின்றனர். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு பங்களிப்பை மறைத்து, ஈழப்போராட்டத் தின் பின்னடைவுக்கு, பெரியாரும், திராவிட இயக்கமும்தான் காரணம் என்று பதியம் போட முயல்கின்றனர். திராவிட மாயை என்று பேசிக்கொண்டே, இளைஞர்களைத் சாதித் தமிழ்த் தேசிய மாயைக்குள் ஆழ்த்தும் காரியத்தைத் திட்டமிட்டுச் செய்துவருகின்றனர்.

ஈழம் என்பது தமிழர்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து விட்ட ஒன்று என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் ஈழம் மட்டுமே தமிழ்நாட்டு வரலாறும், தமிழர் களின் வாழ்க்கையும் ஆகிவிடாது என்ற உண்மையையும் நாம் மறுக்க முடியாது. நம்முடைய வரலாற்றில், நம்முடைய வாழ்க்கையில் ஒரு பகுதியே ஈழம். அதை மட்டுமே பற்றிக் கொண்டு, உணர்ச்சியின் பாதையில் நாம் பயணித்தோம் என்றால், ஈழத்தமிழர்களின் இரண்டாவது தாய் நாடான தமிழ்நாடும் நமக்கில்லாமல் போய்விடும்.

எப்படி?

இளைஞர்கள் உண்மை வரலாறு களைத் தேடிப்போகாதபடி, மேடைகளில் நரம்பு புடைக்கப் பேசி, அவர்களை உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே நிலை கொண்டிருக்கும்படி செய்துவிடுகின்றனர். எனவேதான், எம்.ஜி.ஆர்., முதல்வரான தும் ஐயா பெரியாரை சக்கர நாற்காலியல் அமர வைத்து மேடைக்கு அழைத்து வந்தார் என்று சீமான் பேசியபோது, ‘எம்.ஜி.ஆர். முதல்வராவதற்கு முன்பே ஐயா இறந்துவிட்டாரே! செத்தவரை உயிர்ப்பித்தா கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர்?’ என்று நம் முடைய இளைஞர் களால் கேட்க முடிய வில்லை. ‘திராவிட இயக்கமா எங்களைப் படிக்க வைத்தது?’ என்று கேட்டபோதும், ‘திராவிட இயக்கம் பெற்றுத்தந்த இட ஒதுக்கீடு இல்லை யென்றால், அரணையூர் பெற்ற அண்ணனே, நீங்கள் எப்படி எகனாமிக்ஸ் படித்திருக்க முடியும்?’ என்று கேட்க இயலவில்லை.

முள்ளிவாய்க்கால் முற்றத்திறப்பில், மாவீரர்களைப் பாடிய வாயால், ம.நடராசன் என்னும் நிலப்பிரவுக்கு இளவரசன் பட்டம் சூட்டிப் புகழ்பாடிய தையும், மதவாத சக்திகளை மேடையில் ஏற்றியதையும் நம்முடைய இளைய தலை முறைகள் ஏன் என்று கேட்கவில்லை. ஈழத்திற்கு ஆதரவாகத் தொடக்கம் முதலே தொடர்ந்து போராடி வருகின்ற திராவிட இயக்கங்களைப் புறக்கணித்து விட்டு, புதிய விருந்தாளியாகப் பாரதிய ஜனதா கட்சியை தனக்கருகில் அமர வைத்துக் கொண்ட நெடுமாறனின் அரசியல் குறித்து எந்த ஐயமும் எழுப்பப்படவில்லை. ஒற்றைமுகம் கொண்ட இந்துத்துவ இந்திய தேசியம் தான் பா.ஜ.க.வின் அடிப்படைக் கொள்கை.

தேசிய இனங்களின் உரிமையையோ, விடுதலையையோ - ஈழம் உள்பட, ஒருநாளும் அது ஏற்றுக் கொள்வதில்லை. தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் எல்லாம், நெடுமாறன் உள்பட, அவர்களைப் பொறுத்தவரை பிரிவினைவாத தீவிரவாதிகள்.

தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களைக் கூட நாங்கள் ஏற்றுக்கொள்வோம், ஈழத்திற்காக ரத்தம் சிந்தியிருந்தாலும் திராவிட இயக்கத்தவர்களைப் புறக்கணிப்போம் என்பதில் உள்ள தப்புத்தாளங்களை ஈழத்தை உயிராய் நினைக்கும் இளைய தலைமுறை தட்டிக்கேட்டிருக்க வேண் டாமா? ஈழ ஆதரவு தமிழ்த்தேசிய தலைவர்கள், முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீது ஜெயலலிதா தொடுத்த கோரத் தாக்கு தல்களை நேரடியாகக் கண்டிக்கும் திராணியற்று நிற்பதற்கு எது காரணம் என்று இளைய தலைமுறை சிந்தித்திருக்க வேண்டாமா? இப்படி எந்த எதிர்வினையும் இல்லாமல் போனதற்குக் காரணம், அவர்களுக்குச் சொல்லப்படுவதெல்லாம், திராவிட இயக்க எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு மட்டும்தான்.

வரலாறு அறிந்தவர், ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர் வைகோ. அவரும்கூட இந்த வரிசையில் இருப்பது நமக்கு வேதனையைத் தருகிறது. அண்ணாவை எழுத்தாளர் என்ற ஒற்றை வரியில் சுருக்கிவிட்ட, அதுவும் நடராசனின் வற்புறுத்தலுக்காக அண்ணாவின் படத்தை வைக்கச் சம்மதித்த, நெடுமாறன் போன்றவர்களின் மேடையில் தொடர்ந்தும் வைகோ இருப்பாரானால், அவரைவிட அண்ணாவை இழிவு படுத்துபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

தமிழ்த் தேசியவாதிகள் முன்வைக் கும் இனச்சுத்திகரிப்பு என்பது, சாதித் தூய்மையைப் பாதுகாப்பதற்கு மட்டும் தான் பயன்படுமே அல்லாது, மக்களின் முன்னேற்றத்திற்கு முனையளவும் உதவாது என்பதை இளையதலை முறையினர் உள்பட அனைவரும் உணரவேண்டும்.

ஒரு தலைமுறைக்குள் தமிழ் வரி வடிவத்தை விட்டுவிட்டு, ஆங்கில வரிவடி வத்திலேயே தமிழர்களின் பிள்ளைகள் படிக்கும்படி செய்ய வேண்டும் என்று ஒரு ஆர்.எஸ்.எஸ். எழுத்தாளர் எழுதினாரே, எத்தனை இளைஞர்கள் அதைக் கண்டு பொங்கி எழுந்தனர்? இன்றைக்கும் இட ஒதுக்கீடு என்று வரும்போது மட்டும் சாதி தேவையில்லை என்கின்றனரே சிலர், அவர்களோடு கருத்துப் போர் புரிய எத்தனை இளைஞர்கள் முன்வந்தனர்? அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஜெயல லிதா அரசு சிதைத்துக் கொண்டிருப்பதை, அவருடைய தமிழர் விரோதப் போக்கை எத்தனை இளைஞர்கள் எதிர்த்தனர்?

ஈழப்போராட்டத்தையும், ஈழப்போராளிகளையும், இன்னும் அங்கே உயிரை மட்டுமே சொந்தமாகக் கொண்டி ருக்கும் ஈழத்தமிழர்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகின்ற துக்ளக் சோ மீது இந்த இளைஞர்களின் அறச்சீற்றம் திரும்பவில்லையே, ஏன்?
தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த வரலாறு அவர்களிடமிருந்து திட்ட மிட்டுப் பிரித்து வைக்கப்பட்டு வருகிறது. ஆரிய மாயைக்குச் சற்றும் குறையாத ‘தமிழ்த் தேசிய மாயை’க்குள் அவர்கள் இழுத்துச் செல்லப்படுகின்றனர். அதனால்தான், தமிழ்நாட்டில் மீண்டும் மதவாத சக்திகள் தலை தூக்குவதையும், சாதி ஆதிக்கம் மேலோங்கத் தொடங்குவதையும், அதனால் ஏற்பட இருக்கின்ற ஆபத்துகளையும் அவர்களால் உணர முடியவில்லை!

ஆனால், இந்தத் தமிழ்த்தேசியவாதிகளின் சாதி அரசியலை, மதவாத ஆதரவு நிலையை நம்முடைய இளைய தலை முறைக்குத் தயங்காமல் அடையாளம் காட்டவேண்டிய மிக முக்கியமான கடமை பெரியாரின் கருஞ் சட்டைத் தொண்டர்களுக்கு இருக்கிறது.

Pin It