(பல ஆண்டுகளுக்கு முன் கவியரசு முடியரசன், மகார் நோன்பு என்னும் பெயரில் எழுதியிருந்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் கீழே தரப்பட்டுள்ளது)

நவராத்திரி என்பதற்கு ஒன்பது இரவுகள் என்பது பொருள். தசரா என்றால் பத்து இரவுகள் என்று பொருள். விழாக்கொண்டாடும் இரவுகள் ஒன்பதா, பத்தா என்பது பெயர் வைத்தவர்களுக்கே குழப்பமாக இருந்திருக்க வேண்டும்.

பெயரை விடுத்து இவ்விழாவில் நிகழும் நிகழ்ச்சிகளைச் சிறிது காண்போம். இத்திருநாளில் முதல் இடம் பெறுவது கொலு நிகழ்ச்சியே ஆகும். இல்லங்களில் அழகிய பொம்மைகளைப் பலவகையாக நிரல்பட வைத்து அழகுறச் செய்வதே கொலு ஆகும். அவரவர் செல்வ நிலைக்கு ஏற்பவும், கற்பனைத் திறனுக்கு ஏற்பவும் வீடுகளில் பொம்மைகளின் எண்ணிக்கையும், காட்சிப் பொலிவும் அமையும். பொம்மைகளை அழகுற அமைத்துக் கொலு வைத்துக் கண்டு மகிழ்வதும், பிறரை மகிழச் செய்வதும், தின்பண்டங் களைப் பரிமாறிக் கொள்வதும், குழந்தைகள் பொருட்டுச் செய்யும் செயலா? பெரியவர் பொருட்டுச் செய்யும் செயலா? அவை சிறுவர்க்காகச் செய்யும் செயலே என்பதில் ஐயமேயில்லை.

அடுத்து, இத்திருநாளில் பள்ளிச் சிறுவர்கள் கோலாட்டம் அடித்து ஆடுவதும் உண்டு. காண்பார்க்குக் களிப்பூட்டித் தாமும் இன்புறுவர். இக்கோலாட்ட நிகழ்ச்சியும் சிறார்க்கே உரியது. எதிர் எதிராக நேர்வரிசையில் நின்று கோலாட்டம் அடித்து ஆடுவர். வட்டமாக நின்று கொண்டு ஆடுவதும் உண்டு.

மற்றொரு நிகழ்ச்சியும் இவ்விழாவில் நிகழ்வது உண்டு. நம்நாட்டுச் சிறுவர்க்குக் கல்விப் பயிற்சி, பெரும்பாலும் புரட்டாசித் திங்களில் இத்திரு நாளிலேதான் தொடங்கும் பழக்கம் இருந்து வந்தது. குழந்தைகட்குப் புத்தாடை முதலியவற்றால் நன்கு ஒப்பனை செய்து, மேள தாளங்களு டன், உற்றார் உறவினர் புடைசூழப் பள்ளிக்கு அழைத்துச் சென்று, நல்லாசிரியரைக் கொண்டு எழுத்துப் பயிற்சியைத் தொடக்கி வைப்பர். கல்வி தொடங்குதல் பிள்ளைப் பருவத்திலே நிகழ வேண்டிய செயலாகும். ஆதலின் இந்நிகழ்ச்சியும் சிறுவர்களைப் பொறுத்ததே ஆகும்.

இத்திருவிழாவின் இறுதிநாளில் அம்பு போடுதல் என்ற ஒரு நிகழ்ச்சியும் நடைபெறும். அரசர் இருந்த நகரங்களில் அவ்வரசரே அரச வீதிகளின் வழியாக உலாப்போந்து, குறித்த இடத்துக்கு வந்து அம்பு போடும் பழக்கம் உண்டு. ஏனைய ஊர்களில் ஆங்காங்கே உள்ள கோவில்களில் இருந்து கடவுள் திருஉருவங்கள் திருவுலாக் கொள்வர். இறுதியில், கடவுளர் அருகில் அமர்ந்திருக்கும் குருக்கள்மார் அம்பினை எய்வர்.

இதற்கு முன் கூறிய அனைத்தும் பிள்ளைப்பருவத்துக்கு உரியனவாக இருக்க அம்பு போடுதல் மட்டும், அரசர் செயலாகவும், கடவுளர் பிரதிநிதிச் செயலாகவும் உளதே என்னும் எண்ணம் எழலாம். அரசர் தொடர்பும், ஆண்டவன் தொடர்பும் நாமாகப் பின்னர் புகுத்திக் கொண்டவையே. அம்பு போடுதல் என்ற நிகழ்ச்சியும் சிறாரைப் பொறுத்ததே. தமிழர் மரபு வீர மரபு ஆதலின், அம்மரபுக்கு ஏற்ப இளஞ்சிறார்க்குக் கல்வி தொடங்கும் போதே, போர்ப் பயிற்சியையும், வீரத்தையும் விளையாட் டாகத் தொடக்கி வைத்துள்ளனர் நம் முன்னோர்.

கல்வியும் வீரமும் குழந்தைகளுக்கு விளையாட்டாகவே ஊட்டப்பெற்றுள்ளன என்னும் உண்மையையும், இதன் வாயிலாக நாம் உணர முடிகிறது.

சிறாரும் விற்பயிற்சி, வேற்பயிற்சி உடையவர் என்பதைப் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடல் ஒன்று நமக்குப் புலப்படுத்தும். ‘அவ்வீரனுடைய பதி, வில்லின் முன் அம்பைத் தேர்ந்தெடுத்துத் தொடுக்கும் வேட்டையாடும் சிறு பிள்ளைகளின் முன் முயல்கள் பாயும் முன்றிலை உடையது’ என்பது அப்பாடற் கருத்தாகும். அப்பாடல்,

“வில்முன் கணைதெரியும்   வேட்டைச் சிறுசிறார்
முன்னும் முயல்உகளும் முன்றிற்றே” என்பதாகும். கணை தெரியும் சிறுசிறார் என்னும் தொடரை உற்றுநோக்குக.

இத்தகு ஒரு திருநாளில், குழந்தைகள் விழாவை நாம் மறந்து விட்டோம். தசரா என்றும், நவராத்திரி என்றும், சரசுவதி பூஜை, ஆயுத பூஜை என்றும் எப்படியெல்லாமோ பெயரை மாற்றி வைத்து, மயங்கிப் பெரியவர் களாகிய நாம் விளையாடிக்கொண் டிருக்கிறோம்.

இவ்விழா குழந்தைகள் விழா, தமிழர்க்கே உரிய விழா என்பதில் ஐயமில்லை. இதன் பெயர் மறையும்படியாக மேலே பூசப்பட்ட வண்ணங்களைக் கொண்டும், கட்டுக்கதைகளைக் கொண்டும், பெயர்களைக் கொண்டும் அயலவர் விழா என்று மயங்கிவிட்டோம்.

Pin It