கொண்ட கொள்கைக்காகவேதான் என்றாலும் கூட, ஒருவர் தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதும், அல்லது அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதும் சரிதானா என்னும் வினா, நம்மைத் துளைத்து எடுக்கிறது. அது குறித்த கருத்துப் பரிமாற் றங்களுக்கு உரிய நேரமாக, இன்றைய காலச் சூழல் உள்ளது.

ஆதித்தமிழர் பேரவையின் மாநில நிதிச் செயலாளர் நீலவேந்தன், சில நாள்களுக்கு முன்பு (செப்.26 - திலீபன் நினைவு நாள்) அதிகாலையில் தீக்குளித்து மாண்டுள்ளார். மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களான அருந்ததியர்களுக்கு, இட ஒதுக் கீட்டு முறையில், உரிய உள்ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும் என்னும் கோரிக்கைக் காகத் தான் தீக்குளிப்பதாக ஒரு குறிப்பையும் அவர் எழுதி வைத்துள்ளார் என்று கூறுகின்றனர்.

தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, காமன்வெல்த் நாடுகளின் அணியிலி ருந்து இலங்கை அரசு நீக்கப்பட வேண்டுமென் றும், ஒரு வேளை, வரவி ருக்கும் நவம்பரில் காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறுமானால், அதில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியும், அக்டோபர் 1ஆம் நாள் முதல், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில், தன் காலவரையற்ற பட்டினிப் போரைத் தொடங்கியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், தருமபு-ரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், மறைந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் விருப்பப்படி, பாரத மாதாவிற்குச் சிலை வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். அதற்காகப் பட்டினிப் போர் ஒன்றையும் அறிவித்தார். ஆனால் அப்போராட் டத்தைத் தொடங்குவதற்கு முன்பே உடல்நலக் குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்தபடியே இப்போது பட்டினிப் போர் நடத்தி வருகின்றார்.

மூவரின் போராட்டங்களும் தனித் தனித் தன்மை வாய்ந்தவை. அவற்றை நாம் சமப்படுத்திவிட முடியாது. எனினும், தங்கள் கோரிக்கைகளுக்காகத் தங்களை இழப்பதும், இழக்கத் தயாராவதும் என்ற கருத்தொற்றுமையில் மூன்றையும் இணைத்துப் பார்க்கலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இப்படிப்பட்ட “தற்கொடை”ப் போராட்டங்கள் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. தமிழக, தமிழீழ வரலாற்றிலேயே இதற்கான முன் எடுத்துக்காட்டுகள் பல உள்ளன. சங்ககால ‘வடக்கிருத்தல்’, தேவாரம் தந்த அப்பர் பெருமானின் பட்டினிப் போராட்டம் எனப் பல உண்டு. தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி, 1956இல் தியாகி சங்கரலிங்கனார், விருதுநகரில், பட்டினிப்போர் நடத்தி உயிர் துறந்தார். 1960களின் மத்தியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மொழிப்போரில், ஏராளமான தற்கொடைகளைப் பார்க்க முடிகிறது. தீக்குளித்தோர், நஞ்சுண்டு மாய்ந்தோர் என்று ஒரு நீண்ட பட்டியலே உள்ளது-. 1964 சனவரியில் தன்னை எரித்துக் கொண்ட, கீழப்பழுவூர் சின்னச்சாமி தொடங்கி, 1965 மார்ச்சில் உடல் எரிந்தபடி ஓடிவந்த மயிலாடுதுறை மாணவர் சாரங்கபாணி வரையில் இறந்து போனவர்கள் ஏராளம்.

பிறகு ஈழத்தமிழர்களுக்கான ஈகம் தொடங்கியது. 1987 நவம்பரில், திருமுட்டத்தை (ஸ்ரீமுஷ்ணம்)ச் சேர்ந்த உதயசூரியன் என்னும் தி.மு.க., தொண்டன், ஈழத்தமிழர்களின் இன்னல் தீர வேண்டும், இந்திய ‘அமைதி’ப்படை திரும்பப் பெறப்பட வேண்டும் என்னும் கோரிக்கைகளுக்காகத் தீக்குளித்தான். அதன்பின் அப்துல் ரவூப், முத்துக்குமார் எனத் தொடர்ந்து தமிழ் மறவர்கள் பலர், தமிழீழத்திற்காகத் தங்களை ஈகம் செய்து கொண்டனர்.

தமிழீழத்திலும், மாவீரர்கள் திலீபனும், அன்னை பூபதியும், காலவரையற்ற பட்டினிப் போரில் ஈடுபட்டுத் தங்களை மாய்த்துக் கொண்டனர். பொது நன்மைக்காகத் தங்களையே அழித்துக்கொண்ட இத் தியாக வேங்கை கள் அனைவரையும், அவர்களுடைய உணர்வுகளையும் நாம் போற்றுகின்றோம். ஆனால் இப்போராட்ட முறை தொடர்ந்திடக் கூடாது என்பதே நம் விருப்பம்.

தோழர் தியாகுவைப் பட்டினிப் போராட்டப் பந்தலில் சந்தித்து, அவருடைய நியாயமான போராட்டத் திற்கு என்னுடைய மற்றும் நான் சார்ந்துள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையினுடைய ஆதரவைத் தெரிவித்து வந்தேன். எனினும், பத்து நாள் களுக்கு முன்பு தொலைபேசியில் அவருடன் தொடர்பு கொண்டு, போராட்டம் குறித்து மறு ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பவர் தியாகு. 1994 முதல் 2000 வரை இருவரும் இணைபிரியாமல், இணைந்து பணியாற்றிய நாள்களை என்னால் ஒரு நாளும் மறக்க முடியாது. அரசியல் கருத்து வேறுபாடுகள் சிலவற்றால், 2000ஆம் ஆண்டில் நாங்கள் பிரிந்து செயல்படத் தொடங்கினோம் என்றாலும், அவரிடம் இருந்து நான் கற்றவைகளையும், பெற்றவைகளையும் ஒருநாளும் மறந்ததில்லை. அந்த அடிப்படையில்தான் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரிமையோடு உரையாடினேன்.

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடப்பது என்பது, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மட்டுமின்றி, ஜனநாயகத் திலும், மனித உரிமையிலும் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் இழைக் கப்படும் அவமதிப்பாகும். அதனைத் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும் என்பதில் நம்மில் எவருக்கும் இரண் டாவது கருத்து இல்லை. அதற்கான கூட்டுப் போராட்டங்கள் பலவற்றை, ஒத்த கருத்துடையவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முன்னெடுக்கலாம்.

அப்படியல்லாமல், தோழர் தியாகு ஒருவரே தன் உயிரைப் பணயம் வைத்து இதுபோன்ற காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்க வேண்டாம் என்பதைச் சொல்லுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தியாகு, ஒரு மிகச் சிறந்த படிப்பாளி, நாட்டுக்குத் தேவையான அறிவாளி. அவர் தன்னை அழித்துக் கொள்ளும் அளவுக்கு, காமன்வெல்த் மாநாடு அப்படி ஒன்றும் நமக்குக் கடைசிப் போராட்டம் இல்லை.

இவ்வாறு நான் எழுதுவதைச் சிலர் திரித்துச் சொல்லக்கூடும். ஈழத்திற்கு எதிரானவன் என்றோ, தியாகுவின் போராட்டத்தை முனைமழுங்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன் என்றோ சிலர் கூறலாம். என்னை நன்றாக அறிந்த தியாகு உள்ளிட்ட நண்பர்கள் அப்படி ஒருநாளும் கருதமாட்டார்கள். ஒருவேளை கருதினாலும், அது குறித்துக் கவலை கொள்ளாமல் என் கருத்தை வெளியிடுவதுதான் சரி என்ற முடிவில் இதனை எழுதுகிறேன்.

தொடங்கிய பட்டினிப் போரைப் பாதியில் நிறுத்துவதா என்று தயங்க வேண்டாம். உங்கள் நோக்கம் உயர்வானது. போராட்ட வழிமுறைகளை மாற்றுவதில் பிழையில்லை.

அருமைத் தோழர் தியாகு அவர்களே, எழுந்து வாருங்கள் - இணைந்து போராடுவோம்!

Pin It