மிகுந்த பரபரப்புகளுக்கு இடையில், கோடிக்கணக்கான ரூபாய் செலவில், திருச்சியில் இளந்தாமரை மாநாடு நடைபெற்று முடிந்திருக்கிறது. வரவிருக்கும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வேலைகளை, பா.ஜ.க., மிக விரைந்து தொடங்கிவிட்டது என்பதையே இம்மாநாடு எடுத்துக்காட்டுகிறது. தங்களுடைய இந்துத்துவா கொள்கைகளை எல்லாம், எவருக்கும் தெரியாமல், பெரிய காவித்துணியாகப் போட்டு மூடிவிட்டு, முழுக்க முழுக்க மோடி என்னும் தனிமனிதரை முன்னிறுத்தியே தேர்தலைச் சந்திப்பது என்னும் முடிவுக்கு அக்கட்சி வந்துள்ளது என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

1925இல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., காலப்போக்கில் தன் கிளைகள் பலவற்றை விரித்தது. அவற்றுள் முதன்மையானது 1953இல், டாக்டர் முகர்ஜி தொடங்கிய ஜனசங்கம். அதுவே நெருக்கடி நிலைக் காலத்தில் பாரதிய ஜனதாக் கட்சியாகப் பரிணாமம் பெற்றது.

1990வரை மத்திய அரசில் ஆட்சியைப் பிடிப்பதற்கு அருகில் கூட நெருங்காத ஒரு கட்சியாகவே அது இருந்தது - நெருக்கடி நிலை இந்திராகாந்தி ஆட்சியின் எதிர்ப்பில் மலர்ந்த ஜனதா ஆட்சியில் இடம் பிடித்ததைத் தவிர. பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு அதனுடைய தீவிர இந்துத்துவா முகம் வெளிப்பட்டது. இந்துமத வெறியர்களால் ஆதரிக்கப்படும் கட்சியாக அது ஆயிற்று. எனினும் வாஜ்பாய் என்னும் மென்மையான முகமூடி ஒன்றை அணிந்துகொண்டு, 1998இல் கூட்டணி அமைச்சரவைக்குத் தலைமை ஏற்றது.

இப்போது மீண்டும் எப்படியாவது மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்னும் நோக்கில், களத்தில் இறங்கியுள்ளது. ஆளும் கட்சி தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள நினைப்பதும், எதிர்க்கட்சி அதனைக் கைப்பற்ற நினைப்பதும் மிக இயல்பான வைகளே. ஆனால், அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், இன்று பா.ஜ.க., மேற்கொள்ளும் தந்திரம் இயல்பானதாக இல்லை என்பதோடு, நேர்மையற்றதாகவும் உள்ளது.

தங்களின் அடிப்படைக் கோட்பாடு எது குறித்தும் இப்போது அவர்கள் பேசுவதில்லை. ஒரே நாடு, ஒரே பண்பாடு என்பதுபோன்ற முழக்கங்கள் எங்கோ மறைத்து வைக்கப்பட்டுள்ளன. திரும்பத் திரும்ப அவர்கள், இப்போது உச்சரிக்கும் ஒரே மந்திரம், ‘மோடி வல்லவர், மோடி வல்லவர்’ என்பது மட்டும்தான். இன்றைக்கு நாட்டில் காணப்படும் விலைவாசி உயர்வு, லஞ்ச ஊழல், கொலை கொள்ளை, ரூபாயின் மதிப்பு சரிவு, அண்டை நாடுகளின் அச்சுறுத்தல், பாலியல் வன்கொடுமைகள் அனைத்தை யும் மோடி என்னும் ஒரு தனிமனிதர் இந்தியாவின் பிரதமர் ஆனவுடன் தலைகீழாக மாற்றிவிடுவார் என்பது போல ஒரு சித்திரம் உருவாக்கப்படுகிறது. அதனை மக்களில் ஒரு பகுதியினர் - குறிப்பாக நிறையப் படித்த இளைஞர்கள் - அப்படியே நம்புகின்றனர் என்பதுதான் நம்மால் நம்பமுடியாத வேதனை.

ஏதோ, குஜராத்தை ஏற்கனவே அமெரிக்கா போல மோடி ஆக்கிவிட்ட தாகவும், பிரதமரானால் இந்தியாவையும் இன்னொரு அமெரிக்கா ஆக்கிவிடுவார் என்பதாகவும் ஏராளமான புனைவுகள் இணையத் தளங்களில் வலம் வருகின்றன(ஆனாலும் மோடியால் அமெரிக்கா செல்ல விசா மட்டும் வாங்க முடியவில்லை!). இந்தப் பொய்க் கூற்றை மெய்ப்பிக்க ஏராளமான தவறான தகவல்கள் வலைத்தளங்களில் தரப்படு கின்றன. அண்மையில் சீனாவில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றை, அகமதா பாத்தில் காணப்படும் பேருந்து நிலையம் என ஒருவர் தளத்தில் வெளியிட, அந்தப் புரட்டை வேறு சில நண்பர்கள் தோலுரித்துக் காட்டினர். எனினும் முதலில் சொல்லப்பட்ட பொய்யைப் பல்லாயிரக் கணக்கானவர்கள் பார்த்துள்ளனர் என்பதும், அவர்கள் இன்னும் பல்லாயிர வர்களிடத்தில் அதனைக் கூறியிருப்பர் என்பதும்தான் உண்மை. இப்படித்தான் ‘மோடி புகழ்’ வலைத்தளங்களில் பரவிக்கொண்டுள்ளது.

ஓர் அமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல், தலைமைப் பொறுப்பில் ஒரு தனி மனிதரை மட்டும் மாற்றிவிட்டால், எல்லாம் சரியாகிவிடும் என்பது விஞ்ஞான அரசியலுக்கு நேர்முரணானது. தங்களின் உண்மை முகத்தைக் காட்டத் துணிவில்லாமல், இப்படி ஒரு பொய் முகத்தை முன்னணியில் நிறுத்துகிறது பா.ஜ.க.,. பத்தாண்டு களாக ஆட்சியில் உள்ள காங்கிர சின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி அவற்றைத் தமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் முயற்சி ஒரு பக்கம் என்றால், தாங்கள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தோம் என்பதை மறைப்பது இன்னொரு பக்கமாக உள்ளது.

திருச்சியில் உரையாற்றிய மோடி, இன்றைய பொருளாதார வீழ்ச்சி குறித்து வீராவேசமாகப் பேசியுள்ளார். பன்னாட்டு நிறுவனங்களின் நிதியை நம்பி, நாடு நடப்பதாகக் கூறியுள்ளார். உண்மைதான். 1990களில் இந்திய அரசு ஏற்றுக்கொண்ட உலகமயமாதல், தனியார்மயமாதல், தாராளமயமாதல் ஆகிய கொள்கைகள் நாளுக்குநாள் நம் நாட்டின் பொருளாதாரத்தையும், சிறு தொழில் வளர்ச்சியையும் அழித்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. சிறுதொழில்கள் எல்லாம் இருந்த தடயம் தெரியாமல் அழிந்து கொண்டிருக்கின்றனவே என்பது மோடியின் கவலை.

இப்போது மோடியிடம் கேட்பதற்கு நம்மிடம் சில வினாக்கள் உள்ளன. 1998  2003 காலகட்டத்தில், பா.ஜ.க., மத்தியில் ஆட்சியில் இருந்த போது, பொருளாதாரக் கொள்கையில் என்ன மாற்றம் நேர்ந்தது? பன்னாட்டு நிறுவனங்களை அந்த ஆட்சி அடித்து விரட்டி விட்டதா? சிறுதொழில்களை ஊக்குவித்து மேலேற்றியதா? அன்றைய அரசை விடுங்கள், இன்றைக்கு குஜராத்தில் என்ன நடக்கிறது? பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட பன்னாட்டு நிறுவனங் களின் நிதி இப்போது அங்கே வந்து குவிந்திருக்கிறது என்பதுதானே உண்மை! அதனால்தானே ஊடகங்களும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும் மோடியின் ஊதுகுழல்களாக மாறி, இன்றைய இளைஞர்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.

வைகோ உள்ளிட்ட தமிழீழ ஆதரவாளர்கள் பலர் இன்று ஒரு புதிய கற்பனையான செய்தியைப் பேசத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த கடந்த பத்தாண்டுகளில்தான் ஈழத்திற்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொண்டது என்றும், பா.ஜ.க., ஆட்சியில் ஈழ ஆதரவு நிலையே இந்திய அரசிடம் நிலவியது என்றும் கூறுகின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்னால் போய் யார் ஆதாரங்களைத் திரட்டப் போகிறார்கள் என்னும் துணிச்சலில் இப்படிச்சொல்லப்படு கிறதோ என்று எண்ண வேண்டியுள்ளது. இரண்டாயிரமாவது ஆண்டில், 35 ஆயிரம் சிங்கப்படையினர், யாழ்ப்பாணத் தில் புலிகளிடம் சிக்கிக் கொண்டனர். கையறு நிலையில் கை பிசைந்து நின்றது இலங்கை அரசு. அப்போதே ஈழ யுத்தம் ஒரு முடிவுக்கு வந்திருக்கக் கூடும். ஆனால், அன்று இந்தியாவில் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி நடத்திய பா.ஜ.க., அரசுதான் தலையிட்டு அவர்களைக் காப்பாற்றியது. புலிகளின் போரில் ஒரு பின்னடைவு ஏற்படவும் அந்நிகழ்வு ஒரு காரணமாக இருந்தது. இப்படி இன்னும் பல நிகழ்வுகளை நம்மால் எடுத்துக்காட்ட முடியும்.

இவற்றை எல்லாம் தாண்டி, வைகோ, நெடுமாறன் போன்றவர்களிடம் நாம் ஓர் எளிய கேள்வியை முன்னிறுத்த வேண்டியுள்ளது. பா.ஜ.க., அரசு ஈழத்திற்கு ஆதரவாக இருந்தது என்பது உண்மையானால், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் ஏன் பா.ஜ.க.,வை ஆதரிக்காமல், காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்தார்கள் என்று நமக்குப் புரியவில்லை.

இவ்வாறு பொருளாதாரம், ஈழம், காஷ்மீர் சிக்கல், இட ஒதுக்கீடு என்று பல்வேறு துறைகளிலும் ஒத்த கருத்தினை யும், ஒருமித்த போக்கினையும் கொண்டுள்ள கட்சிகளே பா.ஜ.க.,வும், காங்கிரசும். இந்த உண்மைகளுக்கு எல்லாம் திரைபோட்டு மறைத்துவிட்டு, மாற்றம் தேவை, வளர்ச்சி தேவை என்னும் சொற்களை மந்திரம் போலச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எந்த நிலையில் இருந்து எந்த நிலைக்கான மாற்றம் தேவை, எந்த இடத்திலிருந்து எந்த இடம் நோக்கிய வளர்ச்சி தேவை என்பனவற்றை விளக்குவதும் அவற்றுக்கான திட்டங்களை வெளியிடுவதும்தான் நேர்மையான அரசியல். அந்த நேர்மை அறவே இல்லாமல், தந்திரங்களாலும், மோசடிகளாலும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற நினைப்பைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளி எறிய வேண்டிய நிலையில் இன்று உள்ளோம்.

இத்தனை பெரிய நாட்டை ஒரே ஒரு மனிதர் முற்றிலும் மாற்றிவிடுவார் என்றால், மோடி என்ன அரசியல்வாதியா அல்லது மந்திரவாதியா என்று பொது அறிவு கொண்ட எவருக்கும் கேட்கத் தோன்றும்.