இந்தியா மதச்சார்பற்ற நாடு. இந்திய இராணுவத்தில் மதத்திற்கு இடமில்லை. இரண்டும் சரிதான். எனினும் இவ்விரண்டும் இன்று விமர்சனத்திற்கு உரியவைகளாக மாறிவிட்டன. ரேவாரி என்ற இடத்தில் மோடி கலந்து கொண்ட பா.ஜ.க., பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, அவரின் அருகில் அமர்ந்திருந்தார் இந்தியாவின் முன்னாள் தரைப்படைத் தளபதி வி.கே.சிங். இதிலிருந்து அவர் ஓர் இந்துத்துவ மதவாதச் சிந்தனைக்குரியவர் என்பது வெளிப்படையாகிவிட்டது. இப்படிப்பட்டவர்தான் இந்தியாவின் இராணுவ தளபதியாக இருந்தார்.

வி.கே.சிங் தளபதியாக இருந்தபோது, அவரால் தொழில் நுட்ப பணிகள் குறித்த உளவுப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் மூலம் காஷ்மீரில் உமர் அப்துல்லா தலைமையிலான அரசைக் கவிழ்க்க, தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்குப் பெருமளவு பணம் கொடுத்துள்ளதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது. இதை வி.கே.சிங் மறுக்கவில்லை. மாறாக அரசுக்கு ஆதரவான, பிரிவினைக்கு எதிரான காஷ்மீர் இயக்கங்களுக்குப் பணம் கொடுப்பதும், ஆதரவளிப்பதும் காலம் காலமாக நடந்து வருவதுதான் என்று சொன்னதோடு, காஷ்மீர் மாநில அமைச்சர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லி இருக்கிறார்.

சிங்கின் இந்தப் பேச்சுக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. எனவே காலம் காலமாக இராணுவம் செய்து வரும் பணப் “பட்டுவாடா” குறித்து மத்திய அரசுக்குத் தெரியாது என்று தெரிகிறது.

மத்திய அரசுக்குத் தெரியாமல், அதன் ஆளுமை அல்லது நேரடிப் பார்வையுள்ள காஷ்மீர் மாநில அரசியலில், இராணுவத் தளபதி மூக்கை நுழைத்தது ஏன்?. உமர் அப்துல்லா அரசைக் கவிழ்க்க, தன் கட்டுப்பாட்டில் உள்ள உளவு அமைப்பின் மூலம் பணபலத்தைப் பயன்படுத்தியுள்ளது ஏன்?.

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், இன்றைய மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், “அரசியல் கட்சியினருக்கு ராணுவம் பணம் வழங்க வேண்டியதில்லை. அப்படிச் செய்யக்கூடாது. வி.கே.சிங் அவ்வாறு செய்திருந்தால் அது தவறு. இராணுவம் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்” என்று சொல்கிறார்.

கொடுக்கப்பட்ட பணம், என்ன காரணத்திற்காக செலவு செய்யப்பட்டது. எந்தெந்த இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், அமைச்சகங்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது போன்ற செய்திகள் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

அசாம் முதல்வர் தருண் கோகாய், வி.கே.சிங் கிழக்கு மண்டலத் தளபதியாக இருக்கும்போது நாட்டு நலன் கருதி, அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்த யோசனை தெரிவித்ததாகவும், அதைத் தான் ஏற்கவில்லை என்றும் கூறியிருப்பது கவனத்திற்கு உரியது.

அன்று தளபதியாக இருக்கும்போது காஷ்மீர் முதல் அசாம் வரை மூக்கை நுழைத்த சிங், இன்று மேடையில் மோடியுடன்.