சமுதாயத்தில், கலைஞர்கள் என்பவர்கள் பிரிக்கமுடியாத, அதே நேரத்தில் குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள் ஆவர். தங்களுடைய சமுதாயத்தின், இனத்தின், கலாச்சாரம், பண்பாடு ஆகியனவற்றைப் எதிரொலிப்பவர்களாகக் கலைஞர்கள் கருதப்படுகின் றனர். அவர்களுக்குக் கிடைக்கும் புகழும், பாராட்டும், ஏற்பிசைவும் அக்கலைஞர்கள் வேர்விட்ட இனத்திற்கானதாகக் கொண்டாடப்படுகிறது. சிறப்பினைச் சேர்த்த கலைஞர்கள் உச்சிமுகர்ந்து பாராட்டப்படுகின்றனர்.

அதேநேரத்தில், அவர்களுக்கு ஏதேனும் இழிவு ஏற்பட்டால், இனத்திற்கு ஏற்பட்ட இழிவாகக் கருதி ஒட்டுமொத்த மக்களும் பொங்கி எழுகின்றனர். உலகம் முழுவதும் இதுதான் நிலை என்றாலும், இந்தியாவில், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் கொஞ்சம் அதிகம்.

மற்ற நாடுகளில் திரைக்கலைஞர்கள் மட்டுமல்ல, கிராமியக் கலைஞர்கள் உள்பட அனைவரும் மக்களால் கொண்டாடப்படுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தளவில், திரைப்பட  நடிகர்களுக்கு மக்களிடம் இருக்கின்ற வரவேற்பு, பிற துறைக் கலைஞர்களுக்கு இல்லை என்று சொல்லலாம். மக்கள் இத்தனை முக்கியத்துவம் தருகின்ற கலைஞர்கள், மக்கள் நலனில் எவ்வளவு தூரம் கவலையும், அக்கறையும் கொண்டுள்ளனர் என்பதையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.

முல்லைப் பெரியாறு போராட்டங்கள் நமக்குள் இக்கேள்வியை எழுப்பியிருக்கின்றன. முல்லைப் பெரியாறு போராட்டம் பல்வேறு வடிவங் களில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள், அமைப்புகள் முன்னெடுத்த போராட்டமாக இல்லாமல், தன்னெழுச்சியான மக்கள் போராட்டமாக உருவெ டுத்த காரணத்தால் போராட் டம் நீர்த்துப் போகாமல், ஆங்காங்கே தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருக்கிறது.

அணு உலைக்கு எதிரான கூடங்குளம் மக்கள் போராட்டமும் இந்த அடிப்படையிலேயே தொடர்கிறது. முல்லைப் பெரியாறு பிரச்சினையை, நதிநீர்ப் பங்கீடு என்ற கோட்டிலிருந்து விலக்கி, "இனப்பிரச்சினை' என்னும் சிக்கலுக்குள் கொண்டுபோய் நிறுத்திவிட்டன கேரள அரசியல் கட்சிகள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கண்டனக் கூட்டங்கள், மக்கள் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என்கிற போராட்ட வழிகளில் கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகள் காட்டப்பட்டன. இப்பிரச்சினையில் நடுவண் அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து தொடர்வண்டி மறியல்கள் நடைபெற்றன.

ஆனால் கேரள மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்கு ஜனநாயக வழியிலான போராட்டங்களை விட்டு விலகி, வன்முறையைக் கையாளத் தொடங்கினர். கேரள முதலாளிகளின் பண்ணைகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும் தலைமுறைகளாக வேலை செய்துவந்த தமிழர்களை அடித்து விரட்டினர். பெண்கள், குழந்தைகள் எனக் குடும்பம் குடும்பமாக, இரவோடு இரவாக உயிர்ப்பிழைத்தால் போதுமென்ற நிலையில் இங்கு வந்து சேர்ந்தனர்.

காடுகள் வழியாக, மலைகளைத் தாண்டி இருட்டில் தட்டுத்தடுமாறி, மாற்றுத்துணி கூட இல்லாமல் தமிழர்கள் கண்ணீரோடு வந்த நிலையைக் கண்ட பின்னர்தான், தமிழ்நாட்டின் போராட்டக்களமும் கொஞ்சம் மாறுதலுக்கு உள்ளானது.

தமிழ்நாட்டிலுள்ள, மலையாளிகளின் கடைகள் மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கே தமிழ்நாடு அரசு வழக்குகளைப் போட்டது. கேரள அரசோ தமிழர்களை அடித்துவிரட்டிய தன் மக்களின் பின்னால் அமைதியாக நின்றது. மனம் பொறுக்கா மல், தமிழகத்தில் மூவர் தீக்குளித்தனர். இவையயல்லாம் முல்லைப் பெரியாறு போராட்டத்தைச் சூடு தணியாமல் முன்னெடுத்துச் செல்கின்றன.

மலையாளத் திரைத்துறையினர் கூட்டாக இங்கு வந்து, முதலமைச்சரைச் சந்தித்து விளக்கமோ, வேண்டுகோளோ வைக்கின்றனர். இங்கிருக்கின்ற தங்கள் இனத்தவரைப் பற்றிய கவலையை வெளிப்படுத்து கின்றனர். இங்கே தமிழ்த் திரைப்படத்துறையினரின் நிலை என்ன? ஆங்காங்கே நடைபெறும் போராட்டங் களில் ஒருசில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பங்கெடுத்து வருகின்றனர். அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தமிழ்நாட்டு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரோ, அரசியல்வாதியாகவும் இல்லாமல், நடிகர் சங்கத் தலைவராகவும் இல்லாமல்,  இரண்டும் கலந்த கலப்பட "வியாபாரியாக' மட்டும் இருக்கிறார்.

பிரபல நடிகர்கள் பலரும் மலையாளிகளின் வியாபார நிறுவனங்களின் விளம்பரங்களில் தொண்டை கிழியக் கத்திக்கொண்டு இருக்கின்றனர். மறைந்த மதிப்பிற்குரிய நடிகர் திலகம் சிவாஜியை, தமிழகத்தின் மார்லன் பிராண்டோ என்று அறிஞர் அண்ணா சொல்வார். மார்லன் பிராண்டோ தன்னுடைய புகழை, செல்வாக்கை மக்களுக்காகப் பயன்படுத்தினார். கருப்பின மக்களுக்காக, மார்டின் கிங் ஜுனியரோடு போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். 1968இல் ஜுனியர் கொல்லப்பட்டபோது, தன்னுடைய படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அவருக்கு இரண்டாவது முறையாக வழங் கப்பட்ட நோபல் பரிசை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார். எதற்காகத் தெரியுமா?

அமெரிக்காவில் இந்தியர்கள் முறையாக நடத்தப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நோபல் பரிசை புறக்கணித்தார். 2002இல் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தபோது, எதிர்ப்புக் குரல் கொடுத்ததோடு, எதிர்ப்பு ஊர்வலங்களில் மக்களோடு மக்களாகச் சென்றபோது அவருக்கு வயது 78 என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய மனித நேயரோடு ஒப்பிடப்பட்ட "நடிகர் திலகத்தின்' மகன் பிரபு, என் இனம் என் உரிமை என்று குரல் கொடுத்திருக்க வேண்டியவர், கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்தில்... மலையாள வியாபாரிக்காகக் கண்கள் பிதுங்க, நரம்புகள் புடைக்க வசனம் பேசுகிறார். "தம்பி' திரைப்படத்தில் தமிழீழ தேசியத் தலைவரின் பெயருடைய கதாபாத்திரத்தில் இன உணர்வும், சமூக அக்கறையும் காட்டிய நடிகர் மாதவன், "ஜாய் ஆலுகாசில் நகை வாங்கினால்தான் சந்தோ­ம்' என்கிறார்.

"எதிலும் சேர்த்தி' இல்லாத நடிகர் விஜய், "தங்கமான உறவு' என்று தரச்சான்றிதழ் தருகிறார் ஜோஸ் ஆலுகாஸ் விளம்பரத்தில். அதுபோல் மணப்புரம் கோல்டு லோன் விளம்பரத்தில், "கையில இருக்கே தங்கம். கவலை ஏன்டா சிங்கம்' என்று முகமெல்லாம் பூரிக்கிறார் நடிகர் விக்ரம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மலபார் கோல்டு நிறுவனத்தின் விளம்பரத்தில் "இசைஞானி' இளையராஜா...நடிப்பதோடு... அந்த நிறுவனத்தின் "விளம்பரத் தூதுவ' (Brand Ambassador)ராகவும் இருக்கிறார். இசை, மொழி, இனம் என்னும் எல்லை களுக்கு அப்பாற்பட்டது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் இசைஞானிக்கு "தமிழன்' என்ற அடையாளமும், "தாய் மொழித் தமிழ்' என்ற அடையாளமும் இருக்கிறதல்லவா? மத்திய அரசு (2008)இல் பத்ம விருதுகளை அறிவித்தபோது, இளைய ராஜாவின் பெயர் அந்தப் பட்டியலில் இல்லை என்பதை அறிந்ததும், "என்ன தகுதியில்லை எங்கள் இசை ஞானிக்கு?' என்று ஆதிக்க மையத்தை நோக்கிக் கண்டன அம்புகளைத் தொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அப்படிப்பட்ட மக்களின் நலனில் அந்த "மாபெரும் கலைஞன்' கொண்டுள்ள அக்கறைதான் என்ன? கிரிவலத்திற்கு விளக்குப் போட்டதா?

இன்னும் சொல்லப் போனால், மற்றவர்களை விட இளையராஜாதான் முல்லைப்பெரியாறு போராட் டத்தில் முன்நின்றிருக்க வேண்டும். "பாட்டாளி மக்களின் பாவலர்' வரதராசனாரின் தம்பி, வேளாண் மண்ணான "பண்ணைபுரத்து மைந்தன்', மக்களுக்கான வாழ்வுரிமைப் போராட்டத்தில் ஆற்றிய பங்கென்ன? இந்தக் கேள்விகளைக் கேட்பதற்கு நமக்கு உரிமை இருக்கிறதா, இல்லையா?

இந்த விளம்பரங்கள் எல்லாம் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முன்பாகவே எடுக்கப்பட்டவை, இத்தனை மாதங்களுக்கு என்று ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது... என்ன செய்வது என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்படக் கூடும். ஒப்பந்தம் நடிகரைக் கட்டுப்படுத்துவதுபோல், அந்த நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும்தானே! சரி ஒப்பந்தப்படி விளம்பரங்கள் வேண்டுமானால் தொடரட்டும். தங்கள் சொந்த மண்ணின் பிரச்சினைக்காகப் பேசுவதற்கு என்ன தடை? இவர்களின் கருத்துச் சுதந்திரம், இன உணர்வு ஆகியவற்றைக் கூடவா அந்த ஒப்பந்தங்கள் கட்டுப் படுத்துகின்றன? முல்லைப் பெரியாறில் கேரள அரசு செய்துவரும் அடாவடித்தனங்களைக் கண்டித்து, தமிழக மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக இந்த நடிகர்கள் பேசினால், என்ன இழப்பு வந்துவிடும் அவர்களுக்கு.

ஏற்கனவே ஒப்பந்தப்படி தொகைகூட கொடுக்கப்பட்டிருக்கும். அவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற தமிழக ரசிகர்களுக்காக, அப்படியே கொஞ்சம் பண இழப்பைச் சந்தித்தால்தான் என்ன. திரைத்துறையினரை மட்டும் சுட்டுவது ஏன் என்று சிலர் கேட்கலாம். காரணம் உயரத்தில் நின்று கொண்டிருப்பவர்கள் அவர்கள். அந்த உயரத்திலிருந்து அவர்கள் சொல்லும்போது, அதிக வீச்சோடு சென்று சேரும். கவனிக்கப்படும். மக்களிடம் உள்ள திரைப்பட மோகத்தால், அனைவரின் கவனத்தையும் எளிதில் ஈர்ப்பவர்கள். அந்த ஈர்ப்பை சொந்த நலனுக்கு மட்டும் பயன்படுத்தாமல், கொஞ்சம் பொதுநலனுக்காகவும் பயன்படுத்த முன்வரவேண்டும்.

மக்களோடு மக்களாக நின்று, அவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு வாழ்ந்த கலைஞர்கள்தான் இன்றைக்கும், என்றைக்கும் போற்றப்படுவார்கள். மார்லன் பிராண்டோ, நடிகவேள் எம்.ஆர்.இராதா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்றவர்களைச் சொல்லலாம். இதை நம்முடைய இன்றைய கலைஞர்கள் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

இந்தப் போராட்டத்தில் மக்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதையும் நாம் பார்க்க ¼வ்ண்டியதிருக்கிறது. ஜாய் ஆலுகாஸ், ஹசானா, கல்யாண் ஜுவல்லர்ஸ் போன்ற மலையாளிகளின் கடைகளில் கூட்டம் கொஞ்சமும் குறையவேயில்லை. இது வெறும் கேரள எல்லையோர விவசாயிகளின் போராட்டம் மட்டுமன்று. தமிழர்களின் உரிமைக்கான போராட்டம். மக்கள் மலையாளிகளின் கடைகளுக்குச் செல்லாமல் புறக்கணித்திருக்க வேண்டும்.

நம்மையும், நம்முடைய உணர்வுகளைப் புரிந்து ஏற்றுக் கொள்ளா தவர்களைப் புறக்கணிக்க நொடிப்பொழுதும் நாம் தயங்கக்கூடாது. இந்திய விடுதலைப் போராட்டத்தில், அன்னிய பொருட்கள் பகிஷ்கரிப்பு (புறக்கணிப்பு) என்பது ஒரு முக்கியமான போராட்ட வடிவமாக இருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது. இனத்தின் உரிமைக்கான போராட்டங்களில் அனைவரும் குறைந்தளவு அக்கறையோடாவது நடக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் அழைப்புவிடுத்து, அதில் மக்கள் கலந்து கொண்ட போராட்டங்கள்தான் தமிழ்நாட்டில் மிகுதியும் நடைபெற்றுள்ளன. ஆனால் அழைப்பே இல்லாமல், அரசியல் கட்சிகள் தாமாகவே ஓடிவந்து கலந்துகொண்ட போராட்டம், முல்லைப் பெரியாறுக்காக மக்கள் முன்னெடுத்துச் செல்லுகின்ற இப்போராட்டம். இதில் திரைப்படக் கலைஞர்கள் மட்டுமல்ல, பெருவாரியான மக்களும் விலகியே நிற்கின்றனர் என்ற உண்மையை அனைவரும் உணரவேண்டும்.
Pin It