சில பார்ப்பன ஏடுகளும், ஜெயா, கேப்டன் தொலைக்காட்சி களும், எதிர்க்கட்சிகளும், தி.மு.க. எதிர்ப்பாளர்களும், தினந்தோறும் ' ஸ்பெக்ட்ரம் ' பற்றியே பேசிக்கொண்டுள்ளனர். 1,76,000 கோடி ரூபாயை, மேனாள் அமைச்சர் ராஜா கொள்ளையடித்து, அதில் பெரும்பகுதியைக் கலைஞரிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டதைப் போன்ற, ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்காக அவர்கள் பெரும்பாடுபடுகின்றனர்.

a_rajaகடந்த நான்கரை ஆண்டு காலத் தி.மு.கழக ஆட்சியில், குறை சொல்வதற்கு ஏதும் கிடைக்காததால், 'ஸ்பெக்ட்ரம்' என்பதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், வரும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்னும் நம்பிக்கையிலேயே, ' ஸ்பெக்ட்ரம் ' ஒவ்வொரு நாளும் ஊதிப்பெருக்கப்படுகின்றது.

உண்மை நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது. கிராமங்களில் உள்ள மக்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டம், அவசர உதவிக்கு 108, நூறு நாள் வேலைத்திட்டம், 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, அரசிடமிருந்து பெற்ற வண்ணத் தொலைக்காட்சி முதலியன குறித்துத்தான் பேசுகின்றனரே அல்லாமல், ஸ்பெக்ட்ரம் பிரச்சினை எந்தத் தாக்கத்தையும் அவர்களிடம் ஏற்படுத்தவில்லை. நகர்ப்புறம் சார்ந்த, பெரும்பாலும் வாக்களிக்க வாக்குச் சாவடிகளுக்குப் போகாத, ஒரு பகுதியினர்தான் இது குறித்துத் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

எனினும், உண்மை என்ன என்று விளக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அந்த அடிப்படையில் சில எளிமையான விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன :

* 1993 ஆம் ஆண்டு வரை, கம்பிகளின் (Cable) மூலமே, தொலைபேசிகளில் செய்திகள் பரிமாறப்பட்டன. 94க்குப் பிறகு, கம்பிகளே இல்லாமல், அலைக்கற்றைகள் மூலம் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் கம்பியில்லா வான்பேசியும் (Wireless), செல்லிடப்பேசிகளும் (Mobile) வந்தன. அந்த அலைக்கற்றையைத்தான் ஸ்பெக்ட்ரம் என்கிறோம்.

*   இவற்றை 1G, 2G, 3G ஸ்பெக்டரம் என்று கூறுவர் (G- Generation). 1G‡ முதல் தலைமுறை, 2G ‡ இரண்டாம் தலைமுறை, 3G ‡ மூன்றாம் தலைமுறை எனப் பகுக்கின்றனர். ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பேசக் கூடிய, இன்றும் காவல்துறையினர் கையில் வைத்துள்ள வயர்லெஸ்தான் முதல் தலைமுறை அலைக்கற்றை. அதாவது 1ஜி ஸ்பெக்ட்ரம். ஆனால் அதனை அவ்வாறு அழைக்காமல், ' வயர்லெஸ் ' என்றே அழைத்தனர்.

*  இப்போது நாம் பயன்படுத்தும் செல்லிடப்பேசிகள், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகள் (  2G Spectrum ). இப்போது வந்து கொண்டிருக்கின்ற, எதிர் முனையில் பேசுகின்றவரின் படத்தையும் காட்டுகின்ற, ஏராளமான புள்ளி விவரங்களை உடனுக்குடன் தரக்கூடிய, புதிய செல்லிடப் பேசிகள், மூன்றாம் தலைமுறை அலைக்கற்றைகள் ( 3G Spectrum ).

*  மூன்றாம் தலைமுறை அலைக்கற்றைகள், இப்போது ஏலத்துக்கு விடப்படுகின்றன. எந்த நிறுவனம் கூடுதல் பணம் தருகின்றதோ, அதற்கு அந்த உரிமம் (லைசென்ஸ்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைக்கும் ஏலம் விட்டிருந்தால், பல ஆயிரம கோடி ரூபாய் அரசுக்குக் கிடைத்திருக்கும். அப்படிச் செய்யாமல், முதலில் வருபவருக்கு முதலில் வழங்கப்படும் என்று அறிவித்ததால் பல ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் என்று இந்தியத் தலைமைக் கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அறிக்கை கூறுகின்றது. இதனையே ஆங்கிலத்தில் CAG Report  என்று கூறுகின்றனர்.

*  முதலில், அது வெறும் அறிக்கைதானே ( Report ) தவிர, குற்றப்பத்திரிகை ( Charge sheet ) அன்று என்பதை நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட அறிக்கைகள் ஆண்டுதோறும் வெளிவந்துள்ளன. ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும், அரசின் நடவடிக்கையால், பல கோடி ரூபாய் நாட்டுக்கு நட்டம் என்று இதே தணிக்கையாளர் அறிக்கை கூறியுள்ளது. அப்போதெல்லாம் எந்த ஊடகமும் அதனைப் பெரிதுபடுத்தவில்லை.

*   இப்போதும், 59 பக்கங்களைக் கொண்டுள்ள CAG அறிக்கையில், எந்த ஓர் இடத்திலும் ' ஊழல் '    ( Scam ) என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. வருவாய் இழப்பு ( Loss of revenue ) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

*  வருவாய் இழப்புக்கு, ' ஏலம் ' விட வேண்டாம் என்று எடுத்த கொள்கை மாற்றம்தான் ( policy shift ) காரணம் என்கிறது அந்த அறிக்கை.

* அந்தக் கொள்கை மாற்றத்தை முன்மொழிந்தவர் யார்? ஏற்றுக் கொண்டவர் யார்?

*      ஒவ்வொரு துறையிலும், ஆட்சியில் உள்ள அரசு ஒரு கொள்கை முடிவை எடுக்கும். அதற்குத் தேசியக் கொள்கை ( National Policy) என்று பெயர். கல்விக் கொள்கை, உணவுக் கொள்கை, ஜவுளிக் கொள்கை எனப் பல்வேறு கொள்கைகள் உள்ளன. அந்தக் கொள்கை களை எல்லாம், அரசால் நியமிக்கப்படும், அனுபவம் உள்ள வல்லுநர் குழுவே எடுக்கின்றது.

*     தொலைத் தொடர்புக் கொள்கை பற்றிய முடிவுகளை எடுக்க, ' TRAI ' ( Telecom Regulatory Authority of India ) என்று ஒரு குழு உள்ளது. அந்தக் குழு, 1994 இல், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை (  2G Spectrum) ஏலத்திற்கு விட வேண்டுமென முடிவெடுத் தது. அதனை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது. அந்தக் கொள்கைக்கு ' 1994 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு தேசியக் கொள்கை ' (  NTP 94 - National Telecom Policy - 1994 ) என்று பெயர்.

*  அதன் அடிப்படையில், சில பெரிய நிறுவனங்கள் அதனை ஏலத்துக்கு எடுத்தன. ஆனால், அவை தங்களுக்கு வணிக அடிப்படை யில் கட்டுபடியாகவில்லை ( Commercially not viable ) என்று கூறி 1998 இல் அரசிடமே திருப்பிக் கொடுத்து விட்டன.

*  அதனால், அந்தக் குழு ( TRAI ), 99ஆம் ஆண்டு மீண்டும் கூடி, இனி ஏலத்திற்கு விட வேண்டாம். முதலில் வருகின்றவர்களுக்கு முதலில் ( First come first serve basis ) என்னும் அடிப்படையில் கொடுக்கலாம் என முடிவெடுத்தது. அதனை நாடாளுமன்ற மும்,அன்றைய அமைச்சரவையும் ஏற்றன. புதிய கொள்கைக்கு, ' New NTP 99 ' என்று பெயர்.

*  எனவே எந்த ஒரு கொள்கை முடிவையும், அமைச்சராக இருந்த ஆ.ராசா  தனித்து எடுக்கவில்லை. அப்படி முடிவெடுக்க எந்த அமைச்சருக்கும் அதிகாரமில்லை.

*  1999 முதல், அத்துறைக்கு அமைச்சர்களாக இருந்த பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதி மாறன் அனைவரும், அக்கொள்கைப்படி, முதலில் வருபவருக்கு முதலில் என்ற அடிப்படையில்தான் உரிமம் கொடுத்தனர். ஆ.ராசாவும் அதனைத்தான் செய்தார்.

*   மற்ற அமைச்சர்களைப் போலவே, ராசாவும் செயல்பட்டிருக்கும் போது, ராசா மீது மட்டும் பாய்வது ஏன்?

*      முன் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கையின் (  CAG Report ) முகவுரையில், ' இந்தத் தணிக்கை, 2003 ‡ 04 முதல் 2009 ‡ 10 காலத்தை  உள்ளடக்கியுள்ளது ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆ.ராசா பொறுப்பில் இருந்த 2007 ‡ 10 காலத்தை மட்டும் குறிவைத்து ஆய்வு செய்திருப்பது ஏன்?

*    வருவாய் இழப்புக்கு, TRAI என்னும் அமைப்பையோ, நாடாளுமன்றத்தையோ, அமைச்சரவையையோ குற்றம் சொல்லாமல், ஒரு தனிப்பட்ட நபரை மட்டும் பொறுப் பாக்குவது ஏன்?

* அந்த அறிக்கையே, வருவாய் இழப்பு பற்றிய எங்கள் மதிப்பீடு, ' உத்தேசமானதுதான்' ( Presumptive ) என்று குறிப்பிடுகிறது. மேலும், தன் முகவுரையில், நாங்கள் குறிப்பிட்டுள்ள தொகை விவாதத்திற்குரியதே ( However, the amount of loss could be debated ) என்றும் கூறுகிறது.

*   வருவாய் இழப்புத் தொகை, எப்படியயல்லாம் கணக்கிடப்பட்டுள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு:‡ எஸ் டெல்        ( S Tel ) என்கிற நிறுவனத்திற்கு உரிமம் கொடுத்தது தவறு. அது சரியான அனுபவம் உள்ள நிறுவனம் அன்று. 18 கோடி ரூபாய்க்குப் பதிலாக, வெறும் 10 இலட்சம் ரூபாயைத்தான் அது ' பங்கு முதலீடாகக் ' ( Share capital ) கொண்டுள்ளது என்று அறிக்கை கூறுகின்றது (பக்.42). ஆனால் அதே அறிக்கை, இன்னொரு இடத்தில் ( பக்.52 ), வேறு மாதிரியான ஒரு தகவலைத் தருகின்றது. எஸ் டெல் நிறுவனம், 05.11.2007 ஆம் நாளிட்ட தன் கடிதத்தில் 6000 கோடி ரூபாய் தருவதாகவும்,  பிறகு அதே நிறுவனம் 27.12.2007 ஆம் நாள் கடிதத்தில், குறிக்கப்படும் தொகையைவிட, 13,752 கோடி ரூபாய் கூடுதலாகத் தருவதாகவும் எழுதியுள்ளது. அந்தத் தொகைகளையும், அதே மாதிரி வேறு நிறுவனங்களிடம், வேறு தொகைகளையும் பெற்றுக்கொண்டிருந்தால், அரசுக்குப் பல கோடி ரூபாய் இலாபம் கிடைத்திருக்கும். அவற்றைப் பெறாததால், 53,523 கோடி ரூபாய், வருவாய் இழப்பு என்கிறது.

*    நிறுவனமே உருப்படியில்லாதது என்று கூறிவிட்டு, அந்த நிறுவனம் கொடுப்பதாய்க் கூறிய தொகையை வாங்காததால், 53 ஆயிரம் கோடிக்கு மேல் நட்டம் என்றால் என்ன செய்வது?

*    இப்படிப் பல ஆயிரம் கோடி ரூபாய்களைக் கூட்டிச் சேர்த்துத்தான், 1,76,000 கோடி வருவாய் இழப்பு என்கிறது அந்த அறிக்கை.

*    இறுதியாக ஒன்று ‡

TRAI குழு, ஏன் ஏலத்திற்கு விட வேண்டாம் என்று முடிவெடுத்தது?

அந்தக் குழுவே கூறும் காரணம் இதுதான். ஓர் அரசு எல்லாவற்றிலும் இலாப, நட்டக் கணக்குப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. மக்கள் நலத் திட்டங்களால் ஏற்படும் இழப்பை அரசு ஏற்க வேண்டும் என்பதுதான்.

*     1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசித் திட்டத்தால், நாட்டுக்கு வருவாய் இழப்பு இருக்கவே செய்யும். உரம், எரிபொருள் முதலியனவற்றிற்கு அரசு மானியம் வழங்கப் படுகிறது. நட்டம்தான். வேண்டாம் என்றோ, ஊழல் என்றோ அதனைக் கூற முடியுமா?

*  மக்கள் நலத்திட்டங்களில் ஏற்படும் வருவாய் இழப்பையயல்லாம், ஊழல் என்று கூறத் தொடங்கினால், சத்துணவுத் திட்டம், விவசாயிகளுக்கான கடன் ரத்து, குடிசைவீடு மாற்றுத்திட்டம் எல்லாம் ஊழல் என்றாகி விடும். மக்களைக் கொடுமைப்படுத்தும் அரசே ஊழல் இல்லாத அரசு என்று சொல்வார்களோ?

-----------------