சில வருடங்களுக்கு முன்பு தேவதாசி முறையை ஒழித்ததில் அந்தச் சமூகப் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டார்கள் என்ற ஒரு கருத்தை மிகப்பெரிய எழுத்தாளராக அறியப்பட்டிருக்கும் வாசந்தி அவர்கள் வெளியிட்டார்கள். இப்படிக் கூடப் பேச முடியுமா என்று நாம் அதிர்ந்து போனோம். மூவாளூர் இராமாமிர்தம் அம்மையாரின் தியாகங்களும், முத்துலட்சுமி அம்மையார் நடத்திய கடும் பயணமும் நமது மனக்கண்ணில் ஊர்வலம் நடத்தின. மூவாளூர் இராமாமிர்தம் அம்மையார் வாழ்க்கையில் ஒரு காட்சி. அந்த அம்மையாருக்கு அவரது சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவரே வீட்டிற்கு அழைத்து விசம் தந்து விடுகிறார். அதனை அறிந்த பின்னும், அந்தப் பெண்மணி மீது சினமேதும் கொள்ளாமல் மன்னித்து விடுகிறார் அம்மையார். நாம் மேற்கூறிய வாசந்தியின் வாசகத்தைப் படித்தபோது, அந்த விசம் கொடுத்த பெண்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள் என்று தோன்றியது. நாம் தொடர்ந்து நடத்தியாக வேண்டிய பயணம் இன்னும் தொலைதூரமிருக்கும்போது இப்படித்தான் சில கற்கள் நம்மை இருக்கும் இடத்திலேயே விழ வைத்து விடுகின்றன.

இரண்டு வருடமிருக்கும் எனக் கருதுகிறேன். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெண்கள் கலந்தாய்வு ஒன்றில் (பெண்களின் உடற்கூறு மற்றும் மருத்துவம் பற்றிய கலந்தாய்வு) பங்கேற்றபோது, ஒரு பெண்மணி, 'கழிவு இரத்தப் போக்கு' பற்றிப் பேசும்போது பண்டைய காலத்தில் ஓய்வெடுத்துக்கொள்ள அவர்களை ஒதுக்கி வைத்த சமூகம் வழி செய்தது என்றும், நாகரிக சமூகம் அந்த வெளியை எடுத்து விட்டது என்றும் வாதிடத் தொடங்கினார். அங்கிருந்த பெண்கள் அதனை உணர்ச்சிப்பூர்வமாக மறுத்திட்டனர். பழம் சமூகங்களில் அவ்வாறு பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இடங்கள் எவ்வளவு தனிமை நிறைந்ததாகவும், அபாயம் நிறைந்ததாகவும் இருந்தன என்பது உங்களுக்குத் தெரியுமா என்ற உணர்ச்சி மிக்க கேள்விகளில் அந்தப் பெண்மணி தனது பேச்சின் தவற்றை உணர்ந்து கொண்டார். ஏனெனில் அவரும் பெண்.

'கர்ப்பப் பை' எங்கள் உடலுக்குள், எங்கள் தோலுக்கும் சதைக்கும் கீழ் இருக்கிறது. ஆனால் சமூக வெளியில் அது எங்கள் தோலும் சதையும் கிழிந்து இரத்தம் கொட்டக் கொட்ட ஆண்களின் கைகளில் சிறையுண்டு கிடக்கிறது. பெண் வயதுக்கு வருகிறாளாம், (ஆணுக்கும் வயதுக்கும் எப்போதும் தொடர்பில்லை. அய்ந்திலும் அறுபதிலும் அவர் இராசாதானாம்) பூப்பெய்துகிறாளாம், பருவமடைவதால் தீட்டுப்பட்டு விடும் பெண்ணை இவர்கள் புனித நீரால் தூய்மைப்படுத்துகிறார்களாம். தங்கள் ஊரில் ஆறுகளும், குளங்களும் மாசுபடுவதைத் தடுக்கத் துப்பில்லாத இவர்கள் வீட்டுக்குள் பெண்ணைத் தூய்மைப்படுத்துகிறார்களாம். இந்த நிகழ்ச்சி இன்றும் வீட்டுக்கு வீடு நடந்து கொண்டிருக்கிறது. மாதவிடாய் நேரத்தில் மட்டுமன்று, இந்த சமூகத்திற்கு வாரிசு பெற்றுத் தரும்போதும் பெண் தீண்டத்தகாதவள்தான். எவ்வளவு நன்றி கெட்ட சமூகம் இது என்று சிந்தித்துப் பாருங்கள். பிறகெப்படி சமூக அவலங்கள் தீரும்?

'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு'. தீண்டாமையை ஒழிக்கக் கிளம்பிய எத்தனை வீரர்கள் பெண்ணின் மீதான இந்தத் தீண்டாமை குறித்து குறைந்த பட்சம் ஒரு சில வார்த்தைகளையாவது உச்சரித்திருக்கிறார்கள்? தீண்டாமையின் மூலங்களைப் பற்றி எழுதும்போது அம்பேத்கர் இதனைச் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் பெண்ணுக்கும், ஆணுக்குமே விடுதலை வேண்டுமென்றால் பெண்ணின் கர்ப்பப்பைக்கு விடுதலை வேண்டும் என்று முழங்கிய ஒரே தலைவராகப் பெரியார் மட்டுமே உலக வரலாற்றில் நிற்கிறார். என்ன செய்ய, அந்தத் தலைவர் தோன்றிய நமது மண்ணிலேயே, தீண்டாமை ஒழிப்பை மேடையிலே பேசுகிறவர்களே பூப்புனித நீராட்டு விழா பத்திரிகை அடித்து நம்மிடமே நீட்டுகிறார்கள். இதில் தீண்டாமைக்கு ஆளான சமூகங்களும் இப்போது புதிதாக விமரிசையாகக் கொண்டாடுகின்றன.

இப்படிப் பெண் மீதான தீண்டாமைக்கு அடித்தளமாக இருக்கும் மாதவிடாய் பற்றி நமது தோழர்களில் சிலரே கூடத் தவறான சில கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். அவர்களின் இலக்கு  நாப்கின் தயாரித்து விற்கும் கார்ப்பரேட்டு நிறுவனங்களைத் தாக்குவது. இதிலிருந்து பினனோக்கிப் பயணித்து, இவர்கள் எந்த இடத்தில் போய் நிற்கிறார்கள் என்றால், மாதவிடாய் காலம் பெண்களுக்கு துன்பம் மிகுந்தது. அச்சமயங்களில் பெண்களுக்கு ஓய்வு அவசியம். எனவே பெண்களை அச்சமயங்களில் எந்தப் பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது. அவர்கள் முன்பு போல தனியிடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டு, தங்கள் இரத்த ஒழுக்கை துணி வைத்துத் துடைத்து, அதனைச் சுத்தம் செய்து காயப்போட்டு உலர்த்திக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும். இன்று மனிதர்களிலேயே பலர் மிருகங்களாக இருப்பதால், முன்பு போல் தங்களைப் பாதுகாக்க நமது முன்னோர்கள் காட்டிய வழியில் உலக்கையையும் வைத்துக் கொள்ளலாம். துப்பாக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் துப்பாக்கி கார்ப்பரேட்டுகளால் தயாரிக்கப்படுவது. இவ்வாறு மாதத்தில் மூன்று நாட்களிலிருந்து ஏழு நாட்கள் வரையிலும் இருக்க வேண்டி வரும் என்பதால், பெண்கள் எல்லா வேலைகளுக்கும் செல்லலாம் என்ற முதலாளித்துவ பரப்புரையிலிருந்து விடுபட்டுப் பெண்களால் முடிந்த (ஆண்களால் மனப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட) ஆயா, ஆசிரியர் மற்றும் செவிலியர் பணிகளுக்கு மட்டும் பெண்களை அமர்த்த அரசு ஆணையிட வேண்டும். காலங்காலமாக இருந்து வருவதைப் போல விவசாயக் கூலிகளாகவும், தோட்டக் கூலிகளாகவும், வீட்டு வேலைகளுக்கும் பெண்கள் செல்லலாம். கார்ப்பரேட் விவசாய முறை அமலுக்கு வந்தால் அதன்பின் இதில் கருத்து கூறுவது பற்றி யோசிக்கிறோம்.

இந்தச் 'சிந்தனையின் பாதை எங்கே போகிறது' என்று புரிகிறதா தோழர்களே? உங்களது அனைத்துப் போராட்டங்களிலும் முதல் பலி நாங்கள்தானா? ' வர்ணாசிரமம் வேண்டும், ஆனால் தீண்டாமை ஒழிய வேண்டும்' என்று காந்தியார் சொன்னதற்கும், 'மாதவிலக்கு வேண்டும் ஆனால் தீண்டாமை வேண்டாம்' என்று நீங்கள் சொல்வதற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு? உங்களைப்போலவே சங்கராச்சாரியாரும், 'பாரதப் பண்பாடும் பெண்மையைப் போற்றிதானே வீட்டுக்குள் இருக்கச் சொன்னார்கள்' என்று சொன்னதற்கும், 'பெண்ணின் உடற்கூறு ஒத்துக் கொள்கிற பணிகள் மட்டும்' என்று நீங்கள் சொல்வதற்கும் என்ன வேறுபாடு?

பெண்ணின் கழிவு இரத்தப் போக்கு, அது சார்ந்த உடலியல் பிரச்சினைகள், இவை குறித்த மருத்துவப்  பார்வை நமது முன்னோர்களிடமிருந்தது, முதலாளித்துவ சமூகத்திற்கு இல்லை என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள். ஆனால் உண்மையில் நமது முன்னோர் சமூகமாகட்டும், இன்றைய முதலாளித்துவ சமூகமாகட்டும் இரண்டுமே ஆணாதிக்க சமூகமாகத்தான் இருந்து வருகிறது என்ற உண்மையையும், இதில் பெண்ணின் உடற்கூறியல் பற்றிய அறிவியல் சிந்தனை மிக மிகத் தொலை தூரத்தில் இருக்கிறது என்ற உண்மையையும் முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

முதலில் தமிழருக்கென்று சாதியம் சாராத ஒரு பொதுவான முன்னோர் சமூகத்தின் சுவடுகளை இன்று நாம் தேட இயலுமா? நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சாதியம்தானே நமது முனனோர் பாரம்பரியமாக இருக்கிறது? இதில் மாதவிலக்கு நேரத்தில் வீட்டுக்குள் வராதே என்று சொன்ன நமது முன்னோர் பாரம்பரியம், மாதவிலக்கு நேரத்தில் வயற்காட்டில் களை எடுக்க வராதே என்று ஏன் சொல்லவில்லை? ஏன் விவசாயக் கூலிக்கு இரத்தப் போக்கு நிகழும்போது இடுப்பு வலிக்காதா? இல்லை உச்சி வெயிலில் களை எடுப்பதும், நாற்று நடுவதும் இரத்தப்போக்கிற்கு உளுந்தக் களி சாப்பிடுவது போல் பாராம்பரிய மருத்துவ முறைகளா?

பெண்ணின் இரத்தப் போக்கு பண்டைய சமூகத்தில் மனிதனின் அறியாமையிலிருந்து பார்க்கும்போது பல்வேறு உணர்வுகளைத் தோற்றுவித்திருக்கிறது. அதில் அடிப்படையான உணர்வாக அச்சம் இருந்திருக்க வேண்டும். மனிதன் எதைக் கண்டு அச்சப்பட்டிருக்கிறானோ, அதையயல்லாம் அடக்க நினைக்கிறான். எனவேதான் இரத்த ஒழுக்குடன் நின்ற பெண்ணை அவன் தனிமைப்படுத்த நினைத்திருக்கிறான். இந்தப் பயணத்தினூடே சமூகத் தலைமை பெண்ணிடமிருந்து ஆணுக்குக் கைமாறிய வரலாறும் நிகழ்ந்திருக்கிறது. நிச்சயமாக இந்தத் தலைமை திட்டமிட்ட ராக்கெட் பயணம் மாதிரி எல்லாம் நிகழ்ந்திருக்க இயலாது. எனவே பெண்ணே விரும்பி ஓய்வெடுத்திருக்கலாம் அல்லது ஆணால் ஒதுக்கப்பட்டிருக்கலாம். இதை எல்லாம் கறாராக மானுடவியல் ஆய்வாளர்களே சொல்லிவிட முடியாது.

ஆனால் இன்றைய சமகாலப் பெண்களின் அனுபவத்திலிருந்து ஒன்றை  உறுதியாகச் சொல்ல முடியும். மாதக் கழிவு இரத்தப் போக்கு நேரங்கள் அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரியான நிலையைத் தோற்றுவிப்பதில்லை. மாதவிடாய் நிற்கும் நேரங்களும், மகப்பேறு நிலைகளும் கூட அப்படித்தான். இது பெண்ணுக்குப் பெண் வேறுபடும். இதில் பொதுவாக சிறுவயதிலிருந்து நல்ல உணவு எடுத்துக் கொள்கிற, சிறுவயதிலிருந்து தனது ஆரோக்கியத்திற்கு கவனம் செலுத்துகிற வாய்ப்புப் பெற்ற பெண்களுக்கு இப்பிரச்சனைகள் குறைவாகவும், பொதுவாக பலவீனமாக பெண்களுக்கு, ஒடுக்கப்பட்ட உளவியல் உள்ள பெண்களுக்கு இப்பிரச்சனைகள் அதிகமாகவும் உள்ளன. இந்தப் பிரச்சனைகளை அறிவியல் பூர்வமாக நாம் அணுக வேண்டும். நீங்கள் சொல்லுகின்ற பண்டையச் சமூகம் உளுந்தங்களியைப் பெண்ணின் முதல் இரத்தப்போக்கு துவங்கும் போதிலிருந்து அவள் 'பிள்ளை பெறும்' வரை மட்டுமே வலியுறுத்துகிறது. ஏன் அவளுக்குத் திருமணம்  முடிந்து பிள்ளை பெறும் வரை, அவளை ஒரு தன்னல நோக்குடன் பாதுகாக்கிறது ஆணாதிக்க சமுதாயம். நமது அருந்தமிழ்ப் பண்டைய சமூகத்தைத்தான் சொல்கிறேன். ஆனால் கழிவு இரத்தப்போக்கு நின்று போன பின்புதான், பெண்கள் அதிக கால்சியமும், இரும்புச் சத்தும் உள்ள உணவுகளை எடுக்க வேண்டும் என்று இன்றைய மருத்துவ உலகம்தான் எங்களுக்கு அறிவுறுத்துகிறது.

தோழர்களே! இரத்தப்போக்கு நின்று, உடல் சுகமும், பிள்ளை பெற்றுத் தருவதையும் நிறுத்திய பிறகு, நாங்கள் வாழ்வதற்கான வெளியை நீட்டிப்பது குறித்து சிந்திக்கிற அறிவியலை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். யாருக்குத் தேவைப்படுகிறதோ, யாருக்கு மருத்துவம் தேவைப்படுகிறதோ அவர்கள் அதைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை மிக்க வாழ்வு மட்டுமே இதற்குத் தீர்வாகும்.

கார்ப்பரேட்டுகளின் நாப்கின் விளம்பரம் பெண்ணின் இரத்தப்போக்கு மீதான சமூகத்தீட்டை உடைத்தெறிந்து குப்பைத் தொட்டியில் போட்டது என்பதையும், இன்றைய கணவன்மார்களும், சகோதரர்களும் எந்தத் தயக்கமுமில்லாமல் கடையில் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு நாப்கின் வாங்கிச் செல்கிறார்கள் என்பதையும் மறுப்பது அறிவு நாணயமல்ல. நாப்கின் பயன்படுத்துவதில் கர்ப்பப்பையின் ஆரோக்கியம் மேம்பட்டதா இல்லையா என்பது மட்டும் விவாதமன்று. நிச்சயமாக நாப்கின், பெண்ணின் சமூக வெளியை விரிவாக்கியது. நாப்கினிலுள்ள சில வேதியியல் செயல்பாடுகளினால் ஏற்படும் பாதிப்பை விட, இந்த வெளி எங்களுக்குத் தேவையாய் இருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்காக வேலைக்குச் செல்லும்போது மட்டுமன்று, சமூகப் பணிகளுக்கு வரும்போதும்கூடத்தான். கடைசியாக இவர்கள் சொல்லுகின்ற ஒரு கருத்துக்கு வருகிறேன். இந்த விளம்பரங்களால் பெண்கள் அந்த சமயத்தில் கூட ஓய்வெடுத்துக் கொள்ள முடியாமல், அப்போதும் வேலை செய்கிற நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள் என்ற வாதம் கருணை மிக்கதுதான். இதற்கான விடை பெண்களின் வாழ்க்கையின் மீது தன்னாட்சி செலுத்துகிற உரிமை பெண்களுக்கு இருக்கிறதா என்பதில்தான் இருக்கிறது.

பெண்ணின் உடற்கூறு பற்றிய பெண்ணிய சிந்தனை கொண்ட மருத்துவ அறிவியலை இன்றுகூட நாம் பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. தான் எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்போது பிள்ளை பெற வேண்டும், தான் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையில்லாத பெண், தனது வியாதிகளுக்கான மூலங்களை எப்படி அறிவாள்? எங்கே தேடுவாள்? இவ்வளவு ஏன், தான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படும் உரிமையே இங்கு பெண்ணுக்குக் கிடையாது. தனது கணவனுக்கு முன் சாக வேண்டும் என்று ஆசைப்படத்தான் நீங்கள் கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள். நான் எழுதுவது ஒவ்வொன்றும் நடப்பு மட்டுமே. ஒவ்வொரு பெண்ணும் நீண்ட நாள் வாழ வேண்டும் ( தீர்க்க சுமங்கலியாகவோ, அல்லாமலோ) என்று ஆசைப்பட ஒரு சமுதாயத்தை முதலில் கட்டுவோம். அந்தச் சமூகத்தில்தான் பெண்ணின் உடல் பற்றிய சரியான சிந்தனை முகிழ்க்க முடியும்.

--------------------------------