தோழர் சுப.வீரபாண்டியன் ' கலைஞர் தொலைக்காட்சி'யில் வழங்கிவரும் கருத்து ரைகளின் தொகுப்பான, ' ஒன்றே சொல் நன்றே சொல் ' 4,5,6 தொகுதிகளின் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. 26.12.2010 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்வெளியீட்டு விழாவுக்குத் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் தலைமை ஏற்றிருந்தார். நிகழ்வின் தொடக்கத்தில் கவிஞர் ரத்திகா, விழாவுக்கு வந்திருந்தோர் அனைவரையும் வரவேற்றார்.

ondre-sol-nandre-solதமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு, ஒன்றே சொல்! நன்றே சொல்!! நூல் தொகுதிகளை வெளியிட, தொழிலதிபர் திரு வீ.கே.என் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலினை வெளியிட்ட அமைச்சர் பேசும்போது, " தலைவர் கலைஞர் அவர்கள் பேச்சு, செயல் என அனைத்துத் தரப்பினரையும் தன்னுடன் வைத்திருக்கிறார். சுபவீ அவர்கள் செய்திகளை மக்களிடம் சொல்கிறார். அதற்கான தளத்தை நாங்கள் உருவாக்கித் தருகிறோம்.ஸ்பெக்ட்ரம் பற்றிய செய்திகளை ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் காட்டிக் கொண்டிருக்கின்றன. சுபவீ மக்கள் மத்தியில் இதுகுறித்துப் பேசினால்போதும், மக்கள் உண்மைநிலை என்ன என்பதைப் புரிந்து கொள்வார்கள் " என்று உரையாற்றி, ஒன்றே சொல் நன்றே சொல் நூல் வெளியீட்டுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து கருத்துரையாற்றிய பேராசிரியர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசும்போது, சொல் என்ற சொல் உருவாக்கிய தாக்கம் பற்றியும், உலக வரலாற்றில் சொல் ஏற்படுத்திய மாற்றங்கள், உலகத் தலைவர்களின் சொல் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். ஒன்றே சொல் நன்றே சொல் நூலின் சில கட்டுரைகளையும் குறிப்பிட்டுப் பேசித் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நூலாசிரியர் பேராசிரியர் சுப.வீரபாண் டியன் நிறைவில் தன் ஏற்புரையை நல்கினார். இவர் தன் ஏற்புரையின் போது, "ஒன்றே சொல் நன்றே சொல் என்ற தலைப்பே, தலைவர் கலைஞர் கொடுத்த தலைப்புதான். இன்று இத்தலைப்பு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது" என்றார். "ஸ்பெக்ட்ரம் பற்றிய உண்மைகளை மக்களிடம் சொல்லும்போது, ஆ.ராசா பணம் கொடுத்திருக்கிறார். அதனால்தான் ராசாவுக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்கிறார்கள். நான் மறுக்கவில்லை. ராசா கொடுத்திருக்கிறார். பணம் அல்ல, அண்ணல் அம்பேத்கர், தந்தைபெரியார் பற்றி அவர் பேசிய தொகுப்பு நூல்களை எனக்குக் கொடுத்திருக்கிறார்" என்று பேசிய நூலாசிரியர், ஒன்றே சொல் நன்றே சொல் நூல் குறித்தும் தன் ஏற்புரையை ஆற்றினார்.

கவிச்சுடர் கவிதைப்பித்தன், கல்வியாளர் தங்கம்மூர்த்தி ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியைக் கவிஞர் ஆங்கரை பைரவி தொகுத்தளித்தார். வானவில் பதிப்பகம் சுப.புகழேந்தி நிகழ்ச்சி நிறைவில் வந்திருந்தோர் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு, திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொறுப்பாளர்கள், விடுதலை வேங்கைகள் இயக்கத் தோழர்கள், பொதுமக்கள் என அரங்கம் நிறையத் திரண்டிருந்தனர் !

--------------------------------------------------

Pin It