ஒரு வழியாக  "அம்பேத்கர் ” வெளிவந்து விட்டார். தமிழில் பெயர்க்கப்பட்ட பிறகும், பூட்டிப் பூட்டி வைக்கப்பட்டிருந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் இதை வெளிக்கொணர்வதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கிய நிலையில் சட்டென்று படம் வெளியாகிப் போனது.

படத்தைப் பார்த்த போது இப்படியயாரு அருமையான படத்தை அநியாயமாகத் தாமதிக்க வைத்துவிட்டார்களே என்று வருத்தம் ஏற்பட்டது. காந்தி, பாரதி, பெரியார் பட வரிசையில் வைக்கத்தக்கது அம்பேத்கர். தலைவர்களைப் பற்றி ஆவணப்படம் எடுப்பது எளிது. அதையே கதைப்படமாக எடுக்கும் போதுதான் கஷ்டம் தெரியும்.  "அம்பேத்கர்” பட இயக்குனர் ஜாபர் படேல் அதில் பெரு வெற்றி பெற்றிருக்கிறார்.

ambedkar_360"சட்ட மேதை ”,  "அரசியல் சாசனச் சிற்பி ” எனும் அடைமொழிகளுக்குள் அம்பேத்கரை ஒற்றைப் பரிமாணமாக - சகலரும் ஏற்கத்தக்க பரிமாணமாக - சுருக்கிக் காட்டுகிற வேலை வெகுகாலமாக நடந்து வருகிறது. இதைத் தகர்த்தெறிந்து விட்டது இந்தப் படம்.

ஆய்வாளர், ஆசிரியர், சமூகப் போராளி, பார்ப்பன‌ிய எதிர்ப்புப் பண்டிதர், நூலாசிரியர், பவுத்த அறிஞர் எனும் அவரின் இதர பரிமாணங்களையும் பிரமாதமாக முன்னிறுத்தி விட்டது. இவை அனைத்தும் சாதிய எதிர்ப்பு எனும் விரிந்த தளத்தின் வெளிப்பாடுகளே என்பதையும் கச்சிதமாகக் கொண்டு வந்துவிட்டது.

அம்பேத்கர் ஆசிரியப்பணி ஆற்றும்போது அங்கிருந்த பானைத் தண்ணீரைக் குடிக்கவிடாமல் தடுத்து, அவர் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள் சக ஆசிரியர்கள். அவரோ,  “இதை நான் குடிக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வாருங்கள்” என்று பதிலடி கொடுக்கும் போது அரங்கமே கைதட்டி ரசித்தது.

சவுதார் குளம் பேராட்டம், காளாராம் கோயில் நுழைவுப் போராட்டம் ஆகியவை மிக உணர்ச்சிப்பூர்வமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்டோர் நுழையக் கூடாது என்று பார்ப்பன‌ியவாதிகள் கோவிலையே பூட்டினார்கள். ராமர் குடும்ப சகிதமாய்க் கோவிலுக்குள் மாட்டிக்கொள்வார். அவர்களுக்கு ராமரைவிடத் தங்களது வருணாசிரமக் கட்டுப்பாடே முக்கியம் என்பது நிரூபணமாகும். தாழ்த்தப்பட்டோரும் தேரை இழுக்க முதலில் சம்மதம் தந்துவிட்டு, பிறகு அவர்களைத் தொடவிடாமல் செய்ய அவர்கள் ஓடுகிற ஓட்டமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற களேபரமும், அம்பேத்கர் தாக்குதலிலிருந்து மயிரிழையில் தப்புவதும் தத்ரூபமாகக் காட்டப்பட்டுள்ளன. பார்ப்பன‌ியத்தின் வஞ்சகமும், அம்பேத்கரின் நெஞ்சுரமும் ஒருங்கே வெளிப்படுகின்றன.

அம்பேத்கர் நடத்திய போராட்டம் பார்ப்பன‌ியத்தை எதிர்த்துத்தானே தவிர தனிப்பட்ட பார்ப்பன‌ர்களை எதிர்த்து அல்ல என்பதும், படத்தில் சொல்லப்பட்டு விட்டது. பார்ப்பன‌ரல்லாத உயர்சாதியினரிடத்தும் சாதியம் வெளிப்பட லாம் என்பதை அவர் சுட்டிக் காட்டியது வந்துவிட்டது.

அம்பேத்கர் வாழ்வின் மிக இக்கட்டான கட்டம் காந்தியின் உண்ணாவிரதம். இது விரிவாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மகாத் மாவின் உயிரைக் காப்பதற்கும் தம்மக்களின் உரிமையைக் காப்பதற்கும் இடையில் இவர் தவியாய்த் தவிக்கிறார்; ஒரு வழியாக விடை காண்கிறார். முத்தாய்ப்பாக  “உண்ணாவிரதத்தை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள்” என்று அவர் மகாத்மாவுக்குப் புத்தி சொல்லும் போது திரை அரங்கில் ஒரே கோலாகலம்.

அம்பேத்கரை சுதந்திர இந்தியாவின் சட்ட மந்திரியாக்கி, அரசியல் சாசனத் தயாரிப்பு பொறுப்பில் அவரை இருத்தியது மகாத்மா காந்திதான் என்கிற உண்மை பலராலும் மறைக்கப்படுகிறது. அம்பேத்கர் - காந்தி உறவை 1932 புனா ஒப்பந்தத்தோடு நிறுத்தி விடுகிறார்கள். அந்தத் தவறை இந்தப் படம் செய்யவில்லை. இந்தியாவின் அரசியல் சாசனத்தை எழுத உலக சட்ட நிபுணர்களை நேரு தேடிக் கொண்டிருந்த போது, உள்ளூரிலேயே இருந்த மேதையைக் காந்தி பரிந்துரைத்த காட்சியும் இதில் உள்ளது.

எனினும், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்குப் பிரதான எதிரியாக இருந்தது, இந்து மகாசபையும், அதன் தலைவராகிய மதன்மோகன் மாளவியா போன்றோரும் என்கிற உண்மை படத்தில் வரவில்லை. ஏதோ காந்திதான் அதற்குப் பிரதான எதிரி என்பது போலக் காட்டப்படுகிறது. வரலாற்றை சற்றே ஆழ்ந்து படித்தால், காந்தியின் உண்ணாவிரதம் அம்பேத்கருக்கு எதிராக மட்டுமல்லாது, மாளவியா போன்ற பார்ப்பன‌ியவாதிகளுக்கு எதிராகவும் நடத்தப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவர்கள் தனித் தொகுதி முறைக்கு மட்டுமல்ல இடஒதுக்கீட்டுக்கே எதிராக இருந்தார்கள். அவர்களையும் இறங்கி வரச் செய்தது இந்த உண்ணாவிரதம். பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் கொடுக்க முன்வந்த இடங்களைக் காட்டிலும் கூடுதல் இடங்களைத் தாழ்த்தப்பட்டோருக்கு வாங்கிக் கொடுத்தது. புனா ஒப்பந்தமே அம்பேத்கருக்கும் மாளவியா போன்றோருக்கும் இடையேதான் கையயழுத்தானது.

அரசியல் சாசன வரைவுக் குழுவில் மேலும் ஆறுபேர் இருந்தார்கள் என்றாலும் அதை வடிவமைக்கிற பெரிய வேலை நடைமுறையில் அம்பேத்கர் மீதே விழுந்தது. இதை டி.டி.கிருஷ்ணமாச்சாரியே ஒப்புக் கொண்டி ருக்கிறார். இது காட்சி ரூபத்தில் வருவது அம்பேத்கரின் மகத்தான பணியை உதாசீனப்படுத்தும் அருண்ஷோரி போன்றோர் களுக்குச் சரியான பதிலடி.

அம்பேத்கர் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டுமல்ல, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரா கவும் போராடியவர். முற்போக்கான இந்து சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பிரதமர் நேருவும் பின்வாங்குவதைக் கண்டு, வெறுப்புற்றே தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் அம்பேத்கர். இது எத்தனை இந்து மாதர்களுக்குத் தெரியும்? அவர்களுக்காகப் போராடிய ஒரு மெய்யான ஆண்மகனைத் தரிசிக்க அவர்கள் அவசியம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.

படம் அம்பேத்கரின் வாழ்வோடு இணைந்து, இயைந்து வேகமாகச் செல்கிறது. அரசியல் சாசனத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்துவிட்டுத்தான், 1952 தேர்தலில் இது நடைமுறைக்கு வந்ததைக் கண்டுவிட்டுத்தான் அவர் கலாச்சார ரீதியான ஒரு அதிரடித் தாக்குதலைத் தொடுத்தார் ; புத்த மதத்திற்கு மாறினார்.

இந்த மதமாற்றம் சாதி ஒழிப்புக்கான சரியான மார்க்கமா என்பது விவாதத்திற்குரியது. ஆனால் இந்த மேதையின் வாழ்வில் அதுவே உச்சமாக மாறி நின்றது. படமும் அதையே உச்சகட்டமாகக் கொண்டு முடிகிறது.

மம்முட்டியின் நடிப்பைப் பற்றி ஏதும் சொல்ல முடியாது. காரணம் அது நடிப்பாகவே இல்லை. எங்கும் மம்முட்டியைக் காணமுடிய வில்லை. எங்கும் அம்பேத்கரே இருக்கிறார். இயல்பான நடிப்புக்கு இலக்கணம் தந்திருக்கிறார். மனைவியிடம் அம்பேத்கர் கொண்டிருந்த அலாதியான பாசத்தை அற்புதமாக வெளிக்காட்டி யிருக்கிறார். அவர்களுடைய வாழ்வில் மழை யானது இன்ப துன்பத்தில் பங்கேற்கிறது. இயக்குனர் ஜாபர் படேலின் கவித்துவமான காட்சிப்படுத்தலுக்கு இது ஒரு உதாரணம்.

படத்தில் ஆங்காங்கே எழுச்சிகரமான பாடல்கள் ஒலிக்கின்றன. அவற்றை ஏனோ தமிழ்ப்படுத்தவில்லை. படத்தைத் தமிழ்ப்படுத் தியவர்களுக்கு அதுவும் முக்கியம் என்று ஏன் தோன்றாமல் போயிற்று? பணப் பற்றாக் குறையோ? இந்த நாட்டு அரசாங்கம் எது எதற்கோ எத்தனை எத்தனையோ கோடி செலவு செய்கிறது. தேசத்தின் ஓர் உன்னதமான புதல்வனின் வாழ்வைப் படமாக்கிச் சகல மொழியினருக்கும் கொண்டு செல்வதில் என்ன கஞ்சத்தனம்?

“அம்பேத்கர்” தமிழகக் கொட்டகைகளில் எத்தனை நாட்கள் ஓடும் என்று சொல்ல முடியாது. இங்கு நிலவும் சமூக  - கலை - கலாச்சார சூழல் அத்தகையது. கலையும் வணிகமயமாகிப்போன சூழல் இது. இதையயல்லாம் மீறி இந்தப் படத்தை மக்கள் மத்தியில், குறிப்பாக, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். காரணம், சமூகநீதிப் போராட்டத்திற்கு இதுவொரு வலுவான, கலாபூர்வமான ஆயுதம்.  முற்போக்கு இயக்கங்களும் முயற்சி எடுக்க வேண்டும். பள்ளி - கல்லூரிகளின் கதவுகளை உரிமையோடு தட்டவேண்டும்.

Pin It