சமூக ஏற்ற தாழ்வுகளைப் பொதுவாக சமயங்கள் நியாயப்படுத்துகின்றன. சமூகப் படிநிலையில் கீழே ஒடுக்கப்பட்டிருக்கிற அடித்தட்டு மக்களின் அக்கறைகளைப் புறக்கணிப்பதோடு, அவர்களைச் சுரண்டும் சமூக, அரசியல், பொருளதார அமைப்பைத் தூக்கிப் பிடிப்பதாகவே சமயங்கள் இருந்திருக்கின்றன.... இருக்கும்! இதில் சில விதிவிலக்கான சமயங்களும் இருந்திருக்கின்றன. உதாரணமாக, இந்தியச் சூழலில் மனிதனைக் கூறுபோட்ட சாதியத்தை, பிராமணியத்தை உற்பத்தி செய்த இந்து மதத்திற்கு எதிரான குரலோடு ஒலித்தது சமணமும், பெளத்தமும்! அடித்தட்டு மக்களின் சமயமாக உருவாகி, இறுதியில் நிறுவனமாகி இறுகிப்போன சமயங்களும் வரலாற்றிலே பதிவாகியிருக்கின்றன. டாக்டர் அம்பேத்கர் நாத்திகரும் அல்லர்; பாரம்பரிய ஆத்திகரும் அல்லர். மாறாக மனிதநேயச் சமயம் பற்றிப் பேசியவர். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற அறிவுசார் அற விழுமியங்களை அடித்தளமாகக் கொண்ட சமய நெறி அம்பேத்கர் கண்டது. சமயம் பற்றி விரிவானதொரு விவாதம் நடத்திய பின்னரே அம்பேத்கர் பெளத்தம் தழுவுகிறார். சமூக, கலாச்சார, அரசியல், பொருளாதார விடுதலையை முன்னிறுத்திய சமயமே அம்பேத்கரின் மனிதநேய சமயம்.

1. சமூக, கலாச்சார விடுதலை தரும் சமயம் :

சமூக, கலாச்சார அடிப்படையில் இந்திய கிராமங்களை இரு கூறாக்கலாம். தீண்டத்தக்கவர், தீண்டத்தகாதவர் என்ற தொடக்கப் புள்ளியிலிருந்து தன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கின்றார் அம்பேத்கர். தீண்டத்தகாதோர் பொருளாதாரத்தில் ஏழைகளாகவும், அரசியலில் அதிகாரமற்றவராகவும், சமூகத்தில் தாழ்வாக கருதப்படுபவராகவும் மற்றும் எண்ணிக்கையிலும் மிகக் குறைந்தவராகவும் இருக்கின்றார். “சாதி என்பது தொழில் பாகுபாடு மட்டும் அல்ல; மாறாக அது தொழிலாளர்களையே கூறுபோடுவதாகும்” என்கிறார் அம்பேத்கர். சில தொழிலாளர்களை உயர்ந்தவர் (எ.கா.அர்ச்சகர்) சில தொழிலாளர்களைத் தாழ்ந்தவர் (எ.கா.துப்புரவுப் பணியாளர்) என்றும் சாதியம் கட்டமைக்கின்றது. மக்களை சாதிகளால் கூறுபோட்டு, தனித்தனியான அடையாளங்களைக் கட்டமைத்து, அவர்கள் ‘கலப்பாகி’ விடாமல் அகமணமுறை மூலம் ‘தூய்மை’ காக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக அம்பேத்கர் சாதிகளுக்கிடையே மற்றும் உள்சாதிகளுக்கிடையே உணவருந்துதலும், ‘கலப்பு’த் திருமணங்களும் சாதியை ஒழிக்க உத்தியாகப் பயன்பட வேண்டும் என்கிறார். சாதியற்ற சமத்துவ இந்தியாவைப் படைப்பதே தன் இலக்கு என்ற அம்பேத்கர், பெளத்த சங்கத்திலேயே இச்சமத்துவம் நிலவுவதாகச் சுட்டிக்காட்டினார். அது தம்மத்தின்(சரியானவற்றின்) அரசாகி இருக்கும் என்றார். காந்தி சொன்ன “ராமராஜ்ஜியம்” என்னும் கருத்திற்கு முற்றிலும் மாறுபட்டது இது. “காந்தி உயர்சாதியினருக்கு பிரசங்கிக்கின்றார்” என்றார் அம்பேத்கர். காந்தியின் ‘தீண்டாமை ஒழிப்பு’ என்ற கருத்தாக்கத்தை விட, முற்றிலும் புரட்சிகரமான ‘சாதி ஒழிப்பை’ முன்னிறுத்தியவர் அம்பேத்கர். எனவே தலித்துகளுக்கு சமூக, கலாச்சார விடுதலை தரும் சமயம் எதுவோ அதுவே அம்பேத்கரின் சமயம்!

2.பொருளாதார, அரசியல் விடுதலை தரும் சமயம்

ஏழைகள் விடுதலை அடையவேண்டுமானால், சோ­லிச சமதர்மம் இந்தியாவிற்கு வர வேண்டும். ஆனால் அம்பேத்கர் பாராளுமன்ற சோ­சலிசத்தை இந்தியாவுக்குப் பரிந்துரைக்கின்றார். சர்வாதிகார சோ­லிசத்தை (ரஷ்யவகை) அம்பேத்கர் எதிர்த்தார். ஜனநாயகமே கத்தியின்றி, இரத்தமின்றி ஆனால் புரட்சிகரமான சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்களைக் கொணர முடியும் என்கிறார் அம்பேத்கர்.

அதே வேளையில், சாதியத்தை ஒழிக்காத ஜனநாயக சோ­லிசம் என்பது கற்பனையான விலங்கு போன்றது. “சமத்துவமற்ற இந்திய ஜனநாயகம் என்பது சாணத்தால் கட்டப்பட்ட அரண்மனை போன்றது” என்கிறார் அம்பேத்கர். எனவே சமூக சமத்துவத்திற்கு நம் தொழிற்கூடங்கள் மற்றும் விவசாயம் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்றார் அம்பேத்கர். அரசியல் அமைப்புச் சட்டப்படியே சாதியை ஒழிக்க முடியும் என்று நம்பினார் அம்பேத்கர்.

பொருளாதார அடிப்படையில் சோ­லிசம் பேசிய அம்பேத்கர் கம்யூனிசத்தையும் (பொது உடைமை) இந்திய கம்யூனிஸ்ட்டுகளையும் கடுமையாக எதிர்த்தார், சாடினார். முதலாவதாக மார்க்சியத்தின் ஒற்றைப் (பொருளாதார) பார்வையைக் கடுமையாக விமர்சித்தார். ஏனெனில் இந்தியாவில் வர்க்கங்களில் சாதி உள்ளது; சாதியில் வர்க்கம் உள்ளது. இவ்வுண்மையை இந்திய மார்க்சியம் பார்க்கத் தவறியதை அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். இரண்டாவதாக இந்திய சாதியத்தை வர்க்கத்தில் குறுக்கிவிட முடியாது; சாதியும் வர்க்கமும் அடிப்படையிலேயே வேறுபட்டவை. சாதி பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது; தொழில் பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது; சாதிக்கு வெளியே திருமணம் சாத்தியமில்லை; சாதிகளுக்கிடையே சமபந்தி சாத்தியமில்லை; சாதிகள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வசிக்க முடியும். ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக வர்க்கம் பிறப்பால் தீர்மானிக்கப் படுவதில்லை; தொழிலும் பிறப்பால் தீர்மானிக்கப் படுவதில்லை; வர்க்கங்களுக்கிடையே திருமணம் சாத்தியம்; சமபந்தி சாத்தியம்; தனிப்பட்ட வர்க்கங்களுக்கு தனிப்பட்ட வாழிடங்கள் கிடையாது. மூன்றாவதாக, இந்த சாதி , வர்க்க வேறுபாட்டைப் புரிந்து கொள்ள மறுக்கும் இந்திய மார்க்சி யர்களை “பார்ப்பனப் பையன்களின் கூடாரம்” என்று கடுமையாகச் சாடி, இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பார்ப்பன மேலாதிக்கத்தை முதலில் சுட்டிக் காட்டியவர் அம்பேத்கர். நகரத் தொழிலாளர்களை மட்டுமே மையப்படுத்தி, இந்தியக் கிராமங்களில் உள்ள நிலமற்ற விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்தது இந்திய கம்யூனிசம் என்றார் அம்பேத்கர். இறுதியாக, தன் இலக்கை அடைய வன்முறை வழியைச் (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்) சுட்டிக்காட்டிய கம்யூனிசத்தை உதறித் தள்ளினார் அம்பேத்கர். இரத்தமின்றிப் பொருளாதார சமத்துவத்தை அடையமுடியும் என்பதைப் பெளத்த சங்கங்கள் நமக்கு நிரூபித்துள்ளன என்கிறார் அம்பேத்கர். லெனின் செய்யத் தவறிய, சர்வாதிகாரமற்ற பொதுவுடைமைச் சமூகத்தை புத்த சங்கம் சாத்தியமாக்கும் என உறுதியாக நம்பினார் அம்பேத்கர்.

3. ஒட்டுமொத்த விடுதலை தரும் சமயம்

1950 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் கண்டியில் (இலங்கை) நடைபெற்ற உலக பெளத்தர்களின் மாநாட்டில் பேசிய அம்பேத்கர், “மதம் இறப்பிற்குப் பின் அல்ல, மாறாக இன்றைய உலக வாழ்க்கையிலேயே முக்தி(விடுதலை) தருகிறதா என்று பார்க்க வேண்டும்” என்றார். எனவே இங்கேயே சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் என்ற அனைத்துத் தளங்களிலும் ஒட்டுமொத்த விடுதலையைச் சாத்தியமாக்குகிற சமயம் இருக்கின்றதா எனத் தேடலைத் தொடங்கினார் அம்பேத்கர்.

முதலாவதாக, இந்து மதம் விடுதலையைத் தராது என்பதோடு சாதியத்தை, தீண்டாமையை தோற்றுவித்த மதமே அதுதான் என்ற முடிவுக்கு அம்பேத்கர் வருகின்றார். 1935 அக்டோபர் 13 இரவு 10 மணிக்கு இயோலா மாநாட்டில் ஏறக்குறைய ஒன்றரை மணிநேரத்திற்கு மேல் பேசிய அம்பேத்கர் ஏதோ தீவாய்ப்பால் தாம் ஒரு தீண்டப்படாத இந்துவாய்ப் பிறந்துவிட்டதாகவும், அதைத் தடுத்தல் தனது ஆற்றலில் இருக்கவில்லையயன்றும் கூறி, “ஆனால் நான் ஓர் இந்துவாகவே இறக்கமாட்டேன் என்பது மிக உறுதி” என்றும் இடியாய் முழங்கினார். வேதங்களும் மனு ஸ்மிருதியும் சமூக ஏற்றத்தாழ்வையும், சாதி அமைப்பையும் முறையே உருவாக்கி, நியாயப்படுத்தின. எனவே இந்துமத ஸ்ருதி, ஸ்மிருதி போன்றவற்றை ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்க வேண்டும் என்றார் அம்பேத்கர். திருக்குரானை நீக்கிவிட்டால் இஸ்லாம் மார்க்கம் இல்லை; திருவிவிலியத்தை ஒதுக்கிவிட்டால் கிறித்துவ சமயம் இல்லை; அதே போல் சாதி/வர்ணத்தை நீக்கிவிட்டால் இந்து மதம் இல்லை.

இரண்டாவதாக, இந்து மதத்தைப் போன்று இன்னபிற சமயங்களையும் அம்பேத்கர் தன் கருத்தியல் அடிப்படையில் வடிகட்டுகிறார். இஸ்லாம் சமயத்தை வெளிநாட்டு (அயல்நாட்டுக் கலாச்சாரக் கூறுகளை உள்வாங்கிய) சமயம் என்றும், இந்திய கிறித்துவத்தில் சாதி, தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென்றும், சீக்கியத்தின் மீது ஈர்ப்புக்கொண்டாலும் அங்கும் வேறுவேறு சாதிகளுக்கு, வேறுவேறு குருத்துவாராக்கள் இருக்கிறதென்றும், மார்க்சியம் நாத்திகம் பேசுகிறதென்றும் மேற்கண்ட சமயங்களை நிராகரிக்கிறார் அம்பேத்கர்.

இறுதியாக, அம்பேத்கர் புத்த நெறியே அனைத்து மனிதருக்குமான விடுதலையைத் தரும் என உறுதியாக முடிவெடுக்கின்றார். பண்டைக்கால இந்தியாவில் புத்த சமயத்திற்கும் பிராமணியத்துக்கும் இடையில் ஒரு பெரும் போராட்டம் நடந்துவந்தது. கோட்பாடு பற்றிய புரட்சியாக மட்டுமின்றி புத்தம் அரசியல், சமூகத் தத்துவவியல் புரட்சியாகவும் விளங்கியது என்கிறார் அம்பேத்கர். மனிதனுக்கு மதம் கண்டிப்பாகத் தேவை என்று திட்டவட்டமாக அறிவித்த அவர், ஆனால் அது பகுத்தறிவுப் பூர்வமாக சோதிக்கப்பட வேண்டும் என்றார். உண்மையை அணுகும் புத்தரின் பகுத்தறிவுப்பூர்வ அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டார் அம்பேத்கர். உலக வரலாற்றிலேயே முதன்முதலாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற செய்தியைச் சொன்னவர் புத்தர்தான் என்கிறார்.பெளத்தம் கடவுள் மறுப்புக் கொள்கை உடையது என்பதும் அம்பேத்கரை ஈர்த்த ஒரு புள்ளி. இவ்வாறாக, ஒட்டுமொத்த (சமூக, கலாச்சார, அரசியல், பொருளாதார) விடுதலையை ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே (தலித் துகளுக்கு மட்டுமின்றி) சாத்தியப்படுத்துகின்ற சமயமாகப் புத்தநெறியை அம்பேத்கர் கண்டார்.

- பேரா.பேசில்

Pin It