அம்பேத்கர் தனது கடைசிக் காலத்தில் புத்த மதத்தைத் தழுவினார் என்பதைப் பலரும் அறிவார்கள். ஆனால் புத்த மதம் பற்றி அவரது பார்வை என்னவாக இருந்தது என்பதைப் பலரும் அறியார்கள். இது பற்றி அவர் பேசியவற்றை எழுதியவற்றை எல்லாம் ஒரே தொகுப்பாகத் தமிழில் கொண்டு வந்தால் ஒரு முழுச் சித்திரம் கிடைக்கும். அதன் வழியாக மூல பவுத்தத்தை எவரும் தரிசிச்கலாம், கூடவே அம்பேத்கரின் பவுத்தம் வழியான ஞான மார்க்கத்தைக் கண்டு வியக்கலாம்.

1950 இல் மகாபோதி சங்கத்தின் பத்திரிகையிலே “புத்தரும் அவரது மதத்தின் எதிர்காலமும்” என்றொரு கட்டுரை எழுதினார் அம்பேத்கர். அதே ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற புத்த மாநாடு ஒன்றில் பங்கு கொண்டு “இந்தியாவில் புத்திசத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்பது பற்றி உரையாற்றினார். “நான் ஏன் புத்திசத்தை விரும்புகிறேன்? இன்றைய சூழல்களில் உலகிற்கு அது எவ்வளவு பயனுள்ளது?” என்பது பற்றி லண்டன் பி.பி.சி. நிறுவனத்திற்கு ஓர் உரை நல்கினார் 1956 இல். இதே காலத்தில்தான் “புத்தரும் கார்ல் மார்க்சும்” எனும் நூல் எழுதினார்.இதே காலத்தில் தான் “புத்தரும் அவரது தம்மமும்” என்கிற மகத்தான படைப்பை எழுதி முடித்தார்.

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பின் 22 ஆம் தொகுதியாகத் தமிழில் இந்தப் படைப்பு வெளிவந்துள்ளது. அதில் உள்ள விபரத்தின்படி அது முதன் முதலாக 1957 இல் அதாவது அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு வெளிவந்ததாகத் தெரிகிறது. ஆனால், இது அவரது காலத்திலேயே தனிப்பட்ட சுற்றுக்காகவும், விவாதத்திற்காகவும் அச்சுவாகனம் ஏறியது என்கிறார் ஆய்வாளர் சந்திர பரிள். அப்போதே இதிலுள்ள சில கணிப்புகள் புத்த பிக்குகளின் கோபத்தைக் கிளறும் என்பது அம்பேத்கரிடம் சுட்டிக்காட்டப்பட்டபோது அவர் கூறினாராம் “இதற்காகப் புத்த பிக்குகள் என்னைத் திட்டினால் கவலைப்பட வேண்டாம். எவ்வளவு காலத்திற்கு உண்மையை மூடி மறைக்க முடியும்?”

அம்பேத்கர் என்ன எதிர்பார்த்தாரோ அது விரைவில் நடந்தது. மாகாபோதி சங்கப் பத்திரிகையில் பிக்கு ஜீவகா இந்த நூலுக்கு விமர்சனம் எழுதினார். அதில் கர்மா கோட்பாட்டை மறுத்ததற்காகவும், அகிம்சை கோட்பாட்டிற்குப் புதிய அர்த்தம் தந்ததற்காகவும், தம்மம் (தருமம்) எனப்பட்டதைத் தனிமனித விடுதலையாகக் கருதாமல் சமூக ஒழுங்கமைப்பாகக் கருதியதற்காகவும், புத்த பிக்குகளுக்கு தீவிர சமூக சேவையை வலியுறுத்தியதற்காகவும் அம்பேத்கர் கண்டிக்கப்பட்டார். முடிவில் “புத்தகத்தின் தலைப்பை புத்தரும் அவரது தம்மமும் என வைத்ததற்குப் பதிலாக அம்பேத்கரும் அவரது தம்மமும் என வைத்திருக்க வேண்டும்” என்று கிண்டலாகவும் சொல்லியிருந்தார்.

இந்த விமர்சனம் அம்பேத்கர் காலமான பிறகு வெளிவந்தது. இதனால் இதற்கு தக்க பதிலடி கொடுக்க அண்ணலால் முடியாமல் போனது. ஆனால், இந்த விமர்சனத்தின் மூலம், மூல பவுத்தத்தை அம்பேத்கர் எவ்வளவு கச்சிதமாக உள்வாங்கி, அதைத் தனது நூலில் வெளிப்படுத்தியிருந்தார் என்பது நமக்குப் புரிந்து போகிறது.

உண்மையில் தனது நூலின் முன்னுரையில் பவுத்தத்தைப் புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்களை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். குறிப்பாக நான்கு வி­யங்களை விவாதத்திற்காகத் தான் முறைப்படுத்தியிருப்பதாகக் கூறியிருந்தார். அவை :

1. புத்தர் துறவு வாழ்வை மேற்கொண்டதற்கான காரணம் 2. துக்கம் பற்றிய அந்த நான்கு கோட்பாடுகள் புத்தர் போதித்தவையா அல்லது பிற்காலச் சேர்க்கையா? 3. ஆன்மா, கர்மம், மறுபிறப்பு பற்றிய சிந்தனைகள். ஆன்மாவை மறுத்துவிட்டு கர்மம் - மறுபிறப்பு பற்றி மட்டும் பேசிய அந்த விசித்திர முரண் 4. பிக்கு எனப்பட்டவர் முழுநிறைத் தனிமனிதனாக இருக்க வேண்டுமா அல்லது சமூகச் சேவகராகச் செயல்பட வேண்டுமா?

இந்த முன்னுரையைப் படித்தவுடனேயே நமக்குள் ஒரு பரபரப்பு ஏற்பட்டு விடுகிறது. புத்தரின் வாழ்வு மற்றும் போதனைகள் பற்றி நமது பொதுப் புத்தியில் ஏற்றப்பட்டுள்ள கருத்தியலை இது கேள்விக்குள்ளாக்கி விடுகிறது. மிகுந்த ஆர்வத்தோடு நூலைப் படிக்க முடிகிறது.

பிணம், நோயாளி, முதியவர் ஆகியோரைப் பார்த்த பிறகுதான் புத்தர் துறவுவாழ்வை மேற்கொள்ள முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. தனது 29 ஆவது வயதில் அப்படிச் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வளவு காலம் வரை அந்த மூன்று காட்சிகளையும் அவர் காணாமலா இருந்திருப்பார்? அது அதிசயக் காட்சிகளாகி, அதனாலேயா துறவியாகி இருப்பார்? இது அறிவுக்குப் பொருந்தவில்லை. உண்மைக் காரணத்தைத் தேடி அம்பேத்கர் பவுத்தத்தின் மூல நூல்களுக்குள் பயணித்தார். “தமிழ்நாட்டில் பவுத்த மறுமலர்ச்சி இயக்கத் தந்தை பண்டித அயோத்திதாசரின் உற்ற நண்பர் பேராசிரியர் இலட்சமி நரசுவின் பவுத்தம் பற்றிய நூல்கள் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் இந்த நூலை எழுதத் தூண்டுவதாக அமைந்தன” என்று தமிழ்நூலின் நிர்வாகப் பதிப்பாசிரியர் எஸ்.பெருமாள் கூறுகிறார். ஆக, பவுத்தம் பற்றிய புதிய ஆய்வுகளையும் கணக்கில் கொண்டு அவர் உண்மையைத் தேடினார்.

சாக்கியர்களின் நாட்டு எல்லையில் கோலியர்களின் நாடு இருந்தது. இரண்டுக்கும் இடையே ரோகினி ஆறு ஓடியது. அங்கு நதிநீர்ப் பிரச்சினை இருந்தது. அதனால் இரு தேசங்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. நதிநீர்ப் பிரச்சினை இந்தத் துணைக்கண்டத்தில் இன்று நேற்று உருவானதல்ல. அது ஆதிகாலந் தொட்டு நடந்தது. இந்தப் பிரச்சினையில் சாக்கியர்களின் சங்கம் கூடிப், போர் தொடுக்க முடிவு செய்தது. இதன் ஓர் உறுப்பினராகிய சித்தார்த்தர் (புத்தரின் இயற்பெயர்) அந்த முடிவை எதிர்த்தார். “தருமம் என்பது நான் அறிந்த வரையில் பகைமையை பகைமையால் அழிக்க முடியாது என்று அறிவது, அன்பால் மட்டுமே அதை வெல்ல முடியும் என்று உணர்வது” என்று அந்தச்சபையில் பேசினார். கூட்டு முடிவை எதிர்த்த ஒரு தனிமனிதர் என்ற வகையில் அவர் அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அதைக் குடும்பத்தை விட்டு வெளியேறுகிற பரிவ்ராஜகனாக வெளியேறுகிற பாணியில் நடைமுறைப்படுத்தினார். இது அம்பேத்கர் காட்டுகிற உண்மைச் சித்திரம்.

நதிநீர்ப் பிரச்சினையால் இப்படியயாரு இக்கட்டான நிலை ஏற்படாதிருந்திருந்தால் அவர் வீட்டைவிட்டு வெளியேறியிருக்க மாட்டார். மனித வாழ்வு பற்றிய மெய்மைகளை அறிவதுதான் அவரது நோக்கம் என்றால் அதற்காகத் துறவு வாழ்வை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இல்லற வாழ்வில் இருந்துகொண்டே அதைச் செய்திருக்கலாம். வி­யம் என்னவென்றால், சமூக வாழ்வில் ஏற்பட்ட சிக்கலும், தனிமனித சிந்தனையில் ஏற்பட்ட அறிவுத் தாகமும் சேர்ந்து அவரை வீட்டைவிட்டு வெளியேற வைத்தது என முடிவு கட்டுவதே பொருத்தமாகப் படுகிறது. இதற்கு மரணம், நோய், மூப்பு போன்ற தவிர்க்க முடியாத துக்கங்கள் பற்றிய சிந்தனையும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். இது பின்னாளில் புராணமயமாகக் காட்சிப் படுத்தப்பட்டது போலும். புத்தர் மறைந்து பல நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட அஸ்வகோ­ரின் “புத்த சரிதம்” நூலில் இப்படித்தான் அது சித்தரிக்கப்பட்டுள்ளது.

துக்கம் உண்டு, துக்கத்திற்குக் காரணம் உண்டு, துக்கத்தைத் தொலைக்க முடியும், அதற்கான மார்க்கமும் உண்டு - என்பவை துக்கம் பற்றிய புத்தரின் நான்கு கோட்பாடுகள். பிற்காலத்து பவுத்தர்கள் முதல் இரண்டுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதையயாரு விரக்தி சித்தாந்தமாக ஆக்கிவிட்டார்கள். இப்போதும்கூட “ஆசையைத் துறக்கச் சொன்னார் புத்தர்” என்பதே அவரது தத்துவம் பற்றிய சாரமாக வெகு மக்கள் புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு கோட்பாடுகள் தனிமனித- சமூக ஒழுக்க முறைமை பற்றிப் பேசுவது. அதை நாசூக்காகப் புறந்தள்ளினார்கள். அம்பேத்கரோ அதுவே புத்த தருமத்தின் அஸ்திவாரம் என்றார்.

“என் தம்மம் துன்பத்தின் இருப்பை ஒப்புக் கொள்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அதே அளவில் துன்பத்தை நீக்குவதற்கும் அது முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். என் தம்மம், நம்பிக்கை, இலட்சியம் இரண்டையுமே தன்னில் கொண்டது” என்று புத்தர் தன் முதல் விளக்கப் பேருரையை முடித்தார் என்கிறார் அம்பேத்கர்.

இந்தத் துணைக் கண்டத்தில் ஆன்மா மறுப்பை மிக வலுவாக எடுத்துச் சொன்னவர் புத்தர். “அவர் ஆன்மா என்று ஒன்று இல்லை என்று மிகவும் உறுதியான வார்த்தைகளில் மஹாலிக்குக் கூறியிருக்கிறார். எனவேதான் ஆன்மா பற்றிய அவருடைய கோட்பாடு அநாத்மா - அதாவது ஆன்மா அற்றது என அழைக்கப்படுகிறது” என்று மிகச் சரியாகக் கூறியிருக்கிறார் அம்பேத்கர். மரணத்திற்குப் பிறகும் உணர்வு இருக்குமேயானால் அது மரணமாகாது எனும் எளிய உண்மையை மிக வலிமையாகச் சொன்னார் புத்தர். அதேநேரத்தில் தொடரும் கர்மா, மறுபிறப்பு எனும் சொல்லாடல்களும் அவரிடம் காணப்பட்டன. இது முரண் அல்லவா?

இல்லை என்று விவரித்திருக்கிறார் அம்பேத்கர். சொல்லாடலின் ஒற்றுமைதான் இதைப் பிராமணியக் கோட்பாடு போலக் காட்டுகிறதே தவிர, புத்தரின் ஆன்மா மறுப்பும் இதர சிந்தனைகளும் இதன் அர்தத்தைத் தெளிவாக வேறுபடுத்திக்காட்டுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். “கடந்த பிறவியின் கர்மம் பெறப்படுகிறது எனக் கூறுவதற்குப் பதிலாக கடந்த பிறவியின் கர்மம் வாரிசுரிமையாகச் சுவீகரிக்கப்படுகிறது என்று கூறுவது உசிதமாயிருக்கும்” என்று சரியாகக் குறிப்பிடுகிறார் அம்பேத்கர். அதாவது புத்தர் குறிப்பிட்டது ஆன்மா கூடுவிட்டுக் கூடு பாய்கிற மறுபிறப்பு அல்ல, மாறாகக் காரண காரியத் தொடர்பால் புதிய தலைமுறையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு. புத்தர் மறைந்து ஒரு சில நூற்றாண்டுகளிலேயே எழுதப்பட்ட அருமையான படைப்பு நாகசேனரின் “மிலிந்ர பங்கம்”. அதிலே எதுவும் இடம் மாறாமல்தான் மறுபிறப்பு நடக்கிறது என்றும், அதற்கு உதாரணமாக தீபத்திலிருந்து ஏற்றப்படும் தீபத்தைச் சொல்லியிருக்கிறார்.

விடுதலை, முக்தி எனும் சொல்லாடல்களை ஆன்ம விடுதலை, தனிமனித முக்தி எனும் அர்த்தத்திலேயே பயன்படுத்தியது பிராமணியம். மதத்தின் நோக்கம் அதுவாகவே இருக்க முடியும் என்று சிறிதும் சந்தேகமின்றிச் சொல்லி வந்தது. வருணாசிரமம் எனும் ஒருவகை அடிமைச் சமுதாயத்தில் ஒடுக்கும் வர்க்கங்களாக இருந்த பிராமணர் - ­த்திரியர்களுக்கு இதுவே போதுமானதாக இருந்தது. குற்றவுணர்விலிருந்து தனிமனிதனை விடுவிக்கும் உத்தியாகவும் இது இருந்தது. ஆனால், ஒடுக்கப்பட்ட வருணங்களுக்கு இது போதுமானதாக இல்லை. அது சமூக விடுதலையையும், சக மனிதர்களின் நல்வாழ்வையும் கோரியது. இதற்கான மார்க்கமாகவே பிக்குகளை, அவர்களின் சங்கத்தைத் தயார்படுத்தினார் புத்தர். பிக்குகளுக்கும் புத்தருக்கும் இடையில் நடந்த ஓர் அருமையான உரையாடலை அம்பேத்கர் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

“புத்தர் : ஓ! பிக்குகளே! நான் உலகத்துடன் சச்சரவிடுபவன் அல்ல. ஆனால், உலகம் என்னுடன் சச்சரவிடுகிறது.

பிக்குகள் : ஐயன்மீர்! நம்மை நாம் போராளிகள் என்று அழைத்துக்கொள்கிறோம். எந்த வகையில் நாம் போராளிகளாக உள்ளோம்?

புத்தர் : ஓ! பிக்குகளே! நாம் போர் தொடுக்கிறோம். ஆகவே நாம் போராளிகள் என்று அழைக்கப்படுகிறோம்.

பிக்குகள் : ஐயன்மீர்! நாம் எங்கு, எதற்காகப் போர் தொடுக்கிறோம்?

புத்தர் : உயர்ந்த நன்னெறிகளுக்காக, உன்னத நன் முயற்சிகளுக்காக, தெளிந்த நல்லறிவிற்காக நாம் போர் தொடுக்கிறோம். ஆகவேதான் போராளிகள் எனப்படுகிறோம். எங்கெல்லாம் நன்னெறி அபாயத்தில் உள்ளதோ அங்கெல்லாம் போராடுங்கள், வாயடைத்து நிற்காதீர்கள்”.

துறவிகளைப் போராளிகள் என அழைத்த போதகர் புத்தரைத் தவிர வேறு யாரும் இல்லை. வருணாசிரமத்திற்கு எதிராகக் காவி உடையில் கலகக்காரர்களை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது. இதைப் புரிந்து கொண்டுதான் பவுத்த பிக்குகளுக்குச் சமூக சேவையைப் புத்தர் வலியுறுத்தினார் என்று சரியாகவே சொன்னார் அம்பேத்கர். “இல்லறத்தாருக்குத் தொண்டு புரியவே ஒரு பிக்கு இல்லறத்தைத் துறக்கிறார்” என்று அழகாகச் சொன்னார். இது சுயவிடுதலையில், அந்தச் சுயநலத்தில் மூழ்கிப் போயிருந்த பிக்கு ஜீவகா போன்றோருக்குப் பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் இல்லை.

புத்தர் கூறிய அஹிம்சா தத்துவத்தைக் கொல்லாமையாகவும், புலால் உண்ணாமையாகவும் மிகவும் சுருக்கிவிட்டார்கள் பிற்காலத்திய பவுத்தர்கள். ஆனால் புத்தரே மாமிச உணவு உண்டு வந்தார். அவர் கடைசியாகச் சாப்பிட்டது சூகரமத்துவம். இதன் அர்த்தம் இளம் பன்றிக்கறி என்று தர்மானந்த கோசாம்பி உள்ளிட்ட அறிஞர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இந்த உண்மையைச் சொல்வதில் பிற்காலத்திய பவுத்தர்கள் மிகவும் கூச்சப்பட்டார்கள். வி­யம் என்னவென்றால் மாமிச உணவு வி­யத்தில் புத்தர் நீக்குப்போக்காக இருந்த காரணத்தால்தான் தனது மார்க்கத்தில் சூத்திரர்களையும், பஞ்சமர்களையும் அவரால் ஈர்க்க முடிந்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் மகத்தான தலைவர் என்ற முறையில் அம்பேத்கரும் அஹிம்சா பற்றிய சரியான புரிதலைத் தர வேண்டியிருந்தது.

“புத்தர் கூறியுள்ளார் : ‘எதையும் நீங்கள் கொல்ல விரும்பாவண்ணம் அனைத்தையும் நேசியுங்கள்’. அஹிம்சைக் கொள்கையை விவரிக்கின்ற உறுதியான உடன்பாட்டு வழி இது. இதிலிருந்து அஹிம்சைக் கொள்கை ‘கொல்லாதே’ எனக் கூறாமல் ‘அனைத்தையும் நேசி’ எனக் கூறுவதாகவே தோன்றுகிறது. கொல்ல விரும்புதலுக்கும் கொல்லுதலின் தேவைக்கும் இடையிலான வேறுபாட்டையே புத்தர் குறித்தார் என்பது மிகவும் தெளிவாகிறது” என்று அம்பேத்கர் புத்தரது அஹிம்சா கோட்பாட்டின் சாரத்தைப் பிரமாதமாக உள்வாங்கியிருந்தார். தத்துவார்த்த - வரலாற்று நோக்கில் அதை இப்படியாகக் கச்சிதமாக வரையறுத்தார். “பிராமணியம் தன்னில் கொல்லுதலில் விருப்பத்தைக் கொண்டுள்ளது. சமணம் தன்னில் எப்போதும் கொல்லாமையில் விருப்பத்தைக் கொண்டுள்ளது. புத்தரின் அஹிம்சை முற்றிலும் நடுநிலைப் பாதையைக் கொண்டதாய் உள்ளது”.

அம்பேத்கரை வெறும் சட்ட மேதையாய்ச் சுருக்கிக் காட்டுகிற வேலை இன்றளவும் நடக்கிறது. அவர் அதையயல்லாம் தாண்டி உயர்ந்து நின்றவர். அவர் தேர்ந்த சரித்திர ஞானி, ஆழ்ந்த தத்துவ ஞானி. இந்த ஒரு நூலைப் படித்தாலே இந்தக் கூற்றின் உண்மையை எவரும் உணரலாம். புத்தரைப் பற்றியும் அம்பேத்கரைப் பற்றியும் ஒருங்கே அறிய வேண்டும் என்றால் அவசியம் இதைப் படித்தாக வேண்டும். அந்த வகையில், பிக்கு ஜீவகா கேலியாகக் கூறியிருந்தாலும் இது புத்தரும் அவரது தம்மமும் கூறுவது, இது அம்பேத்கரும் அவரது தம்மமும் கூறுவது. அந்த அளவுக்கு இருவரும் ஒன்றிப் போனார்கள்.

அம்பேத்கர் மேலும் வாழ்ந்திருந்தால் மெய்யான பவுத்தத்தை மீட்டுத் தந்ததோடு அதை வெகுமக்கள் மத்தியில் பரவலாக்கியிருப்பார். அந்த பாக்கியம் இந்த நாட்டு மக்களுக்கு இல்லாமல் போனது. அதனால்தான் “புத்தம் சரணம்” என்று அதை முற்றிலுமாகத் திரித்துக் கூறுகிற ஒரு நூலை கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிட முடிந்துள்ளது. இத்தகைய மோசடிகளை முறியடிக்க அம்பேத்கரின் நூலைத் தமிழர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு முற்போக்காளர்களின் கடமையாகும்.

உதவிய நூல்கள் :

1. புத்தரும் அவரது தம்மமும் - பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு : தொகுதி 22.

2.பகவான் புத்தர் - தர்மானந்தா கோஸாம்பி

3.Social and political Ideas of B.R.Ambedkar - Chandra Bharill

4.புத்தர் : தருமமும் சங்கமும் - அருணன்

5.Life of Buddha - Asvaghosha - Translated by Samuel Beal

Pin It