துக்ளக்கில் தொடர்ந்து எழுதும் பழ.கருப்பையாவின் கட்டுரைகளைப் படிக்கின்றீர்களா?

- வீ.பாபு, மேட்டுப்பாளையம்

அவ்வப்போது படிக்கிறேன். அவர் பழ.கருப்பையாவாக இல்லாமல், ‘ பல ’ கருப்பையாவாக இருக்கிறார். தமிழ்ப் பற்றாளராக உள்ளார், தமிழின எதிரி சோவின் ஏட்டில் தொடர்ந்து எழுதுகிறார். எப்போதும் திராவிட இயக்கத்தின் மீதான தன் எரிச்சலைக் கொட்டுகிறார். அதே நேரம், ஏதாவது ஒரு திராவிடக் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். ஊரிலுள்ள ஊழலையயல்லாம் எதிர்க்கப் புறப்பட்டவர் போல் எழுதுகிறார். ஆனால் போயஸ் தோட்ட ஊழல் ராணிக்கு ஊதுகுழலாக இருக்கிறார். முற்போக்கான கருத்துகளை மேடைகளில் பேசுகிறார், தன் குடும்பத்தில் சாதி மறுப்புத் திருமணம் நடந்தால் அதனை எதிர்க்கிறார், புறக்கணிக்கிறார். விடுங்கள், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பல கருப்பையாக்கள் காலந்தோறும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

குஷ்பு தி.மு.கவில் இணைந்திருப்பது பற்றி...?

- இ.புவனா, சென்னை - 33

அரசியல் எல்லோருக்கும் பொதுவானது, திரைத்துறையிலிருந்து ஏராளமானவர்கள் ஏற்கனவே அரசியலுக்கு வந்துள்ளனர். குஷ்புவை மட்டும் தனித்துப் பார்க்க வேண்டிய தேவை இல்லை. பெண்கள் அரசிய லுக்கு வருவது வரவேற்கத் தக்கதுதானே !

திராவிட மாயை என்று ஒரு புதிய புத்தகம் வந்துள்ளதே, படித்தீர்களா ?

- ராஜராஜன், பட்டுக்கோட்டை

படித்தேன். ஆர். எஸ்.எஸ் ஆதரவாளரான ஒரு பச்சைப் பார்ப்பனர்அந்த நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் பொய்கள் கூடப் புதிதாய் இல்லை. திராவிடம், திராவிட இயக்கம் போன்ற சொற்கள், பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன ஆதரவாளர்களுக்கும் எட்டிக் காயாய்க் கசக்கத்தான் செய்யும்.

பார்வதி அம்மாள் மீண்டும் வல்வெட்டித்துறைக்கே சென்றுவிட்டாரே ?

- ஆ. இராமலிங்கம், வேலூர்

சென்று விட்டார் என்பதை விட, அனுப்பப்பட்டு விட்டார் என்பதே சரி. அம்மா உடல் நலம் பெறாவிட்டால் கூடக் குற்றமில்லை, கலைஞருக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாயிருக்கும் தலைவர்கள் சிலரின் மறைமுக ஏற்பாடுதான் அது.

இங்கே நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய நாஞ்சில் சம்பத், “ கருணாநிதி டெல்லி போய் வந்தார் என்கிறார்கள். அவர் எங்கே போய் வந்தார்? அவரைத் தூக்கிக் கொண்டு போனார்கள், தூக்கிக் கொண்டு வந்தார்கள். அவ்வளவுதான் ” என்று பேசியிருக்கிறார். அது குறித்து...?

இரா. இளங்கோவன் , மைலாப்பூர், சென்னை 4

நண்பர் நாஞ்சில் சம்பத்துக்கும் ஒருநாள் வயதாகும்.

எம்.ஆர். ராதாவையும், எஸ்.வி. சேகரையும் கலைஞர் ஒப்பிட்டுப் பேசியுள்ளாரே, அதனை நீங்கள் ஏற்கிறீர்களா?

- மா. வேலுச்சாமி, விருத்தாசலம்.

ஏற்கவில்லை. நடிகவேள் ராதா, பெரியாரின் போர்வாள். எஸ்.வி. சேகர், சங்கராச்சாரியின் சாமரம்.

இணையதளத்தில் உங்களின் மீது கடுமையான விமர்சனங்கள் வெளியாகி உள்ளனவே?

- தேன் மொழியான், சென்னை - 17

Idiot, Nonsense என்றெல்லாம் சிலர் எழுதி உள்ளனர். இவை விமர்சனங்களல்ல. வெறும் வசைகள். இணையதளங்களில் ஒளிந்து கொண்டு ‘ நிழல் யுத்தம் ’ நடத்துபவர்களைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. எனினும் அது பற்றிய ஒரு சில செய்திகளை நம் தோழர்கள் அறிந்திருப்பீர்கள். ஒருவரே, பல பெயர்களில் மின்னஞ்சல் முகவரிகளை வைத்துக்கொண்டு, பல கடிதங்களை அனுப்ப முடியும். அவர்கள் யார், எங்கிருந்து எழுதுகின்றார்கள் என்பதையயல்லாம் படிக்கின்றவர்கள் அறிந்து கொள்ள முடியாது. எனவே நம்மைப் பலரும் எதிர்க்கின்றனர் என்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவதே அவர்களின் நோக்கம். இந்த அவதூறுகளுக்கெல்லாம் அச்சப்பட்டால், பொதுவாழ்வில் நாம் இயங்கவே முடியாது. அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, நம் பணிகளை நாம் தொடர்வோம் !

Pin It