நடக்க இருப்பது உள்ளாட்சி இடைத்தேர்தலா, தமிழகப் பொதுத் தேர்தலா என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்குப் பீதியைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

தேர்தலில் வேட்புமனு கொடுப்ப தற்கு நான்கு நாள்கள் கெடு வைத்து, தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளி யிட்ட உடனேயே, அரசுக்கும் ஆணையத் திற்கும் உள்ள நெருக்கத்தைப் புரிந்து கொண்ட கலைஞர் தி.மு.க. தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி-.மு.க., பா-.ம.க., தே.மு.தி.க., இவைகளும் புறக்கணித்துவிட்டன. சிறுத்தைகளைத் தவிர, ஏனையை கட்சிகள் பா.ஜ.க.வுக்கு நேசக்கரம் நீட்டி ஆதரவு தெரிவித்திருக் கிறார்கள். பாவம், காங்கிரசுக்கு விழி பிதுங்கி தலை சுற்றிக் கொண்டிருக்கிறது.

களத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க. உள்பட முக்கிய கட்சிகள் இல்லை என்றவுடன், பிள்ளையில்லா வீட்டில் துள்ளி விளையாண்ட கிழவனைப்போல, பா.ஜ.க. துள்ளி எழுந்து வந்துவிட்டது தேர்தலைச் சந்திக்க.

கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களுக்கு வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிடத் தயாராகிவிட்டார்கள்.

உண்மையைச் சொன்னால் இடைத் தேர்தல் என்றாலே ஆளும் கட்சிக்குத் தான் பெரும்பாலும் சாதகமாக இருக்கும். அதிலும் இது உள்ளாட்சி இடைத் தேர்தல்.

ஏதோ பொதுத் தேர்தல் போல ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் என்று தூத்துக்குடி, நெல்லை, கோவை என்று அறிவித்தது அ.தி.மு.க. அவர் போவதற்கு முன்பே நெல்லை மாநகராட்சி அ.திமு.க. மேயர் வேட்பாளர் புவனேஸ்வரி, போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அங்கு வேட்புமனு கொடுத்தவர்கள் 13 பேர்கள். வரிசையாக 10 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எஞ்சி இருந்த இருவரில் ஒருவரான பா.ஜ.க. வேட்பாளர் வேட்புமனுவைத் திரும்ப பெற்றுக்கொண்டதாக அறிவித்து விட்டு, மிஞ்சியிருந்த அ.தி.மு.க. புவனேஸ்வரி வெற்றி என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

அதுபோலவே ஆவடி நகராட்சித் தேர்தலில் 33ஆம் வட்டத்திற்கு 11 பேர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் இரண்டு சுயேச்சை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், பா.ஜ.க. உட்பட 7 மனுக்கள் திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும் சொல்லி, அ.தி.மு.க. வேட்பாளர் உமாமகேசுவரி வெற்றி வேட்பாளர் ஆக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேடிக்கை என்னவென்றால், நெல்லை - ஆவடி பா.ஜ.க. வேட்பாளர்கள் இருவரும் இப்பொழுது அ.தி.மு.க.வில் சங்கமம் ஆகிவிட்டார்கள்.

பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராசன், பா.ஜ.க. வேட்பாளர் களை அ.தி.மு.க. மிரட்டுவதாகக் குற்றம் சுமத்துகிறார். நெல்லைத் துணைமேயரை நோக்கி அவரின் விரல் நீள்கிறது.

அ.தி.மு.க.வின் பணபலமும், பண பேரமும், மிரட்டலும்தான் காரணம் என்ற செய்திகள் நாளிதழ்களில் வருகின்றன.

அதுபோல விழுப்புரம் மாவட்ட மேல்மலையனூர் பா.ஜ.க. வேட்பாளர் கடத்தப்பட்டார் என்கிறார் தமிழிசை. கணவரைக் காணவில்லை. அ.தி.மு.க. வினர் மிரட்டினார்கள் என்கிறார் பிரபாகரன் மனைவி.அதேநேரம் ஆளும் கட்சியின் ஆதரவுத் தொலைக்காட்சியில் பிரபாகரன் தன்னை யாரும் கடத்த வில்லை என்று பேட்டி கொடுக்கிறார். ஆனால் அவர் எதிர்க்கட்சி வேட்பாளர்.

பிரபாகரன் கடத்தப்படவில்லை என்றும், அரசியல் கட்சித் தலைவர்கள் பொறுப்புடன் பேசவேண்டும் என்றும் மாநிலத் தலைமை ஆணையம் கூறுகிறது. இது தேர்தல் ஆணையமா?அ.தி.மு.க. ஆணையமா?

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய 2ஆம் வட்ட உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு. க.வை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி வேட்புமனு அளித்து அது ஏற்கப்பட்டது முதலில்.

அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் வேட்பா ளர்கள் பெயர்கள் முதல்நாள் ஏற்கப் பட்ட போதிலும், மறுநாள் மார்க்சிஸ்ட் வேட்பு மனு தள்ளுபடியாகிவிட்டதாகச் சொன்னார் தேர்தலை நடத்தும் வட்டார அலுவலர்.

மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணனின் போராட்டத்தின் விளைவாக இன்று அந்த தேர்தல் அலுவலர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இது இப்படி என்றால், புதுக்கோட் டையில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளரை வேட்பு மனு செய்ய விடாமல் ஆளும் கட்சியினர் தடுத்து அராஜகம் செய்துள்ளதாக தீக்கதிர் சொல்கிறது.

நாளிதழ்கள், காட்சி ஊடகங்களில் எல்லாம் ஆளும் கட்சியின் பணம், பலம், பேரம், அதிகாரம், அதிகார துஷ்பிர யோகம் இவைதான் இந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் முன்னிலை வகிப்ப தாகக் கூறகின்றன.

எப்படிப் பார்த்தாலும் இத்தேர்தலில் அ.தி.மு.க.தான் வெற்றிபெறப் போகிறது. சாதாரணமாகப் பார்க்க வேண்டிய தேர்தலை, சர்வ வல்லமையோடு பார்க்க வேண்டிய அவசியம் அ.தி.மு.க.வுக்கு ஏன் ஏற்பட்டது என்பதுதான் விளங்க வில்லை.